"சனாதனம் குறித்துப் பேசும் நபர்கள் முதலில் குடும்பத்தைத் திருத்த வேண்டும். வீட்டுக்குள் பூஜை நடக்கிறது. அப்புறம் எதற்குச் சனாதனம் பற்றிப் பேசுகிறார்கள்?" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
தன்னுடைய அறக்கட்டளை மூலம் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "மழை வெள்ளப் பாதிப்பை தி.மு.க அரசு சரியாகக் கையாளவில்லை. எங்குச் சென்றாலும் போட்டோ சூட் நடத்துகிறது. தி.மு.க அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது. தற்போது பெய்தது மிகவும் சாதாரண மழை தான். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இதைவிட அதிகப்படியான மழை கொட்டி தீர்த்தது.
200 தொகுதிகளும் ஜெயித்து விடுவோம் என தி.மு.க சொல்வதுதான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என்று அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தி.மு.க அரசு இழந்துள்ளது.
ஆட்சி சுகத்தை அனுபவித்துவிட்டதால் குடும்பத்தில் இருப்பவரை துணை முதல்வர் ஆக்கிவிட்டு, குடும்பமே சேர்ந்து இந்த ஆட்சியை நடத்தி வருகின்றனர். மருமகன் சபரீசன் ஒருபுறம் அதிகாரம் மையமாகச் செயல்படுகிறார்.
சினிமா துறையிலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்தியைப் பார்ப்பதில்லை என்று பேசுகிறார். இன்று உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியிட முடியாது. மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறார்கள்.
ஆனால், தமிழக மக்கள் தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தயாராகி விட்டார்கள். நாங்கள் போட்ட பிச்சையில்தான் பட்டியல் இன மக்கள் நீதிபதியாக இருக்கிறார்கள் என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். மற்றொரு அமைச்சர் ஓசியில் பஸ் போகிறது என்று சொல்கிறார். மக்களைத் தரக்குறைவாக நடத்துகிறார்கள். மன்னர் பரம்பரையை நாம் ஒழித்து விட்டோம் கலைஞர் பரம்பரையை இன்னும் ஒழிக்க முடியவில்லை. தாத்தா முதலமைச்சர் அப்பா முதலமைச்சர், பேரன் முதலமைச்சர், பெரியப்பா மத்திய அரசின் முக்கிய அமைச்சர், தி.மு.க குடும்பத்தினரின் அதிகார மையம்தான் நடக்கிறது.
சனாதனம் குறித்துப் பேசும் நபர்கள் முதலில் குடும்பத்தைத் திருத்த வேண்டும். வீட்டுக்குள் பூஜை நடக்கிறது. அப்புறம் எதற்குச் சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள். விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. ஆதவ் அர்ஜுனா அங்குப் பேசியுள்ளார். திருமாவளவனுக்கு யாரும் நெருக்கடியைக் கொடுக்க முடியாது. மற்றவர்களுக்காக அடக்கி வாசிக்கிறார். நான் சவால் விடுகிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க தனித்து நிற்கத் தயாரா?" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/VaigainathiNaagarigam
from Vikatan Latest news
0 Comments