Ticker

6/recent/ticker-posts

Ad Code

தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்க இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ், இதற்கு முன்பு 2014ம் ஆண்டிலிருந்து 2019ம் வரை முதல்வராக இருந்தார். அதன் பிறகு 2019ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட இழுபறியின் போது திடீரென அஜித்ப வாருடன் சேர்ந்து அதிகாலையில் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் சில நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தார். அவர் பதவியில் இருந்து விலகும் போது மீண்டும் வருவேன் என்று சொல்லிவிட்டு பதவி விலகினார். ஆனால் 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்து புதிய அரசு பதவியேற்றபோது தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராக பதவியேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிவசேனாவை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார்.

இது தேவேந்திர பட்னாவிஸுக்கு தற்காலிக சறுக்கலாக இருந்தாலும், அந்த சலுக்கலை சவாலாக ஏற்று இன்றைக்கு பா.ஜ.கவை மாநில சட்டமன்ற தேர்தலில் 132 தொகுதியில் வெற்றி பெறச்செய்து யாரும் எட்டிப்பிடிக்க முடியாத உயரத்திற்கு தேவேந்திர பட்னாவிஸ் உயர்ந்திருக்கிறார். நாட்டிற்கு கிடைத்த நாக்பூர் கிஃப்ட் என்று பிரதமர் நரேந்திர மோடியால் புகழப்பட்ட தேவேந்திர பட்னாவிஸுக்கு தேசிய அரசியலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதை பட்னாவிஸ் மறுத்து மாநில அரசியலில் சாதித்து காட்டுவேன் என்று கூறி பா.ஜ.க தேசிய தலைவர் பதவியைக்கூட பட்னாவிஸ் நிராகரித்தார். மக்களவை தேர்தலில் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத காரணத்தால் அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சறுக்கிவிடக் கூடாது என்று கருதி ஆர்.எஸ்.எஸ் துணையோடு இரண்டு ஆண்டுகள் பம்பரமாக சத்தமே இல்லாமல் வேலை செய்து சாதித்து காட்டி இருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்.

யார் இந்த பட்னாவிஸ்?

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள நாக்பூரை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ், தனது இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தேவேந்திர பட்னாவிஸ் தந்தை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர். அவரை இந்திரா காந்தி அரசு சிறையில் அடைத்தது. இதனால் இந்திரா காந்தி பெயரில் இருந்த பள்ளியில் படிக்க மறுத்த தேவேந்திர பட்னாவிஸ் தன்னை வேறு பள்ளிக்கு மாற்றும்படி அடம்பிடித்து வேறு பள்ளியில் சென்று படித்தார். பட்னாவிஸ் தனது தந்தையின் வழியில் தானும் ஆர்.எஸ்.எஸ் பாதையில் பயணிக்க தொடங்கினார். தேவேந்திர பட்னாவிஸ் வளர்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வரும் ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகி அவினாஸ் இது குறித்து கூறுகையில்,''தேவேந்திர பட்னாவிஸ் அவரது தந்தை வழியில் மாணவர் பருவத்திலேயே தன்னை ஆர்.எஸ்.எஸ்.சில் இணைத்துக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் இளைஞர்களை வழிநடத்துவார். வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் தேவேந்திர பட்னாவிஸ் மிகவும் அமைதியான முறையில் அணுகினார்'' என்றார். 22 வயதில் நாக்பூர் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்னாவிஸ் வெறும் 27 வயதில் மிகவும் இளம் வயதில் நாக்பூர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வான தேவேந்திர பட்னாவிஸ் எப்போதும் கட்சிக்காக தன்னை எந்த மட்டத்திலும் தாழ்த்திக்கொள்ள தயாராக இருந்தார். அதன் ஒரு பகுதிதான் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் துணை முதல்வராக பணியாற்றது என்று பட்னாவிஸ் நண்பர் சந்தீப் ஜோஷி தெரிவித்தார்.

அதே ஏக்நாத் ஷிண்டே இப்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பணியாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் சைலேஷ் கூறுகையில், ''பட்னாவிஸ் எளிதில் தொண்டர்களுடன் பழகக்கூடியவர். சட்டம் படித்தபோதிலும் ஒருபோதும் வழக்கறிஞராக பணியாற்றவில்லை. தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்க் பரிவாருக்காக அர்ப்பணித்தார்.

யாரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருந்ததால் பட்னாவிஸ் மீது கட்சி தொண்டர்கள் மத்தியில் மரியாதை ஏற்பட்டது'' என்றார். தேவேந்திர பட்னாவிஸ் 2014ம் ஆண்டு முதல் முறையாக பதவியேற்ற போது மும்பையில் பெரிய அளவில் மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கி வைத்ததோடு மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தையும் வெற்றிகரமாக கையாண்டார். தற்போது மகாராஷ்டிரா 7 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடனில் மூழ்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையில் முதல்வராகி இருக்கும் பட்னாவிஸ் உடனே பெண்களுக்கான நிதியை 2100 ஆக அதிகரிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments