திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் நாம் தமிழர் கட்சிக் கூட்டம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க சட்டம் இருக்கிறது. ஆனால் அதை ஒழுங்குபடுத்துவதுதான் இல்லை. என்னைக் கண்காணிக்கும் காவல் துறைக்கு கொலை மற்றும் கொள்ளைக்கான திட்டமிடலை ஏன் தடுக்க முடியவில்லை. திமுக ஆட்சியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்குப் பாதுகாப்பில்லை. மருத்துவமனையில் மருத்துவருக்குப் பாதுகாப்பில்லை. பள்ளியில் ஆசிரியருக்குப் பாதுகாப்பில்லை. ஒருவேளை சட்டப் பேரவைக்குள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை வந்தால்தான் இந்த அரசு விழித்துக் கொள்ள வாய்ப்புள்ளதா?
மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இந்த மழையில் காணாமல் போய்விட்டது. அதிலிருந்தே அந்த மேம்பாலம் என்ன தரத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த தரத்தில்தான் தமிழக அரசும் உள்ளது. ஒவ்வொரு முறை புயலின்போதும் சென்னை மற்றும் வடமாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. தமிழகத்தை 60 ஆண்டுகளாக ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளும் அதற்கு நிரந்தரத் தீர்வைக் காணாமல், பேரிடர் காலத்தின்போது உணவுப் பொட்டலங்களைக் கொடுப்பதும், முகாம்களில் தங்க வைப்பதுமாகத்தான் உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது அடித்த சேறு துவைத்தால் போய்விடும். ஆனால், திமுக-வால் ஏற்பட்ட தீமையை எதைக் கொண்டு சலவை செய்ய முடியும்.
வடமாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்றால், அவரைப் பார்க்கவே தனிக் கூட்டம் கூடிவிடும். இதனால், அங்கு செல்வதை விஜய் தவிர்த்திருக்கலாம். மீறி அவர் அங்கு சென்று கூட்டம் கூடினால், அவரால் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக விமர்சனம் எழ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளதை பாராட்ட வேண்டும். ஆனால், திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடி வருவதை எப்படி பார்ப்பது?.
மத்திய அரசுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? மாநில அரசுகள் கொடுப்பதுதான் நிதி. எந்த புயலுக்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்கியது கிடையாது. பிறகு எதற்கு மத்திய அரசுக்கு நிதி கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வரியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் தத்தளிக்கும் காலத்தில் நிவாரண நிதி வழங்க மாட்டேன் என்று மத்திய அரசு கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். குஜராத் மீனவனை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தால் இந்திய கடற்படை மீட்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 850 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இதை எதிர்த்து திமுக அரசு ஏன் போராட முன்வருவதில்லை. வெள்ளைக்காரன் காலத்தில் நடைபெற்ற வரிகொடா இயகத்தைப்போல, தற்போது மத்திய அரசுக்கு வரிகொடா இயக்கத்தை ஏன் திமுக முன்னெடுக்கவில்லை. அமலாக்கத்துறையைக் கண்டு திமுக-வுக்கு பயம்" என்றார்.
from Vikatan Latest news
0 Comments