திருவண்ணாமலை மாவட்டத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது `ஃபெஞ்சல்’ புயலின் தாக்கம்.
தொடர் கனமழையின் காரணமாக, `மகா தீபம்’ ஏற்றப்படும் மலையிலும் மண் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று (டிச.1-ம் தேதி) மாலை மண் அரிப்புக் காரணமாக மலையில் இருந்து பெரிய ராட்சதப் பாறை ஒன்று சரிந்திருக்கிறது. மண் இலகுவானதால் பாறைச் சரிவும் வேகமாக இருந்திருக்கிறது. இதனால், பெரும் மண் குவியல் மலை அடிவாரத்திலுள்ள வ.உ.சி நகர் வீடுகளின் மீது சரிந்திருக்கிறது. சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துப் போனது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியது.
அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளவில்லை. ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பதுதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது. வீட்டுக்குள் ராஜ்குமார், அவரின் மனைவி மீனா, இவர்களின் பிள்ளைகள் 2 பேர் மற்றும் உறவினரின் பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்திருக்கின்றனர்.
மழைக் காரணமாக அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள்தான் இருந்திருக்கின்றனர். சம்பவம் நிகழ்வதற்கு முன்பு வரை அவர்களை அக்கம், பக்கத்தினரும் பார்த்திருக்கின்றனர். இது குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்கள்.
ஆனாலும், மழைக் காரணமாக மலையில் தொடர் மண் அரிப்பு ஏற்பட்டதாலும், மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் ஒருப் பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமாக இருந்ததாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (என்.டி.ஆர்.எஃப்) தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவு 1 மணியளவில் திருவண்ணாமலையை வந்தடைந்தனர். முதற்கட்டமாக, மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்தலாமா என்கிற முடிவுக்கு வந்தனர். அதற்காக, மோப்ப நாய்கள் ரூபி, மிர்ஸி ஆகியவையும் வரவழைக்கப்பட்டன. இதனிடையே, அரக்கோணத்தில் இருந்தும் ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக் உள்ளிட்ட மீட்புப் பணிக்கான சில உபகரணங்களையும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால், திருவண்ணாமலை மாவட்டமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
from Vikatan Latest news
0 Comments