மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அப்படி இருக்கும்போது இப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படி இந்த அளவுக்கு அமோக வெற்றி பெற்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தேர்தல் வெற்றிக்கு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டம் தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. அப்படி இருந்தும் அதற்கும் மேலாக பா.ஜ.க கடந்த 5 மாதத்தில் ஆற்றிய பணிகள் தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசிய போது, "மக்களவை தேர்தல் முடிந்தவுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க உடனே வேலையை தொடங்கியது. பா.ஜ.க தனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தலில் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளான 35 இந்து அமைப்புகள் தேர்தலுக்காக தீவிரப்பணியாற்றின." என்றனர.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''சட்டமன்ற தேர்தலை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு எங்களது தொண்டர்களை ஒவ்வொரு வீடாக சென்று பிரசாரம் செய்யும்படி கேட்டுக்கொண்டோம். மக்களவை தேர்தலில் சாதி மற்றும் மதம் மக்களை எவ்வாறு பிரித்தன என்பதை தெரிந்து கொண்டோம்'' என்றார்.
சட்டமன்ற தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும் என்பதை பா.ஜ.க முதலிலேயே புரிந்து கொண்டு அதற்கு தக்கபடி எந்த வித தவறும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று புரிந்து கொண்டு கடினமாக உழைத்ததாக மற்றொரு பா.ஜ.க நிர்வாகி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நல்ல முறையில் கைகொடுத்தது. எனவே பெரிய அளவில் எதையாவது செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கருதியே பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்தது. அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவசர அவசரமாக பெண்களின் வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைத்தது. தேர்தலுக்கு முன்பு பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.7500 சேர்க்கப்பட்டுவிட்டது.
அதோடு மட்டுமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றால் 1500ஐ ரூ.2100 ஆக அதிகரித்து கொடுப்போம் என்று பெண்களிடம் வாக்குறுதி அளித்தனர். 2.25 கோடி பெண்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. இது மகாராஷ்டிராவில் உள்ள பெண்களில் 55 சதவீதம் ஆகும். உத்தரப்பிரதேசத்திற்கு பிறகு மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 48 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. எனவே மகாராஷ்டிரா மாநிலம் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த பா.ஜ.க, அதற்காக போர்க்கால அடிப்படையில் வேலை செய்தது. தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை அதானி நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறது. தேர்தலில் தோற்றுவிட்டால் அத்திட்டம் பாதியில் நின்றுவிடும். பெண்களுக்கு நிதியுதவித் திட்டம் அறிவித்த கையோடு, விவசாயிகளை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது.
அதோடு வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொண்டு விவசாயிகள் விளைவிக்கும் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்க மகாராஷ்டிரா அரசு ஏற்பாடு செய்தது. மகாராஷ்டிராவில் வெங்காயம் பிரதான விவசாயமாக இருக்கிறது. மேலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பல்வேறு சாதி தலைவர்களை சந்தித்து அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததோடு, இந்துத்துவா கொள்கையை முழு வேகத்தில் மக்களிடம் கொண்டு சென்றது. ஒன்றுபட்டு இருந்தால் பாதுகாப்பு என்றும் பிரிந்திருந்தால் ஆபத்து என்றும் மக்களிடம் பிரசாரம் செய்தனர். இதுவும் பெரும்பான்மை இந்துக்களிடம் எடுபட்டது.
ஆனால் மகாவிகாஷ் அகாடி தலித்கள், முஸ்லிம்கள், கும்பி இன மக்களிடம் மட்டும் அதிக கவனம் செலுத்திவிட்டு பெரும்பான்மையான இதர பிற்படுத்தப்பட்ட மக்களை கண்டுகொள்ள தவறிவிட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை பா.ஜ.க தன்வசப்படுத்திக்கொண்டது. விதர்பாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராவார் என்ற நம்பிக்கையில் விதர்பா பகுதி மக்கள் அதிக அளவு பா.ஜ.கவிற்கு வாக்களித்தனர். அதோடு அதிருப்தி வேட்பாளர்களிடம் பேசி அவர்களை திரும்ப பெறச் செய்ததில் பா.ஜ.க வெற்றி பெற்றது. ஆனால் மகாவிகாஷ் அகாடியில் 17 தொகுதியில் அதிருப்தி வேட்பாளர்கள் அல்லது நட்பு ரீதியிலான போட்டி இருந்தது.
இது போன்ற காரணங்களால் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் பா.ஜ.க-விற்கு இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் மேற்கு மகாராஷ்டிராவில் வெற்றி பெற்று அஜித் பவாரும் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டி இருக்கின்றார். வழக்கமாக தேர்தல் முடிவுக்கு பிறகு சரத் பவார் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். முதல் முறையாக இத்தேர்தல் முடிவுகள் சரத் பவாரை வீட்டிற்குள் முடக்கிப்போட்டு இருக்கிறது.
from Vikatan Latest news
0 Comments