Ticker

6/recent/ticker-posts

Ad Code

விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல, நீர்நிலைகளுக்கும் வேட்டு...

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

கடைசியில் அந்தக் கொடுமையான சட்டத்தை அமல்படுத்தியேவிட்டது தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு.

‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கு) சட்ட மசோதா - 2023, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 21 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனால் அவசரம் அவசரமாக அறிமுகம் செய்யப்பட்டு, விவாதமின்றியே நிறைவேற்றப்பட்டது.

“இந்தச் சட்டம், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், நீர்நிலைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும், விவசாயத்தையே அழிக்கும்’’ என்று விவசாயிகளும் சுற்றுச்சூழல் அமைப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், வலுவான கட்சிகள் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு தோள் கொடுக்கவில்லை... வாயை மூடிக் கொண்டுவிட்டன.

அதைவிடக் கொடுமை... சாதாரண சட்டங்களையே சாக்குப்போக்கு சொல்லி நிறுத்தி வைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதியே, இந்தக் கொடூர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, அப்படியே தி.மு.க அரசால் மூடி வைத்திருந்த இந்தப் பூதம், வெளியே வந்துவிட்டது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி அரசிதழில் வெளியிட்டு, பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

‘‘விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுப்போம். விளைநிலங்களை பாதுகாப்போம்’’ என்று கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், கூறியிருந்தது தி.மு.க. ஆனால், ‘குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு’ என்பது மட்டுமல்ல, ‘டாஸ்மாக் சரக்கு விற்பவரின் பேச்சும் அப்படியே’ என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

‘‘விளைநிலங்களை மட்டுமல்ல, சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் விவசாய அடிப்படை ஆதாரமான நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள்... என அனைத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகள் கபளீகரம் செய்வதற்காகவே தி.மு.க அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது’’ என்று கலங்குகிறார்கள் விவசாயிகள்.

தொழில் வளர்ச்சியும் நாட்டுக்கு அவசியம்தான். ஆனால், கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல விவசாயத்தை அழித்துவிட்டு, தொழில்துறையை வளர்க்கத் துடிப்பது, இயற்கைக்கே சமாதிகட்டும் கொடூர முடிவே!

இப்படியெல்லாம் திட்டமிட்டு கோடிக் கோடியாக சேர்த்தாலும், ஒரு கட்டத்தில் உலகின்

எந்தக் கோடிக்கு போய் ஒளிந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் தப்பவே முடியாது. வழக்கம்போல ‘பண அம்னீஷியா’ பாதிப்பால் உங்களைப் போன்றவர்களை மக்கள் மீண்டும் பதவியில் உட்கார வைக்கலாம். ஆனால், இயற்கையின் பெருங்கோபத்துக்கு முன்பாக அப்பாவியும் ஒன்றுதான் அரசனும் ஒன்றுதான்... ஜாக்கிரதை.

- ஆசிரியர்



from Vikatan Latest news

Post a Comment

0 Comments