Ticker

6/recent/ticker-posts

Ad Code

32 `ஸ்ப்ளெண்டர்’ பைக்குகளை திருடிய 3 இளைஞர்கள் - குடியாத்தத்தை அலறவிடும் சட்டவிரோத நெட்வொர்க்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதிகளில் தொடர் பைக் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆந்திர மாநில பகுதியையொட்டி குடியாத்தம் அமைந்திருப்பதால், இருமாநில சாராயக் கும்பலுடனும், செயின் பறிப்புக் கொள்ளையர்களுடனும் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பிருக்கிறது என்கிறார்கள். இந்த பைக் திருட்டு நெட்வொர்க்கிற்குப் பின்னால், உள்ளூர் போலீஸார் சிலரும் மாமூல் வாங்கிக்கொண்டு உடந்தையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் நீள்கின்றன.

2023 பிப்ரவரி மாதம், குடியாத்தம் நகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 பைக் திருடர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பைக் திருடிய 3 இளைஞர்கள்

இவர்கள் `ஊடக’ புள்ளி என்கிற போர்வையில் வலம் வந்து லாவகமாக பைக்குகளைத் திருடி சட்டவிரோத கும்பலுக்கு கைமாற்றியதும், விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தின் மீதான நடவடிக்கைக்குப் பிறகும்கூட பைக் திருட்டுகள் கட்டுப்படுத்தப்படவில்லை.

குடியாத்தம் அரசு மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், குடியாத்தம் தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளிலும் பைக்குகள் திருடுபோவது தொடர்க்கதையாகி வருகின்றன.

இந்த நிலையில், நவம்பர் 25-ம் தேதியான நேற்றைய தினம், குடியாத்தம் நகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட கெங்கையம்மன் கோயில் தரைப்பாலம் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியாக பைக்கில் வந்த 3 இளைஞர்களைப் பிடித்து கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதால் அவர்கள்மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 32 பைக்குகள்

தங்கள் பாணியில் விசாரணையைத் தீவிரப்படுத்திய பிறகே குடியாத்தம் எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (23), அக்ராவரம் அண்ணா நகரைச் சேர்ந்த சந்துரு (19), ஏரிப்பட்டறை வெட்டுவானாத்தான் பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (19) ஆகியோர் என்பதும், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 32 பைக்குகளை போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த பைக்குகள் அனைத்துமே `ஸ்ப்ளெண்டர்’ என்பதுதான் அதிர்ச்சி ரகம். பிடிபட்ட 3 இளைஞர்களில் ஒருவரான இளவரசன் பி.ஏ பட்டதாரி என்பதும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, 3 இளைஞர்களையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments