தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லப்பர் பந்து'.
ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ், அவரது எண்ட்ரிக்கு ஒலிக்கும் விஜயகாந்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து சமூகவலைதளம் எங்கும் வைரலாகி வருகிறது. எங்கு திரும்பினாலும் இப்பாடலை யாராவது முணுமுணத்தப்படியே இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 27) 'லப்பர் பந்து படத்தைப் பார்த்த பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து 'லப்பர் பந்து' திரைப்படம் குறித்துப் பேசியிருந்தனர்.
'லப்பர் பந்து' திரைப்படத்தைப் பாராட்டி பேசியிருக்கும் விஜய பிரபாகரன், "கேப்டன் அவர்களுக்கு உண்மையான அர்பணிப்பைச் (ட்ரிபியூட்) செய்த திரைப்படம் இதுதான். ஒரு சில திரைப்படங்களில் ஆங்காங்கே கேப்டன் பற்றிய குறியீடுகள், போஸ்டர்கள் இடம்பெறும். ஆனால், இப்படம் முழுக்க கேப்டன் நிறைந்திருந்தார். கேப்டன் ரசிகர் உண்மையாக எப்படி இருப்பரோ அதேபோல கேப்டன் ரசிகராகவே கெத்து கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் நடிகர் தினேஷ்.
என் நண்பர் ஹரிஷ் கல்யாண் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் எங்களுக்கு மிகவும் உணர்வுப் பூர்வமாக இருந்தது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை சிறப்பாக இருந்தது. கேப்டனை இப்ப இருக்க புதிய தலைமுறையினரும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் எங்கள் கட்சிக் கூட்டங்களில் எல்லாம் ஒலிக்கும். அம்மா, மாமா, நான், என் அண்ணன் வரும்போதெல்லாம் தேமுதிக தொண்டர்கள் அந்தப் பாட்டை போட்டுத்தான் வரவேற்பார்கள். படத்துக்கு ஒரு பெரிய பலமாக இந்தப் பாடல் இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைக் கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார் மிகுந்த மகிழ்ச்சியுடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
from Vikatan Latest news
0 Comments