ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பிசிசிஐ எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல் இன் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் சில விதிமுறைகள் பற்றி இறுதிக்கட்டமாக ஆலோசித்து பிசிசிஐ இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள்,
1. ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் ஏற்கனவே உள்ள 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த 6 வீரர்களை நேரடியாகவோ அல்லது ஏலத்திற்கு சென்று RTM கார்டுகள் மூலமாகவோ தக்கவைத்துக் கொள்ளலாம்.
2. எத்தனை வீரர்களை நேரடியாக தக்கவைக்கலாம், எத்தனை வீரர்களை RTM கார்டுகள் மூலம் வாங்கலாம் என்பதை அணிகளே முடிவு செய்துகொள்ளலாம். அதேமாதிரி, தக்கவைக்கப்படும் 6 வீரர்களில் அதிகபட்சமாக 5 வீரர்கள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக இரண்டு வீரர்கள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் ஆடாத (Uncapped) வீரர்களாக இருக்க வேண்டும்.
3. மொத்தமாக வீரர்களை வாங்க 120 கோடி ரூபாயை அணி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். (ஏலத்தில் செலவளிக்கும் தொகையும் சேர்த்து)
4. வீரர்களுக்கு போட்டி ஊதியம் வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் 7.5 லட்ச ரூபாய் போட்டியில் ஆடும் வீரர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.
5. ஏலத்துக்கு தங்களின் பெயரை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்களால் ஏலத்தில் பங்கேற்க முடியாது.
6. ஏலத்தில் பெயரை பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட பின்னர் சீசன் தொடங்குவதற்கு முன்பே ஒரு வீரர் சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில் ஆடுவதற்கும் ஏலத்தில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.
7. ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் இந்திய வீரர் கடைசியாக சர்வதேச போட்டிகளில் ஆடி 5 வருடங்களாகியிருக்கும் பட்சத்தில் அவர் சர்வதேச போட்டிகளில் ஆடாத (Uncapped) வீரராக கருதப்படுவார்.
8. 2025-27 வரையிலான சீசன்களிலும் Impact Player விதிமுறை தொடரும்.
கடைசியாக சர்வதேச போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட வீரரை Uncapped வீரராக கருத வேண்டும் என்கிற விதிமுறையை சென்னை அணிதான் விரும்பி கேட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. தோனியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சென்னை அணி இந்த விதிமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டி கேட்டதாக தெரிகிறது.
இந்த விதிமுறைகளை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.
from Vikatan Latest news
0 Comments