மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் தொகுதி ஆலோசனை கூட்டம் சிக்கந்தர் சாவடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், "எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவினால் தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரித்துவிட்டனர் என்று கனிமொழி கூறினார். தற்போது ஸ்டாலின் ஆட்சியில் விதவைகள் அதிகரித்தது மட்டுமின்றி, மதுவினால் கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, இதை முதலமைச்சரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதே செந்தில் பாலாஜியை பத்து தலை ராவணன் என்றும், அவரது தம்பியை கும்பகர்ணன் என்றும் இருவரும் அரக்கர்கள் என்றும் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்றைக்கு தியாகிகள் என்கிறார். அன்றைக்கு ராவணனாக தெரிந்தவர் இன்றைக்கு ராமனாக தெரிகிறாரா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் நூலிழையில்தான் வாய்ப்புகளை இழந்தோம். 2011 ஆம் ஆண்டில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரவில்லை, தற்போது ஆட்சிக்கு வந்துவிட்டனர். நிச்சயம் 2026 தேர்தலில் ஆளுங்கட்சியாக வருவோம்.
செந்தில் பாலாஜி எதற்காக உள்ளே சென்றார் என்று அனைவருக்கும் தெரியும். திமுகவில் மிசா போன்ற சட்டங்களில் பாதிக்கப்பட்டும், ஸ்டாலினுக்காக உயிரை கொடுக்க நினைத்தவர்களையும் ஸ்டாலின் பார்த்ததுண்டா? அதேபோல் திமுக மூத்த தலைவர்கள வேலு, நேரு, பெரியசாமிக்கு இல்லாத மரியாதை தற்போது செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிமுக-வை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்" என்றவர்,
பின்பு செய்தியாளர் சந்திப்பில், "
தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த பல மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டது. இன்றைக்கு கூட்டணி கட்சிகள் மீது ஸ்டாலின் அச்சம் கொண்ட காரணத்தால், ஏற்கனவே திமுக பவள விழா நடத்திய நிலையில் மீண்டும் பவள விழாவை நடத்துகிறார்.
கூட்டணி கட்சிக்காகத்தான் இந்த பவள விழாவை மீண்டும் நடத்துகிறார். திருமாவளவன் தெளிவாக கருத்து சொல்லிவிட்டார். ஆகவே, மக்கள் உரிமைகளுக்காக உழைக்க கூடிய கட்சிகள் எல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அணிவகுக்க வேண்டும்" என்றார்.
from Vikatan Latest news
0 Comments