சென்னை அணிக்கு அதன் கோட்டையில் இன்னொரு ஆட்டம். இன்னொரு வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது. பயமுறுத்திக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணியை டார்கெட்டை டிபண்ட் செய்து சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சௌகர்யமாக வீழ்த்தியிருக்கிறது.
போட்டிக்கு முன்பே சன்ரைசர்ஸ் அணியின் மீது ஒரு பிரமிப்பும் மிரட்சியும் இருந்தது. அதுவே சென்னை அணிக்கு ஒரு அழுத்தமாகத்தான் இருந்தது. வழக்கம்போல டாஸை தோற்று நின்றார் கேப்டன் ருத்து. பேட் கம்மின்ஸ் சேஸிங்கைத் தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் சேப்பாக்கத்தில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும், சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வலுவான இராணுவப் படையை போல நிற்கிறது. இதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்பதே சென்னை அணியின் முன்பிருந்த சவால். ஆனால், சென்னை அணி இதை மனதில் ஏற்றிக்கொண்டதைப் போல தெரியவில்லை.
20 ஓவர்களில் 212 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இந்த ஸ்கோரெல்லாம் இந்த சீசனில் ஒரு சராசரியான ஸ்கோர்தான். வெற்றியை முழுமையாக உறுதி செய்யும் ஸ்கோர் கிடையவே கிடையாது. ஆனாலும் சென்னை அணியால் இவ்வளவுதான் எடுக்க முடிந்தது.
சென்னை அணியின் சார்பில் அணியின் கேப்டன் ருத்துராஜ் 20 வது ஓவர் வரை நின்று 98 ரன்களை அடித்திருந்தார். நல்ல இன்னிங்ஸ். கடந்த போட்டியில் சென்ச்சூரி அடித்திருந்தார். அவர் சென்ச்சூரி அடிக்கும் போட்டிகளில் சென்னை தோற்றுவிடுகிறது என சமூகவலைதளங்களில் கிண்டலாக ஒரு பேச்சை உலவவிட்டிருந்தார்கள். அதற்காக இரண்டு ரன்களை விட்டு விட்டு சென்றாரோ என்னவோ ஆனாலும் சிறப்பான ஆட்டம். அவருடன் ஓப்பனிங் இறங்கிய ரஹானே அடிக்கவே இல்லை. இந்த சீசன் அவருக்கு சுமாரான சீசன். தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் சென்னை அணி தங்களின் குடும்ப வழக்கப்படி அவருக்கு இடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அந்த வாய்ப்பின் கனத்தை ரஹானே பெரிதாக உணர்ந்ததைப் போல் தெரியவில்லை.
டேரில் மிட்செல்லும் நேற்று வரை அப்படித்தான் இருந்தார். அவரும் ஃபார்மிலேயே இல்லை. இன்றும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் பந்துக்கு பந்தாக உருட்டி கடுப்பேற்றினார். ருத்துராஜ் மீது அழுத்தம் ஏறியது. அதையும் பொறுப்பாக முதுகில் ஏந்திக் கொண்டு வழக்கம்போல தனது க்ளாஸான இன்னிங்ஸை ருத்துராஜ் ஆடினார். பேட் கம்மின்ஸ் வீசிய ஒரு ஓவரில்தான் டேரில் மிட்செல் டச்சுக்கு வந்தார். அதன்பிறகு, பரவாயில்லை. கொஞ்சம் அட்டாக் செய்து அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். 52 ரன்களில் உனத்கட்டின் பந்தில் ஆட்டமிழந்து விட்டார். 'சிக்சர் மணி' சிவம் துபே உள்ளே வந்தார். வழக்கம்போல 200 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடினார். இந்தப் போட்டியிலும் அவர் இருக்கையில் ஸ்பின்னரை கண்ணிலேயே காட்டவில்லை. ஆனாலும் 4 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். கம்மின்ஸ், நடராஜன் போன்றவர்களையெல்லாம் அட்டாக் செய்தார். துபே என்னமோ ஸ்பின்னர்களை மட்டும்தான் அடிப்பதாக நினைத்துக் கொண்டு அவர் வருகையின் போது ஸ்பின்னர்களை ஒழித்து வைப்பது எந்த விதத்திலும் பயனளிக்காது என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
போட்டி செல்ல செல்ல பந்து பேட்டுக்கு வருவது சிரமமாக இருந்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ருத்துராஜ் நடராஜன் வீசிய 20 வது ஓவரில் அவுட். சதத்தை நெருங்கிய ருத்துராஜை மொத்த கூட்டமும் மறந்துவிட்டது. தோனியின் வருகைக்கு ஆர்ப்பரிப்பு விண்ணை முட்டியது. தனது ட்ரேட் மார்க் ஸ்டைலில் ஒரு பவுண்டரியை மட்டும் அடித்து முடித்தார். ஸ்கோர் 212 ஆனது.
சன்ரைசர்ஸூக்கு டார்கெட் 213. அவர்களின் கூற்றுப்படி இது ஒரு சராசரியான டார்கெட். சில ஓவர்களை மீதம் வைத்து எளிதில் அவர்களால் வெல்ல முடியும். முந்தைய போட்டிகளில் அதை செய்தும் காண்பித்திருக்கிறார்கள்.
சென்னையை பொறுத்தவரைக்கும் போட்டியின் பிற்பாதியில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். பௌலர்கள் பந்துவீசுவது சிரமமாக இருக்கும். ஆக, பவர்ப்ளேக்குள் எவ்வளவு சீக்கிரமாக விக்கெட் வீழ்த்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்த இரண்டு தரப்பு விருப்பங்களில் சென்னையின் விருப்பமே போட்டியில் அரங்கேறியது. சன்ரைசர்ஸ் பவர்ப்ளேக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தார்கள். மூன்று விக்கெட்டுகளையும் ஆச்சர்யமாக வீழ்த்தியவர் துஷார் தேஷ்பாண்டே. சன்ரைசர்ஸ் அணி பவுண்டரியுடன் அதிரடியாகவே தொடங்கியது. ஆனால், இந்த அதிரடிதான் கொஞ்சம் பிரச்சனையாகவும் மாறியது.
நின்று ஆட வேண்டும். பார்ட்னர்ஷிப்களை பில்ட் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை. இதை குறையும் சொல்ல முடியாது. இது அவர்களின் Brand Of Cricket. இந்த அணுகுமுறைதான் பல பேருக்கும் அவர்களின் மீது மிரட்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்தப் போட்டியில் அது எடுபடவில்லை. ட்ராவிஸ் ஹெட், அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா என மூவருமே அவசரகதியில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்தில் அவுட் ஆகினர். கடந்த போட்டியில் ஈரப்பதத்தைக் காரணம் காட்டி ஸ்பின்னர்களுக்கு பெரிதாக வாய்ப்பே கொடுக்கவில்லை. இந்தப் போட்டியில் ஜடேஜா 4 ஓவர்களை வீசியிருந்தார். 22 ரன்களை மட்டுமே கொடுத்து நிதிஷின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். பந்தை திருப்புவது சிரமமாக இருக்கும் என்பதால் ட்ரிக்கியாக அழுத்தி குத்தி ஒரு ஷாட் பந்தை வீசி நிதிஷை கேட்ச் ஆக வைத்தார்.
பதிரனா 11 வது ஓவரில்தான் வந்தார். அந்த ஓவரிலேயே ஒரு துல்லியமான யார்க்கரில் மார்க்ரமை போல்டாக்கினார். நடு ஸ்டம்ப் தகர்ந்தது. மார்க்ரம்தான் கொஞ்சம் நின்று சேஸிங்கை முன் எடுத்து செல்வதற்கான உத்வேகத்தை காட்டியிருந்தார். அவருக்குப் பிறகு மற்ற வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிச் க்ளாசனுமே கூட பந்துக்கு பந்தாக ரன்கள் அடித்து பதிரனாவின் பந்திலேயே கேட்ச் ஆனார். சென்னையின் வெற்றி உறுதியானது. இதன்பிறகு சன்ரைசர்ஸை காப்பாற்ற யாருமே இல்லை.
சென்னை அணிக்கு முக்கியமான வெற்றி இது. புள்ளிப்பட்டியலில் திடீரென சறுக்கலை கண்ட சென்னை அணி மீண்டும் எழுந்து வேகமெடுத்து முன்னேற ஆரம்பித்திருக்கிறது. அதுவும் சன்ரைசர்ஸ் மாதிரியான மிரட்சியான அணியை சௌகர்யமாக வீழ்த்தி. இதுவே சென்னை அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும்.
இன்றைய போட்டியின் திருப்புமுனை என நீங்கள் நினைக்கும் தருணத்தைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
from Vikatan Latest news
0 Comments