Ticker

6/recent/ticker-posts

Ad Code

`அமேதியில் ராகுலை ஆதரித்துப் பிரசாரம் செய்வேன்!' - வயநாட்டில் எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ ஆனி ராஜா

கேரளா மாநிலம், வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தி கடந்த முறையைப்போல இந்த தேர்தலிலும் உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாட்டில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதே சமயம் அமேதி தொகுதியில் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். இந்தமுறை அமேதி தொகுதியில் 5-ம் கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் நேரு குடும்பத்தின் பாரம்பர்ய தொகுதியான அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸின் கையை விட்டுச் செல்வதாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கேரளாவில் வயநாடு உள்ளிட்ட 20 தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நிறைவடைந்துவிட்டது. வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் காந்தியை எதிர்த்து சி.பி.ஐ சார்பில் ஆனி ராஜா, பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்த நிலையில் மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு சி.பி.ஐ வேட்பாளர் ஆனி ராஜா பேட்டியளித்தார். அப்போது ஆனி ராஜா கூறுகையில், "சி.பி.ஐ வேட்பாளர் என்ற நிலையில் வயநாட்டில் சிறப்பாகப் பிரசாரம் மேற்கொண்டேன். பெரும்பாலான வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டேன். இடதுசாரி வேட்பாளரான நான் இடதுசாரி அரசியல் குறித்தும், கொள்கை நிலைப்பாடு குறித்தும் மக்களிடம் கொண்டு சென்றேன்.

ராகுல் காந்தி

வாக்காளர்கள் என்னை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு நான் என்னென்ன பணிகள் செய்வேன் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நான் கூடிய மட்டும் செய்து முடித்தேன். போலிங் சதவீதம் குறைந்தது பற்றி எல்லாம் நான் கணக்கில் எடுக்கவில்லை. வாக்காளர்களின் உரிமை என்று ஒன்று இருக்கிறது. எனவே அவர்கள் வாக்களிப்பது குறித்து தீர்மானிக்கட்டும். சிலர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாக்களிப்பார்கள், சிலர் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன் என்ற நிலைப்பாடு எடுப்பார்கள். எனவே எனக்கு இந்த தொகுதியில் வாக்காளர் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது. வெற்றி பெறுவதற்காக தான் போட்டியிடுகிறோம். ஆனாலும் எங்களுக்கு வேறொருவர் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தால், அது ஒவ்வொரு வாக்காளர்களின் தீர்மானம். ஒவ்வொரு வாக்காளர்களையும் பூரணமாய் நம்புகிறேன். தொகுதி விஷயங்களுக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கு இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரால் முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறேன். எனவே இடது முன்னணியின் கொள்கையை வயநாடு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

சி.பி.ஐ வேட்பாளர் ஆனி ராஜா

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டால் இந்தியா கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் நீங்கள் ராகுலை ஆதரித்து பிரசாரம் செய்வீர்களா என கேட்கிறீர்கள். இந்தியா கூட்டணியை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கூட்டணியாக உள்ளது. அதனால்தான் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியான யூ.டி.எஃப், கம்யூனிஸ்ட் கூட்டணியான எல்.டி.எஃப் என்ற வகையில் போட்டி நிலவியது. அமேதி தொகுதி அமைந்துள்ள உத்தரப்பிரதேசத்தில் இடதுசாரிகள் என்ன கூட்டணி முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து எனது முடிவு இருக்கும். அங்கு காங்கிரஸும், கம்யூனிஸ்டும் ஒரே கூட்டணியாக இருந்தால் நிச்சயமாக அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" என்றார்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments