விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. எனவே, தனியார் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி, 8 கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை புறக்கணித்திருப்பது, தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதுகுறித்து, கே.சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பேசுகையில், ``ஆரம்பத்தில், உள்ளூர் வளர்ச்சிக்காக உரத்தொழிற்சாலையை அமைக்கப் போகிறோம் எனச் சொல்லித்தான் நிலம் வாங்கினார்கள். விவசாயத்திற்கு பயன்படும் வகையிலும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்ற எண்ணத்திலும் உரத்தொழிற்சாலை கட்டடப் பணிகளுக்கு கிராம மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கட்டடப் பணிகள் முடிந்து ஆலை முழுமையான செயல்பாட்டுக்கு வரும் முன்னரே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக தடையின்மை சான்றையும் தனியார் நிறுவனத்தினர் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு முழுவீச்சில் ஆலை செயல்பாட்டுக்கு வரும்போதே கிராம மக்களுக்கு விவரம் தெரியவந்தது. தினசரியும், லாரிகளில் இறைச்சிக் கழிவுகள் எங்கள் ஊர் வழியாக செல்லும்போது சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும். இதுமட்டுமல்லாமல், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகை சுற்றுவட்டாரத்தில் பரவி நெடி வீசுவதால் பலர் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நச்சுப்புகை காரணமாக எங்கள் ஊரைச் சேர்ந்த சிலருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் பலமுறை புகார் மனு அளித்திருக்கிறோம். ஆனால் அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அந்த ஆத்திரத்தில், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆலைக்கு இறைச்சிக் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை மடக்கி, கிராம மக்கள் போராட்டம் நடத்தினோம். அதன் பிறகே எங்கள் பிரச்னைகளை என்னவென்று காதுகொடுத்து கேட்பதற்கு அதிகாரிகள் களத்திற்கு வந்தனர்.
அப்போது பேசிய வருவாய்துறை மற்றும் காவல்துறையினர், எங்களை சமாதானப்படுத்த முயற்சித்தனரே தவிர, தனியார் ஆலை நிர்வாகத்தினரிடம் என்ன நடக்கிறதென ஒரு வார்த்தைக்கூட விசாரிக்கவில்லை. கிராம போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அன்று இரவு ஆலையை மூடச்சொன்னார்கள். இனி ஆலை செயல்படாது எனவும் வாய்வார்த்தையாக எங்களுக்கு உறுதி அளித்தனர். ஆனால், நாங்கள் யூகித்தது போலவே, மறுநாளே அந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததது. எனவே, எங்கள் பிரச்னையை அனைவரின் கவனத்துக்கும் எடுத்துச்செல்வதற்காக தேர்தல் புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்தோம். ஊர் மக்கள் ஒற்றுமையால் வாக்குப்பதிவு நாளன்று, ஆலைமீதான எதிர்ப்பை வலுவாக பதிவு செய்யும்பொருட்டு எங்கள் ஊரில் இருந்து யாரும் வாக்களிக்க செல்லவில்லை.
இந்த தகவல் அறிந்த அதிகாரிகள் நேரடியாக எங்கள் கிராமத்திற்கு வந்து, எங்களை வாக்கு செலுத்தக் கட்டாயப்படுத்தினர். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். இனியும், எங்கள் கோரிக்கைமீதான நியாயத்தை அரசு புரிந்துகொள்ளாத பட்சத்தில் அனைத்து கிராம மக்களும் குடியுரிமையை விட்டுத்தர தயாராக உள்ளோம்" என்றனர்.
பேய்குளம் மற்றும் ஆவல்சூரன்பட்டி கிராமத்தினர், ``கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாகவே எங்களுக்கு இந்த பிரச்னை நீடிக்கிறது. ஆலை முழுவீச்சில் செயல்படும்போது சுற்றுப்புறத்துக்கும் கிராம வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற இறைச்சிக் கழிவு ஆலைகளை இங்கு செயல்பட விடக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தோம். ஆனால் மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். அதற்கும் பலன் இல்லை. இந்த நிலையில் தனியார் ஆலைக்கு ஆதரவாக எங்களிடம் வந்து பேசும் அதிகாரிகள் பணம் எதிர்பார்த்து இதையெல்லாம் செய்கிறீர்களா? என எங்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆலைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என, காவல்துறையினர் போனில் மிரட்டுகிறார்கள். ஆகவே எங்கள் பிரச்னையை அதிகாரிகள் தீர்க்க முன்வராத நிலையில், மக்கள் மன்றத்தில் இதை எதிரொலிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலை புறக்கணித்தோம். இறைச்சிக் கழிவு அரவை ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படும் சோளம்பட்டி, மேலப்பட்டி, சென்னம்பட்டி, பேய்குளம், உன்னிப்பட்டி, ஆவல்சூரன்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மணிநகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்தோம். இதில் சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய இரண்டு கிராமத்திலும் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. பிற கிராமங்களில் ஆளுங்கட்சியின் வற்புறுத்தலால் 1%க்கும் குறைவான பதிவாகியுள்ளன" என்றனர்.
திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் அருள் இது குறித்துப் பேசுகையில், ``சாலை மறியல் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மட்டுமே காவல்துறையினர் செய்தனர். மற்றபடி கிராமத்தினரை மிரட்டவில்லை. போனில் அழைத்து மிரட்டுவதற்கும் அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ``சென்னம்பட்டியில் செயல்படும் இறைச்சி கழிவு அரவை ஆலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஏற்கெனவே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இரண்டு முறை கடிதம் எழுதி இருக்கிறேன். மக்கள் விரும்பாத ஓர் ஆலை ஒரு இடத்தில் செயல்படுவது என்பது விரும்பத்தகாத ஒன்று. ஆகவே சென்னம்பட்டியில் செயல்படும் இறைச்சிக் கழிவு அரவை ஆலை அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையும்கூட. மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக எப்போதும் நானும், அ.தி.மு.க-வும் துணை நிற்கும்" என்றார்.
தனியார் இறைச்சிக் கழிவு அரவை ஆலை உரிமையாளர் அலெக்ஸ் இது குறித்துப் பேசுகையில், ``மத்திய, மாநில அரசுகளின் அனுமதியோடும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ள வரையறைகளுடனும் இறைச்சிக் கழிவு ஆலை இயங்கி வருகிறது. இதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் சரியாக உள்ளன. சென்னம்பட்டியில் எனது ஆலை செயல்பாட்டுக்கு வந்தபிறகு விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இறைச்சிக் கழிவுகளை கொண்டு வந்து அரைத்து புரோட்டீன் பவுடர்களாக மாற்றம் செய்துவருகிறோம். இதன்மூலம், முன்னதாக வெட்டவெளியில் கொட்டப்பட்டு வந்த இறைச்சிக் கழிவுகள் அனைத்தும் முறைப்படியான சுத்திகரிப்பின்படி மாசற்ற சூழல் சமநிலைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அறியலாம்.
ஆனால் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒருசிலர், என்னிடமிருந்து பணம் பறிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் மக்களை ஆலைக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்தும், நிலைமை மோசமாவதை கருத்தில் கொண்டும் கிராம மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்துவருகிறோம். கிராம மக்களின் சந்தேகம் தீரும்வரை ஆலையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் நான் ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறேன். ஆகவே, ஆலையில் எவ்வித விதிமீறலும் இல்லை, ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னர் மீண்டும் முழு வீச்சில் ஆலை செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஒருவேளை சமாதான கூட்டத்தில் கிராம மக்களுக்கு நம்பிக்கை இல்லாதபட்சத்தில் சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் குழுவினர் ஆலையில் வந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்பு அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு ஆலையை நடத்துவதற்கும் நான் தயாராக உள்ளேன்" என்றார்.
திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தி, ``சென்னம்பட்டியில் செயல்படும் இறைச்சிக் கழிவு அரவை ஆலை, மத்திய, மாநில அரசுகளின் முறையான அனுமதியுடனும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தடையின்மை சான்றையும் பெற்றே இயங்கி வருகிறது. இதுதவிர ஆலைக்கு கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பஞ்சாயத்து சாலையை பயன்படுத்துவதற்கும், தடையின்றி ஆலை செயல்படுவதற்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்கின்றனர். எனவே சட்டப்படி ஆலையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்த நிலையில், ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆலையின் மீதான எதிர்ப்பு காரணமாக தேர்தலில் ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை என்ற விஷயத்தையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சமாதானக் கூட்டத்தில் இந்த பிரச்னைக்கு முடிவு எட்டப்படும்" என்றார் உறுதியாக.
from Vikatan Latest news
0 Comments