நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினீயர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம், 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னை காதலிப்பதாக நடித்து நெருக்கமாக இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் 2020 ஏப்ரல் 24-ம் தேதி காசி கைது செய்யப்பட்டார். காசியின் மொபைல் போனை போலீஸார் பரிசோதித்து பார்த்தபோது, பல பெண்களை வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இருந்தன. காசியை போலீஸார் விசாரித்தபோது, தமிழகம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களை காசி தனது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. சிறுமி உட்பட 7 பெண்கள் காசி மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரு கந்து வட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து காசி வழக்கு கடந்த 2020 மே 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்தது காசியின் லேப்டாப். அதில் இருந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார். இதையடுத்து தங்கபாண்டியன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆவணங்களை ரெக்கவர் செய்ய சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் மீட்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் சுமார் 900 ஜி.பி அளவுக்கு வீடியோக்கள் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது ஜிம் பாடியை காட்டியும், தன்னை பணக்காரனாக காட்டியும் பெண்களிடம் நெருங்கியிருக்கிறான் காசி. அவனிடம் 150-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளன. ஒரு சில பெண்களின் முப்பதுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் விதவிதமாக இருந்துள்ளன. காசி தனது காரில் வைத்து பெண்களை சீரழித்த வீடியோக்கள்தான் அதிகம். காசி தனது கோழிப்பண்ணையிலும், லாட்ஜ் ரூம்களில் வைத்தும் சில ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளான். காரில் எடுக்கப்பட்ட பெரும்பாலான வீடியோக்கள் பெண்களுக்கு தெரியாமல் காரின் டேஷ் போர்டில் மொபைலை மறைத்து வைத்து எடுக்கப்பட்டிருந்தது. சில வீடியோக்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரிந்தே எடுக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாது திருமணம் ஆன பெண்களுடனும் காசி நெருக்கமாக இருக்கும் சில வீடியோக்கள் இருந்துள்ளன. பெண்களிடம் வீடியோ காலிங் மூலம் ஆபாசமாக பேசி அந்தரங்கங்களை காட்டச்சொல்லி அதை ஸ்கிரீன் வீடியோவாக எடுத்து வைத்திருந்தார் காசி. அந்த வீடியோக்களை காட்டியே அந்தப் பெண்களை வலையில வீழ்த்தி நெருக்கமாக இருந்திருக்கிறார் காசி.
காசி வலையில் வீழ்த்தி இச்சையை தீர்த்துக்கொள்ளும் பெண்களின் மொபைல் எண்களை தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். அந்தப் பெண்களை தொடர்புகொண்டு மிரட்டி பாலையால் வன்கொடுமை செய்துள்ளனர் காசியின் நண்பர்கள். அந்த வழக்கில் காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். நாகர்கோவில் காசி மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2 போக்ஸோ வழக்குகள், ஒரு கந்துவட்டி வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதியப்பட்டன. காசி மீதான 6 வழக்குகள் நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டிலும், ஒரு வழக்கு போக்சோ கோர்ட்டிலும், மற்றொரு வழக்கு 1-வது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டிலும் நடந்து வந்தது. இதில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 22 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா கோர்ட்டில் நடந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம், இளம்பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் காசியுடன் சேர்ந்து அவரது கூட்டாளியான நாகர்கோவில் ராமன்புதுரை சேர்ந்த ராஜேஷ் சிங் (44) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியிருந்தார். அதே வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்ததனர். அதில் காசியின் நண்பனான ராஜேஷ் சிங் வேலைக்காக துபாய் நாட்டுக்கு சென்றிருந்ததால் போலீஸாரால் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ராஜேஷ்சிங் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அளித்திருந்தனர். இந்த நிலையில், சுமார் 4 ஆண்டுகளாக துபாயில் இருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பி உள்ளார் ராஜேஷ் சிங். இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ராஜேஷ் சிங்-கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டார்.
from Vikatan Latest news
0 Comments