Ticker

6/recent/ticker-posts

Ad Code

SRH vs MI: மொத்தம் 523 ரன்கள், 38 சிக்ஸர்கள் - சாதனை போட்டியில் மும்பை தோல்வி! ஹர்திக்தான் காரணமா?

இந்த சீசனின் 8வது போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தங்களது முதல் போட்டியில் எப்படியும் ஜெயித்து விடுவார்கள் என்ற நிலையிலிருந்து மண்ணைக் கவ்விய மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலபரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். இரு அணிகளும் தங்களது முதல் புள்ளியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்க டிராவிஸ் ஹெட்டும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.
SRH vs MI

முதல் ஓவரை அறிமுக வீரரான மபாஃகா அருமையாக வீசி வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். அடுத்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. மிட் ஆப் திசையில் அவர் அடித்த கேட்சைத் தவறவிட்டார் டிம் டேவிட். ஹெட் அடித்த வேகத்தில் பந்து டேவிட்டின் கையில் பட்டும் பவுண்டரிக்குப் பறந்தது. அடிவாங்கி உயித்தெழுந்த அண்டர்டேக்கர் போல அடுத்த ஓவரிலே 6, 6, 4, 4 என மபாஃகா வீசிய ஓவரில் வாணவேடிக்கை நிகழ்த்தி “'ஹெட்' போல வருமா” என்று பி.ஜி.எம் போட வைத்தார். நான்காவது ஓவரை பூம் பூம் பும்ரா மிரட்டலாக வீசி, சற்றே அடக்கி வாசிக்க வைத்தார். மீண்டும் தனது இரண்டாவது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே "துண்டு ஒருமுறைதான் மிஸ் ஆகும்" என மயங்க் அகர்வாலின் 11(13) விக்கெட்டை வீழ்த்தினார்.

SRH vs MI

விக்கெட் போனால் என்ன "நீ ரசத்த ஊத்து" என ஹர்திக் போட்ட பந்துகளுக்கு ஹாட்ரிக் ஃபோர் ட்ரீட்மென்ட் கொடுத்தார் டிராவிஸ் ஹெட். பவர்பிளேயின் கடைசி ஓவரை வீச வந்த கோட்ஸி முதல் பந்தை நோ-பாலாகப் போட, அந்த ஓவரிலும் வீடியோ கேம் மோடில் 6, 4, 6, 6 என போஸ்டல் பின்கோடு போல அடித்து விளாசினார் ஹெட். வெறும் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து ஹைதராபாத் அணி சார்பாக விரைவான அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 6 ஓவர் முடிவில் 81-1 என்ற வலுவான நிலையை எட்டியது ஹைதராபாத்.

'மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ணெய் பவர்பிளே முடிஞ்சு பவுண்டரி எல்லைக்கு பில்டர் போனா எனக்கென்ன...' என பியூஷ் சாவ்லாவின் 7வது ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் அபிஷேக். இதற்கு நடுவில் மும்பைக்கு  ஆறுதலாக 'ஹெட்'டின் விக்கெட் விழுந்தது. இருந்தாலும் 24 பந்துகளில் 62 ரன்கள் அடித்து தனது பணியைச் சிறப்பாக நிறைவு செய்திருந்தார் இந்த அஸ்திரேலிய ‘தல’. இருந்தும் அடுத்து மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் ‘ஹெட்’ விட்டுச் சென்ற 4, 6, 6, 4 என்ற போஸ்டல் பின்கோடு போடும் பணியை மபாஃகா ஓவரில் தொடர்ந்தார். மும்பை பௌலர்களை "மச்சான் எப்படிப் போட்டாலும் அடிக்குறான்டா" எனக் கதறவைத்த அபிஷேக், ஒரே போட்டியில் டிராவிஸ் ஹெட் செய்த சாதனையை முறியடித்து 16 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார். பத்து ஓவர் முடிவில் 148-2 என்று இமாலய இலக்கை அடைந்தது ஹைதராபாத். 

SRH vs MI
11வது ஓவரை சாவ்லா வீச இம்முறையும் `அதே டைலர் அதே வாடகை' எனப் பறக்கவிட்டார் அபிஷேக். ஆனால் ஒரு வழியாக அதே ஓவரின் கடைசி பந்தில் பெரியவரின் அனுபவச் சுழலில் சிக்கிக் காலியானார் அபிஷேக் 63 (23). இந்த இத்தனை ருத்ரதாண்டவத்துக்கு மத்தியில் பும்ராவை ஒரேயொரு ஓவர் மட்டுமே வீச வைத்து கேப்டன்சியில் சொதப்பி இருந்தார் ஹர்திக் பாண்டியா. அவர் கொம்பன் கிளாசனின் வருகைக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த கும்கியாக பும்ராவை தேக்கி வைத்திருந்தாலும், அதற்கு முன்னரே தேவையான அனைத்து சேதங்களையும் செய்துவிட்டது ஹெட் - அபிஷேக் கூட்டணி.

அதுமட்டுமில்லாமல் 'பும்ராவா இருந்தாலும் எனக்குப் பயமில்ல' என்று சிக்ஸர் விளாசி கிளாசன் 15வது ஓவரிலே SRH-ஐ 200 ரன்களைக் கடக்க வைத்தார். 'கிரிகாலா அடைமழை அடிச்சு வெளுத்து வாங்கப் போகுது... உடம்ப இரும்பாக்கிகடா' என்பது போல ஓவருக்கு 10 ரன்கள் கொடுத்தாலே சிக்கனமான ஓவர் என்று சொல்லும் அளவுக்கு கிளாசனும், மார்க்ரமும் ஃபோரும், சிக்ஸரும் பறக்கவிட்டு 19வது ஓவரிலேயே 250 ரன்களைக் கடக்க வைத்தனர். கடைசி ஓவரில் ஆர்.சி.பியின் 263 ரன்கள் என்ற ஐபிஎல் சாதனையை மட்டுமல்லாமல் அனைத்து பிரான்சைஸ் கிரிக்கெட்களின் சாதனையையும் "அண்ணன் எடுத்துகிட்டேன்டா" என்று அள்ளிவிட்டுச் சென்றது ஆரஞ்சு ஆர்மி. இறுதிவரை கிளாசன் 80 (42), மார்க்ரம் 42 (28) நாட் அவுட்டாக களத்தில் நின்றனர்.

SRH vs MI

ஜெயிக்க வேண்டுமென்றால் ஒரு ரெக்கார்ட் பிரேக்கிங் சேஸிங் செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது ரோஹித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி. முதல் இன்னிங்ஸை ஆக்சன் ரீப்ளே செய்தது போல முதல் மூன்று ஓவர்களை நாலாபுறமும் சிதறடித்து 50-0 என்று பயங்காட்டத் தொடங்கினர் பல்தான்ஸ். இருந்தும் 4வது ஓவரில் ஷபாஸ் வீசிய முதல் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு கிஷன் 34 (13) அடுத்த பந்திலே அவரது சூழலில் மார்க்கரமிடம் தஞ்சமடைந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஷர்மா தந்த மற்றொரு கஷ்டமான கேட்ச் வாய்ப்பை சமாத் தவறவிட்டார்.

அடுத்த ஓவரில் கேப்டன் கம்மின்ஸ் வீசிய 2வது பந்தை ரோஹித் 6 அடித்து வாணவேடிக்கை காட்ட, அந்த கேட்ச்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருக்கப்போகிறது 'இது ஹிட்மேனின் ஆட்டமா' என்று கமென்டேட்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே 26 (12) என அபிஷேக் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஹிட்டு. பவர்பிளேயின் முடிவில் 76-2 என்று 'இன்னும் இது நிக்குது' என்பதாக லைட்டாக ஒரு பயத்தை ஹைதராபாத் அணிக்குக் காட்ட ஆரம்பித்தனர் மும்பை அணியினர்.

SRH vs MI

அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் நாமன் கிர் ஜோடி அடுத்த நாலு ஓவர்களை 'யார் போட்டாலும் அடிப்போம்' என்ற மோடில் துவம்சம் செய்தனர். ஒரு பக்கம் உம்ரான் மாலிக்கின் ஓவரை 15 ரன்கள் அடித்து வதம் செய்தால், மறுபுறம் ஷபாஸ் அகமது வீசிய 10வது ஓவரில் 22 ரன்கள் அடித்து அம்பயருக்கு சிக்ஸர் காட்டும் உடற்பயிற்சியைச் செய்ய வைத்தனர். 10 ஓவர் முடிவில் மும்பை 141-2 என்ற வலுவான நிலையை எட்டியது. இதே நேரத்தில் ஹைதராபாத் 148-2 என்று கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருந்தது. இந்த ஒப்புமை நம்பிக்கை அளிக்க, 'இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்' என பல்தான்ஸ் ஸ்டேட்மெண்ட் விட்டனர்.

24 பந்தில் திலக் வர்மா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், ரன்கள் வாரி வழங்கினாலும் நன்றாகப்போய் கொண்டிருந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தார் உனத்கட். அவர் வீசிய பந்தில் கேப்டன் கம்மின்ஸிடம் நாமன் கிர் 30 (14) கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்படித் தேவையான ரன்ரேட்களை 13 - 14 எனத் தொடர்ந்து வந்தவர்களுக்கு, 13வது ஓவரில் யார்க்கர்களால் முட்டுக்கட்டை போட்டார் புவனேஷ்குமார். கடைசியில் நேரத்தில் 36 பந்துகளில் 96 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை உருவானது. பொறுப்பைத் தனது கையில் எடுத்து 15வது ஓவரை வீசிய கேப்டன் கம்மின்ஸ், திலக் வர்மாவின் விக்கெட்டை எடுத்தது மட்டுமில்லாமல் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து பெரியதொரு திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தார். அடுத்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்து உனத்கட்டும் மிரட்டினார். கேப்டன் இன்னிங்ஸ் ஆட வேண்டிய ஹர்திக் பாண்டியா பல பந்துகளை உஷா ஃபேன்ஸ் விளம்பரம் போலச் சுற்றிக்கொண்டு இருந்தார்.

SRH vs MI

இருந்தும் டிம் டேவிட் அதன் பிறகு கிடைக்கின்ற பந்தை எல்லாம் பவுண்டரி எல்லைகளுக்கு வெளியே தள்ள, ஐ.பி.எல் வரலாற்றில் இரு அணிகளும் சேர்ந்து 500 ரன்கள் அடித்த போட்டியாக இது மாறியது. அந்தத் தருணத்தில் ஹர்திக் பாண்டியா 24 (20) என இந்த ஆட்டத்தின் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், டாப் எட்ஜ்ஜாகி கீப்பர் கேட்ச் ஆனார். சொல்லப்போனால் அவர் வரும்வரை ஆட்டம் மும்பையின் கையில்தான் இருந்தது. அந்த வாய்ப்பை அவரே தவறவிட்டார். கடைசிவரை களத்திலிருந்து போராடிய டிம் டேவிட் 22 பந்துகளில் 42 ரன்களையும், ஷெப்பேர்ட் 6 பந்துகளில் 15 ரன்களையும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 245-5 ரன்களை மட்டுமே சேர்த்தது மும்பை. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியை வென்றது.

SRH vs MI
மொத்தம் 523 ரன்கள், 38 சிக்ஸர்கள் என்று இரு அணிகளும் இன்று சாத்திய விதம் `இதுதாண்டா ஐ.பி.எல்' என்ற வார்த்தைக்குப் பொருத்தமாக மாறி என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் போட்டியாக இதை மாற்றியது.


from Vikatan Latest news

Post a Comment

0 Comments