தருமபுரியில், ‘இந்தியா கூட்டணி’ வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘பாசிச மதவெறிக்கொண்ட பா.ஜ.க ‘இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிட்டால்..’ என்ற அச்சத்தோடு, அதை தடுக்க ஜனநாயக சக்திகளும், நாட்டு மக்களும் களம் கண்டுள்ள ஜனநாயக போர்க்களம்தான் இந்தத் தேர்தல். பா.ஜ.க என்பது சமூகநீதிக்கு ‘சவக்குழி’ தோண்டுகிற கட்சி. ‘சமுத்துவம் என்றால் கிலோ என்ன விலை?’ என்று கேட்கின்ற கட்சி. ‘மதம், இனம், சாதி, மொழி அடிப்படையில் நம் நாட்டை பிளவுப்படுத்தி குளிர்காய வேண்டும்’ என்று நினைக்கின்ற கட்சி. மீண்டும் பா.ஜ.க-வை ஆட்சிக்கு வராமல் தடுக்கின்ற கடமை சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு.
ஆனால், நான் பெரிதும் மதிக்கிற... சமூகநீதி பேசுகிற அய்யா ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க-வுடன் சமூகநீதி பேசக்கூடிய அய்யா ராமதாஸ் கூட்டணி அமைத்தது ஒன்றும் ‘தங்கமலை ரகசியம்’ கிடையாது. அவர் ஏன் மனசில்லாமல் அங்குப் போயிருக்கிறார் என அவர்கள் கட்சிகாரர்களுக்கும் தெளிவாக தெரியும். இதற்குமேல் விளக்கமாகச் சொல்ல நான் விரும்பவில்லை.
சமூகநீதிக்கு புதிய பாதை அமைத்தவர் கலைஞர். கொங்குவேளாளர் கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இன்று அந்தச் சமூகம் முன்னேறியதற்குக் காரணமும் கலைஞர்தான். அதேபோல, ஆதிதிராவிடர் சமூகத்துக்கு 18 விழுக்காடு, பழங்குடிகளுக்கு ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருந்தவரும் கலைஞர்தான். 1987-ம் ஆண்டு, வன்னியர் சமுதாய மக்களுக்கான ‘தனி இடஒதுக்கீடு’ கேட்டு கடுமையான போராட்டம் நடைபெற்றது. அப்போது இருந்த அ.தி.மு.க ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. 1989-ம் ஆண்டு, தலைவர் கலைஞர் முதலமைச்சரான 43 நாள்களுக்குள் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீட்டைக் கொடுத்தார். வன்னியர் சங்கத்தின் மீது போடப்பட்டிருந்த வழக்குகளையும் திரும்பப் பெற்றவரும், 1987 போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்களுக்கு மூன்று லட்சம் ‘கருணைத் தொகை’ கொடுத்தவரும் கலைஞர்தான்.
இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். சமூகநீதி தியாகிகளான அவர்களைப் போற்றி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது ‘மணிமண்டபம்’ கட்டப்படும் என்று வாக்குறுதியும் கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் அந்த மணிமண்டபம் கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்படவிருக்கிறது. ஆக, சொன்னதை செய்த பெருமையோடு, தெம்போடு, துணிவோடு உங்கள் முன்னால் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் சிலபேர் மறந்துபோன... மறைக்க நினைக்கின்ற வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுப்படுத்தவும் விரும்புகிறேன். கோனேரிகுப்பத்தில் நடைபெற்ற ‘வன்னியர் சங்க வெள்ளிவிழா’ மாநாட்டுக்கு நம்முடைய கலைஞரையும் அழைத்தார் அய்யா ராமதாஸ். அன்றைக்கு மேடையில் பாராட்டி பேசியது அவருக்கு நியாபகம் இருக்கிறதா?.
நீங்கள் மறந்தாலும், வன்னியர் சமூக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ‘முதலில் இடஒதுக்கீட்டுக்காகப் போராடினோம். 21 உயிர்களை பலிகொடுத்தது தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றைக்கு இருந்த அ.தி.மு.க-வின் முதலமைச்சரை பார்க்கவே முடியவில்லை. ஆனால், கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் என்னை அழைத்து இடஒதுக்கீடு தந்தார். அவருக்கு நன்றி. இந்தச் சமுதாயம் என்றென்றைக்கும் கலைஞருக்குக் கடமைப்பட்டிருக்கும்’ என்று தெரிவித்தார். ‘ராமசாமி படையாட்சியாருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும்’ என்று வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார், சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் கலைஞரைச் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். உடனே, சென்னையின் மத்திய பகுதியில் ராமசாமி படையாட்சியாருக்கு சிலை அமைத்தார் கலைஞர். இது, மூத்த தலைவரான மருத்துவர் அய்யா அவர்களுக்குத் தெரியாதா?.
சமூகநீதி பேசுகிற மருத்துவர் அய்யா, சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க-வுடன் கைகோத்த மர்மம் என்ன?. பா.ம.க வலியுறுத்துகின்ற ஒரு கொள்கையில்கூட ஆதரவுத் தெரிவிக்காமல், அதற்கு முற்றிலும் நேரெதிரான கொள்கையைக் கொண்டதுதான் பா.ஜ.க. நான் மட்டும் சொல்லவில்லை. மனசாட்சியுள்ள பா.ம.க தொண்டர்களும் ஜீரணிக்க முடியாமல் வேதனையோடுதான் இருக்கிறார்கள். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டியது. அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது. மாநில அரசால் ‘சர்வே’ மட்டுமே எடுக்க முடியும். ‘சென்செக்ஸ்’ எடுக்க முடியாது. இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதி போராளியான அய்யா ராமதாஸுக்குத் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ‘தெரிந்தே’ இந்த அரசியல் செய்கிறார். அவர்மீது வைத்திருக்கின்ற பெரும் மரியாதைக்காக இதற்குமேல் எதுவும் பேசவில்லை.
நம்முடைய நிலைப்பாடு... யார் என்னச் சொன்னாலும், பேரறிஞர் அண்ணா வழியில் ‘வாழ்க வசவாளர்’ என்று நமது திராவிட மாடல் பணிகளைத் தொடர்ந்துகொண்டே இருப்போம். அதனால்தான் உங்கள் குடும்பங்களில் ஒருவனாக நான் இருக்கிறேன். ஒரு நல்லாட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறோம். ஓசூரில் புதிய விமான நிலையம், ஜூஜூவாடி முதல் சிப்காட் இரண்டு வரை பறக்கும் சாலை பாலம், கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம், ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் சேவை, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகச் சென்னைக்கும் ரயில் சேவை, ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மெட்ரோ ரயில்சேவை, மொரப்பூர் மற்றும் தருமபுரி ரயில் நிலையங்களை இணைக்க புதிய அகல ரயில்பாதை திட்டம் ஆகியவற்றோடு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டமும் விரிவுப்படுத்தப்படும். இவை எல்லாவற்றுக்குமேல் முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டுக்குகீழே இருக்கக்கூடிய மக்கள் குறித்த கணக்கெடுப்பும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news
0 Comments