பிரபல திரைப்பட நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை விஜயகாந்த் காலமானார். மருத்துவமனையிலிருந்து அவரின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரசிகர்கள் முதல் கட்சித் தொடர்கள் வரை பலரும் அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். பின்னர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என்று அறிவிப்பும் வெளியானது. காலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் விஜயகாந்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் மொத்த கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது. இன்னும் நாளை வெளி மாவட்டங்களில் இருந்து அதிக மக்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோயம்பேடு பகுதியில் சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினார். இந்தச் சூழலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உடல் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் தீவுத்திடலில் நாளை வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க சார்பில் வெளியான அறிவிப்பில், "இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (29.12 2023) வெள்ளிக்கிழமை காலை 06:00 மணியிலிருந்து மதியம் 01:00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து மதியம் 01:00 மணியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தே.மு.தி.க தலைமைக் கழக அலுவலகம் வந்தடையும். இறுதிச்சடங்கானது மாலை 04:45 மணியளவில் தொடங்கி, தே.மு.தி.க தலைமைக் கழக வளாகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராஜாஜி ஹாலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனால், விஜயகாந்தின் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக, தீவுத்திடல் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தீவுத்திடலில் ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். பணிகள் நடைபெறும் இடத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
விஜயகாந்தின் பூதவுடலை வைக்க மேடை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, பொதுமக்கள் வரும் வழி, முக்கிய நபர்கள் வரும் வழி என அனைத்துமே தனித்தனியாக திட்டமிடப்பட்டு, பல்வேறு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதிகாலை தே.மு.தி.க அலுவலகத்திலிருந்து விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்குக் கொண்டுவரப்படும். அதற்கு முன்பாக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
from Vikatan Latest news
0 Comments