ஒவ்வொரு வருடத்தின் முதல் நாளான புத்தாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது மக்கள் வழக்கம். இதற்காக 31-ம் தேதி இரவு இனிப்பு, வாழ்த்துகள், ஆடல், பாடல் என்று பல்வேறு வகையில் மக்கள் கொண்டாடுவார்கள். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பைக் வீலிங், மதுபோதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவது போன்றவற்றிலும் சிலர் ஈடுபடுவர். இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதும் வழக்கம்.
சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை காவல்துறை, கடும் சோதனை, கடற்கரைக்குச் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை காவல்துறை சார்பில் விபத்தில்லா புத்தாண்டு என்று சொல்லி, கடுமையான கட்டுப்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது.
பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகக் கொண்டாட 18,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதோடு, காவல்துறையினருக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். 31-ம் தேதி இரவு 9 மணியிலிருந்து சென்னையில் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல, 420 இடங்களில் வாகன தணிக்கை குழு ஏற்படுத்தப்படும். 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தேவையான உதவிகளை மேற்கொள்வார்கள்.
கிண்டி, அடையாறு முதல் ஜி.எஸ்.டி சாலைவரை வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்களைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைப்பதும். அதோடு, கோவில், தேவாலயங்கள் உட்பட 100 முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. 31-ம் தேதி முதல் ஜனவரி 01-ம் தேதிவரை சென்னையில் உள்ள கடற்கரையில் கடல்நீரில் இறங்க, குளிக்கத் தடை போடப்பட்டிருக்கிறது. புத்தாண்டு அன்று கடற்கரையில் அதிக அளவு மக்கள் கூடுவதால் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "1. மெரினா கடற்கரை உட்புற சாலை 31-ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும். அனைத்து மேம்பாலங்களும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ந்தேதி அன்று காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.
மெரினா கடற்கரை உட்புற சாலை 31-ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். அதேபோல சென்னையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மேம்பாலங்களும் வரும் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 01-ம் தேதி காலை 6 மணிவரை போக்குவரத்துக்காக மூடப்படும். சென்னை பெருநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை பெருநகரில் பொதுமக்கள் புத்தாண்டைச் சிறப்பாகவும், மற்றவர்களுக்குச் சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்" என காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
from Vikatan Latest news
0 Comments