2022-ல் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி என ஒரே வாரத்தில் ஹீரோயின்கள் முதன்மைப் பாத்திரத்தில் நடித்த படங்கள் ரீலிசாகி அந்த ஆண்டு மாஸாக முடிய, ‘நாங்க மட்டும் சும்மாவா’ என்று அயலி வெப் சீரிஸின் தாறுமாறு ஹிட்டுடன் தொடங்கியது, தற்போது விடைபெறும் 2023-ம் ஆண்டு!
அந்த வரிசையில், தமிழில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து 2023-ம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் வெப்சீரிஸ் சிலவற்றை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கலாம்... வாங்க!
அயலி
'இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்கறாங்க?' என்பதுபோல, ‘நாம 21-ம் நூற்றாண்டுல இருக்கோம். இன்னுமா ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம்லாம் இருக்கு?’ என்று சிலர் கேட்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், ‘ஆம்‘ என்பதுதான் கசப்பான பதில். அதை நெற்றியில் அடித்துச் சொல்லிய 'அயலி' வெப்சீரீஸ், அதிரிபுதிரியாக ஆண்டு தொடக்கத்திலேயே பரபரப்பைக் கிளப்பியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் வீரபண்ணை எனும் கிராமத்தில் பெண் குழந்தைகள் பருவமடைந்த உடனே படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைக்காக பருவமடைந்ததை மறைத்து படிப்பைத் தொடர்கிறாள் தமிழ்செல்வி. மூடநம்பிக்கையில் உழலும் அந்தக் கிராமம்... அவளை படிக்க வைத்ததா... முடக்கிப் போட்டதா?
தீட்டு, ஆணாதிக்கம், பெண் கல்வி மறுப்பு, குழந்தை திருமணம் என பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையான அனைத்து விஷயங்களுக்கு எதிராகவும் வித்தியாசமான கோணத்தில் சாட்டை வீசிய ‘அயலி’, இன்று வரையிலும் பெரும் பேசுபொருளே!
புர்கா
இந்த ஏஐ (AI) யுகத்தில் கூட, என்ன படித்திருந்தாலும் மதத்தாலும், சமூகத்தாலும் ஒரு பெண்ணை எளிதாகக் கூண்டுக்குள் அடைத்துவிட முடியும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நர்சிங் படித்த நாயகி. திருமணமான ஒரு வாரத்திலேயே கணவர் இறந்துவிடுகிறார். இதனால், 'இத்தாத்’ என்னும் மதச் சடங்கில் இருக்கிறாள் நாயகி. இஸ்லாம் மதப்படி, திருமணமான சில நாள்கள் அல்லது மாதங்களில் கணவன் இறந்துவிட்டால், இத்தகைய சடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இறந்த கணவனின் மனைவி கருவுற்றிருந்தால், கணவன் இறந்த நொடியிலிருந்து எந்த ஆணையும் பார்க்காமல் அப்பெண் தனியாக இருக்கவேண்டும். இது மாதிரியான எண்ணற்ற சடங்குகளை சங்கிலிகளாக்கி, பெண்கள் எப்படியெல்லாம் சமூகத்தில் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் புட்டுப்புட்டு வைத்தது புர்கா.
பொம்மை நாயகி
பெண்களுக்கு மட்டுமல்ல... குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தினம்தினம் கேட்டும், கடந்தும் வருகிறோம்.
டீக்கடைக்காரரின் மகள், பொம்மை நாயகி. அப்பா, அம்மாவுடன் திருவிழாவுக்குச் செல்கிறாள் சிறுமி. ஆதிக்க சாதியைச் சேர்ந்த மூவர், அவளை சிறார் வதைக்கு உள்ளாக்குகின்றனர். 'நீதி வேண்டும்' என்று கம்யூனிஸ்ட் நண்பர்களின் உதவியுடன் நீதிமன்றப் படி ஏறுகிறார் தந்தை. நீதிதேவதையோ கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறாள்.
ஒரு குழந்தை வன்கொடுமைக்கு ஆளானால்கூட, அந்தக் குழந்தை ஆதிக்க சாதியா... தாழ்ந்த சாதியா என்று ’ஆராய்ந்து’ நீதி தரும் அளவில்தான் இந்த நாகரிகச் சமூகம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைச் செவிட்டில் அறைந்து சொன்னாள், பொம்மை நாயகி.
ஃபர்ஹானா
‘இந்தக் காலத்துல பெண்கள் ஏரோபிளேனே ஒட்றாங்க’ என்று நாம் பெருமை பீற்றிக்கொண்டாலும், இன்னும் பல பெண்களுக்கு வாசற்படியை தாண்டுவதே பெரும்போராட்டமாகத்தான் இருக்கிறது.
வறுமையில் வாடினாலும், ‘கடன் வாங்கக்கூடாது, பெண்கள் வேலைக்கு போகக்கூடாது..’ என மதம் கூறுவதை பிடிவாதமாக பின்பற்றும் அப்பா. எப்படியோ அதை மீறி கணவன் உதவியுடன் கால்சென்டர் வேலைக்குச் செல்கிறாள் நாயகி. அங்கே ஒரு தோழன் கிடைக்கிறான். ஆரம்பத்தில் அவன் காட்டும் அன்பு, பின்னர் எப்படி நாயகியை ஓடஓட விரட்டுகிறது என்று நகரும் படம்... ஃபர்ஹானா.
வீடோ... சடங்கு சம்பிரதாயங்களால் கட்டிப்போடுகிறது. வெளியே சென்றாலோ.. ‘அன்பு’ என்ற போர்வையில் பாலியல் வன்முறையை ஏவுகிறது. இப்படி, பெண்களுக்கு எதிராக இந்தச் சமூகமும் மதங்களும் செய்துகொண்டிருக்கும் அநியாயங்களைப் அப்பட்டமாகத் தோலுரித்தாள் ஃபர்ஹானா.
அயோத்தி
ஆணாதிக்க மற்றும் மதவாதத் தந்தை, அன்பான அம்மா, இரண்டு குழந்தைகள். வடஇந்தியாவிலிருந்து ராமேசுவரத்திற்கு புனிதப் பயணம் வருகிறார்கள். தந்தையின் தவறான செய்கைகளால், அவர்கள் பயணிக்கும் வாடகைக் கார் விபத்தில் சிக்க, தாய் உயிருக்குப் போராடுகிறார். விஷயமறிந்து மனிதாபிமானத்தோடு ஆம்புலன்ஸோடு உதவிக்கு வருகிறார் நாயகன். ஆனால், ஆணாதிக்கம் மற்றும் மதச்சடங்குகளில் தீவிரமாக இருக்கும் தந்தையோ... இந்தக் கொடுமைக்கு நடுவேயும் தன்னுடைய கறார்த் தனங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறார். வழியிலேயே பரிதாபமாக உயிரிழக்கிறார் தாய்.
அம்மாவின் சடலத்துடன் ஊர்ப் போய்ச் சேரத் துடிக்கும் குழந்தைகள்; மதச்சடங்கைக் காரணம் காட்டி, உடற்கூராய்வை எதிர்க்கும் தந்தை; இதற்கு எப்படியாவது தீர்வு கண்டுவிடத் துடிக்கும் நாயகன்... என அயோத்தியின் ஒவ்வொரு காட்சியும்... கண்களைக் குளமாக்கும். தந்தையிடம் சொல்லக்கூடாது என்பதற்காக ... யாரோ முன்பின் தெரியாத ஒருவரிடம், ‘பையா...ரெஸ்ட் ரூம் ஜானாயே?’ என்று அந்தப் பெண் கேட்கும் காட்சி ஒன்றே போதும். ஆணாதிக்கத்துக்கு மரணஅடி கொடுத்தது.. 'அயோத்தி'!
ஸ்வீட், காரம், காபி
சமூகத்தின் கீழ் அடுக்காக இருந்தாலும், மேல் தட்டாக இருந்தாலும்... அனைவரும் பெண்களை நடத்தும் விதம் ஒன்றே.
அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். மாமியர், மருமகள், பேத்தி என மூன்று தலைமுறையும் ஆணாதிக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
குட்டக்குட்ட குனிந்தது போதும் என ஒருகட்டத்தில், சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஒரு டிரிப் செல்கின்றனர். அந்த டிரிப் அவர்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவித்ததா... அவர்களுக்கு கற்றுக்கொடுத்த பாடமென்ன?
தங்கக் கூண்டாக இருந்தாலும், இரும்புக் கூண்டாக இருந்தாலும் கூண்டு கூண்டுதான் என்கிற உண்மையை உடைத்தது... ஸ்வீட், காரம், காபி.
சித்தா
கோழிக் குஞ்சைப் போல குழந்தைகளை பொத்திப்பொத்தி வளர்த்தாலும், அவர்களை கொத்திச் செல்ல இந்தச் சமூகத்தில் கேடுகெட்ட கழுகுகள் இருக்கின்றன.
அண்ணன் மகளை உயிருக்கும் மேலாக வளர்க்கிறார் நாயகன். அவளின் தோழி சிறார் வதைக்கு ஆளாக, நாயகன் மீதி அந்த பழி விழுகிறது. அதிலிருந்து மீண்ட கணத்தில், அண்ணன் மகள் காணாமல் போகிறாள். அவளும் சிறார் வதைக்கு உள்ளாகிறாள். சிறுமியின் நிலையென்ன.. அவள் மீட்கப்பட்டாளா?
‘சித்தா... சித்தா’ என சித்தப்பாவை கொஞ்சிக் கொண்டிருந்த குழந்தை, சிறார் வதைக்கு உள்ளான பின், ஆண் என்பதாலேயே சித்தாவைப் பார்த்தும் மிரள்கிறது. சமூகத்தின் கோர முகத்தை கிழித்தது... சித்தா.
அன்னபூரணி
பெண்களின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே... மதம், பண்பாடு, கலாசாரத்துக்கு பிறகானதுதான் என்றே இந்தச் சமூகம் இயங்குகிறது.
பிராமண குடும்பத்தில் பிறந்த நாயகிக்கு, செஃப் ஆக வேண்டும் என்பது லட்சியம். செஃப் என்றால், மாமிசத்தை தொட வேண்டியதாக இருக்கும் என்று தடை போடுகிறது குடும்பம். வீட்டைவிட்டு வெளியேறி லட்சியத்துக்காகப் போராடும் நாயகி, வெற்றி கண்டாளா?
‘விண்வெளியை விட்டுத்தள்ளுங்கள். வீட்டுச் சமையலறையை தாண்டி, ஹோட்டல் சமையலறைக்குச் செல்லவேண்டும் என்றால்கூட இந்தச் சமூகம் தடைபோடவே செய்யும். பெண் என்றாலே போராட்டம்தான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக பதிய வைத்தாள்... அன்னபூரணி.
கண்ணகி
திருமணம், ஆயிரங்காலத்துப் பயிராக இருந்தாலும், இன்னும் அது பெண்களை வெறும் நுகரும் பண்டங்களாகவே வைத்திருப்பதுதான் கொடுமை.
திருமணத்துக்காகக் காத்திருக்கும் ஒரு பெண், கர்ப்பத்தை கலைக்க காதலனுடன் போராடும் ஒரு பெண், விவாகரத்து வேண்டாம் என்று கதறும் ஒரு பெண், திருமணத்தை வெறுக்கும் மற்றொரு பெண். காரணங்கள் என்னென்ன? இந்த நான்கு பெண்களையும் இணைக்கும் புள்ளி எது?
திருமணம், பல பெண்களுக்கும் சுமையாகவே மாறிவிடுகிறது. அது ஏன்... எப்படி... எதற்காக என்பதைத் தோலுரித்தாள் கண்ணகி.
காதல் தி கோர் (மலையாளம்)
‘கல்யாணம் ஆனா எல்லா சரியாயிடும்?’ என்னும் வார்த்தை... ஆயிரமாயிரம் காலத்து வேத வாக்கு. ஆனால், அதன் பின்னணியில் அழுக்கு மூட்டைகளே நிறைந்திருக்கின்றன.
நாயகன், நாயகிக்கு கல்யாணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. நாயகன், கவுன்சிலர் தேர்தலில் நிற்கிறார்... நாயகியோ, விவாகரத்து வழக்குடன் நீதிமன்றப் படிகளில் நிற்கிறார். கணவன் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பதுதான் அதற்காக அவர் சொல்லும் காரணம். வழக்கு என்னவாகிறது... தேர்தலில் வெற்றி கிடைத்ததா... ஊர், உலகம் சொல்வதென்ன?
தன்பாலின ஈர்ப்பு என்ற களத்தை ஆணின் கோணத்தில் மட்டும் சொல்லாமல், மனைவியான பெண்ணின் பார்வையிலிருந்தும் அலசியது இப்படம். பைசெக்ஷுவல், ஹோமோசெக்ஷுவல் என பாலியல் தேர்வு என்னவாக இருந்தாலும், இது அவரவர் விருப்பம், அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை மென்மையாக, பார்வையாளர்களுடனான ஓர் இணக்கமான, நெருக்கமான உரையாடலுடன் வலியுறுத்தியது... 'காதல் தி கோர்'.
from Vikatan Latest news
0 Comments