உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது, கற்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 சுரங்கப்பாதைத் தொழிலாளர்கள் உள்ளே இடர்பாடுகளில் சிக்கியிருந்தார்கள். 11-ம் தேதி சுரங்கத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்க, மீட்புப் படையினருடன் இந்திய ராணுவத்தினரும், பல்துறை அறிஞர்களும், நிபுணர்களும் பெரும் மீட்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களும், 17 நாள்கள் `பெரும்' போராட்டத்துக்குப் பிறகு, நேற்றிரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் தயார் நிலையிலிருந்த ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு, மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீட்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்த குழுவுக்கு, மக்கள் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். தங்கள் உறவினர்கள் மீட்கப்பட்டதையடுத்து, மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. நலமுடன் இருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான விஸ்வஜீத் குமார் வர்மா செய்தியாளர்களிடம் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ``நாங்கள் பணி செய்துகொண்டிருந்தபோது பயங்கரமான சத்தம் கேட்டது. நாங்கள் அதிர்ந்துபோய் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முற்பட்டோம். சில நிமிடங்களுக்குப் பிறகே நாங்கள் இடர்பாடுகளில் சிக்கிக் கொண்டதை அறிந்தோம். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் 10 முதல் 15 மணி நேரம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டோம்.
ஆனால், விரைவில் எங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் உலர் பழங்கள் வழங்கக் குழாய் போடப்பட்டது. எங்களிடம் தொடர்புகொள்ள ஒரு மைக் பொருத்தப்பட்டு, எங்களால் குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடிந்தது. அதற்குப் பிறகே, நாம் உயிருடன் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கை வந்தது. நான் இப்போது வெளியே வந்துவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு இப்போதுதான் தீபாவளி. இனிதான் அதைக் கொண்டாடுவேன்" என மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளி அனில் பேடியாவின் தந்தை, ``எங்களுக்கு நல்ல செய்தி கிடைத்தது. நான் என் மகனுடன் பேசினேன், அவர் நலமாக மீட்கப்பட்டதாகவும், தற்போது உடல்நிலை சரியில்லாமல், மருத்துவப் பரிசோதனையில் இருப்பதாகவும் கூறினார். அவர்கள் மீட்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தோம். அரசுகளும் எங்களுக்கு உதவியிருக்கின்றன" எனத் தெரிவித்தார்.
from Vikatan Latest news
0 Comments