Ticker

6/recent/ticker-posts

Ad Code

Euro Tech - Submarine: நீர்மூழ்கிக் கப்பலுக்கான ஐடியா எப்படி உருவானது? இதன் விபத்துகள் ஏன் மோசமானவை?

அன்று

நிலவின் மேற்பரப்பைப் பற்றி நமக்குத் தெரிந்ததை விடக் கடலின் அடிப்பரப்பைப் பற்றி நாம் அறிந்தது மிகக் குறைவான அளவே என்ற கூற்று ஒரு காலத்திலிருந்தது. ஆனால் மனிதனின் ஆழ்கடலைப் பற்றிய அறிவு நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகையோடு விசாலமடையத் தொடங்கியது.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நீர்மூழ்கிக் கப்பல் என்றாலே நம்பமுடியாத, சாத்தியப்படாத ஒரு விஷயமாகக் கருதப்பட்டது. ஆனால் நீருக்கடியில் மூழ்கிச் செல்லும் படகுகளுக்கான ஆரம்பத் திட்டங்கள் 1500-களின் பிற்பகுதியில் போடப்பட்டு, பின் 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் டச்சுக் கண்டுபிடிப்பாளரான கார்னெலிஸ் ட்ரெபெல் என்பவரால் முதல் நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

நீர்மூழ்கிக் கப்பல் என்று தமிழில் அழைக்கப்பட்டாலும், பொதுவாக ஏனைய மொழிகளில் இவை நீர்மூழ்கிப் படகு என்றே அழைக்கப்படுகின்றன. ஏனெனில் பண்டைய காலத்தில் இவை கப்பல்களிலிருந்தே நீரில் இறக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டமையால் இவ்வாறு அறியப்படுகின்றன.

17-ம் நூற்றாண்டில் கார்னெலிஸ் ட்ரெபெல் உருவாக்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பல்

உலகின் பல நவீன கண்டுபிடிப்புகளைப் போலவே, நீர்மூழ்கிக் கப்பலின் கதையும் சாண் ஏற முழம் சறுக்கிய ஒன்றுதான். அதுவும் பல முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் பயணம்தான். உண்மையில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய வரலாறு ஐரோப்பியப் புராணங்கள் வழியே கி.மு 332 வரை நீண்டு செல்கிறது. அலெக்சாண்டர் தி கிரேட் ஒரு கண்ணாடிக் குவளையில், கூட இரண்டு தோழர்களுடன், பிக்னிக் போவது போல மதிய உணவையும் பார்சல் கட்டிக்கொண்டு கடலின் அடிப்பகுதியில் என்ன இருக்கிறது என்று ஆராயச் சென்றார் என்கின்றன ஐரோப்பியப் புராணங்கள். சராசரியாக ஒரு மனிதனால் சாதாரணமாக மூச்சை அடக்கி வைக்க முடிகிற நேரத்தை விட அதிக நேரத்திற்கு ஒருவர் நீண்ட நேரம் நீருக்கு அடியில் சென்றதற்கான முதல் ஆதாரம் இதுதான்.

அதன் பிறகு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்குப் பின் லியோனார்டோ டாவின்சி 15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு ராணுவ டைவிங் முறையைப் பற்றிக் குறிப்பிடும் வரை நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய வேறு எந்தக் குறிப்புகளும் எழுதப்படவில்லை. 'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்று அப்போதே உணர்ந்த டாவின்சி, நிலத்திலேயே இத்தனை அட்டூழியங்கள் செய்பவன், நீருக்கு அடியில் சென்றால் அவ்வளவுதான், கடலையும் காலி பண்ணி விடுவான் என்று பயந்தே தனது கண்டுபிடிப்பு குறித்து மேற்கொண்டு எதையும் எழுதிவைக்காமல் போய்ச் சேர்ந்துவிட்டார்.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் கணிதவியலாளரும், கடற்படை அதிகாரியுமான வில்லியம் பார்ன் (1535 - 1583) என்பவர் ஒரு கப்பல் நீரில் மூழ்கி இயங்கக்கூடிய அடிப்படை தத்துவத்தை விவரித்தார். மரத்தால் செய்யப்பட்டு, நீர்ப்புகா தோலால் பூரணமாக மூடப்பட்ட ஒரு படகு முற்றிலும் நீருக்குள் மூழ்கி, கடலின் அடிப்பரப்பிற்குச் செலுத்தப்படலாம் என்று கடலில் வழிசெலுத்தல் குறிப்புகளை அவர் எழுதினார். பார்னின் யோசனை அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் அவரது நோட்டு புத்தகத்தைத் தாண்டி அப்பால் செல்லவில்லை என்றாலும், அவரது ஐடியா மற்றும் வடிவமைப்புக் கையேடு அதன் பிறகு வந்த ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகம் அளித்தது, குறிப்பாக கொர்னேலியஸ் ட்ரெபல் எனும் டச்சுக்காரரருக்கு!

1620 மற்றும் 1624-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீருக்குள் நீண்ட தூரம் செல்லக்கூடிய முதல் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ட்ரெபல் வெற்றிகரமாக உருவாக்கி முடித்தார். அவருடைய மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலானது, அப்போது இங்கிலாந்தை ஆண்ட கிங் ஜேம்ஸ்-I மற்றும் ஆயிரக்கணக்கான லண்டன்வாசிகளுக்கு முன்பாகக் காட்சிப்படுத்தப்பட்டது. கடலின் மேற்பரப்பிலிருந்து 15 அடி ஆழத்துக்கு வெற்றிகரமாகச் சென்று மூன்று மணி நேரம் நீரில் மூழ்கி, வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து கிரீன்விச் வரை பயணித்தது இந்தக் கப்பல்.

Turtle Submarine Model

பொதுவாகவே கடலுக்கு அடியில் பதுங்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துத் தாக்குவது கடினம். அதனால் கடலுக்குள்ளிருந்து அணுசக்தி ஏவுகணைகள் மூலம் உலகின் எந்த மூலைகளையும் அவற்றால் தாக்க முடியும். அதனாலேயே போர்க்களங்களில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. 1776-ல் அமெரிக்கரான டேவிட் புஷ்னெல் என்பவர் 'Turtle' என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.

அமெரிக்கப் புரட்சிப் போரின்போது நியூயார்க் துறைமுகத்தை முற்றுகையிட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படைக் கப்பலான HMS Eagle-ஐ தாக்க, இந்த Turtle பயன்படுத்தப்பட்டது. யேல் பல்கலைக்கழக மாணவனாக இருந்த போதே கன் பவுடர் நீருக்கு அடியிலும் வெடிக்கும் என்பதை டேவிட் புஷ்னெல் நிரூபித்தார். உந்துவிசைக்கு முதன்முதலில் ப்ரொப்பல்லர்களைப் பயன்படுத்திய Turtle, நியூயார்க் போரின் போது பிரிட்டிஷ் போர்க்கப்பலை மூழ்கடிக்க முயன்று தோல்வியடைந்தாலும், இது போருக்கான நீர்மூழ்கிக் கப்பல்களின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தது. புஷ்னெலின் முயற்சியை "மேதாவித்தனமான ஒரு முயற்சி" என்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் குறிப்பிட்டார்.

நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு, மிகவும் சக்திவாய்ந்த உந்துவிசை ஆலை எவ்வளவு முக்கியம் என்பதைக் காலப்போக்கில் மேற்குல நாடுகள் தெளிவாகப் புரிந்து கொண்டன. அதுவே காலப்போக்கில் நிலக்கரி மற்றும் பெட்ரோல் இன்ஜின்களில் இயங்கும் சப்மரைன்கள் உருவாக்கக் காரணமானது.

1863-ம் ஆண்டில், 'மனித உந்துவிசை' தேவைப்படாத Plongeur என்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் பிரெஞ்சு கடற்படையால் ஏவப்பட்டது. ஆனாலும் நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாற்றில் ஓர் அதிரடி திருப்புமுனையாக அமைந்தவை ஜெர்மனி தயாரித்த U-Boat-கள்தான். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது முக்கிய ஆட்ட நாயகனாக, போரின் போக்கையே அதிரடியாக மாற்றி அமைத்த ஜெர்மனியின் U-Boatகள் “பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல..?” எனக் கெத்து காட்டும் அளவுக்கு ஒரு டெரரான முகத்தைக் காட்டின!

நீர்மூழ்கிக் கப்பல் (உள்ளே)

முதலாம் உலகப் போரில் (1914-1918) டீசல் மின்சார இயக்கியின் உதவியுடன் நீண்ட தூரம் பயணிக்க முடிந்த ஜெர்மனின் யு-போட்கள் எதிரி கப்பல்களை எல்லாம் தூக்கிப் போட்டு சரமாரியாகப் பந்தாடியது. யு-போட்களின் கடலுக்கு அடியில் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் (Endurance) 6,000 மைல்களுக்கு மேல் அதிகரித்தது. RADAR மற்றும் SONAR தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் யு-போட் சப்மரைன்களின் செயல் திறனை மேலும் அதிகரித்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் U-Boat-கள் மொத்தம் 175 ராணுவக் கப்பல்கள் உட்பட 3,000 நேச நாட்டுக் கப்பல்களுக்குச் சமாதி கட்டின.

எதிரிகளின் கப்பல்களை சுக்குநூறாகச் சிதறடிப்பது, விநியோக வழிகளைச் சீர்குலைப்பது, துறைமுகங்களை முற்றுகையிடுவது, வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது, நேச நாட்டுப் படைகளை முடக்குவது என எதிரி நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது ஜெர்மனியின் U-Boat நீர்மூழ்கிக் கப்பல்கள்.

இன்று

இன்றைய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை 200 ஆண்டுகளுக்கும் மேலான பொறியியல் பரிணாம வளர்ச்சியின் பிரமாண்டமான விஸ்வரூபம் என்று தாராளமாகச் சொல்லலாம்! காரணம் Ballistic ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் போன்ற பேராபத்தை விளைவிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை எல்லாம் ஆழ்கடலில் அடியில் சுமந்து சென்று, ஒரு தேசத்தையே சுக்குநூறாக நிர்மூலமாக்கக்கூடிய வல்லமை கொண்ட ஒரே ராணுவத் தளவாடமாக இன்றைய சப்மரைன்கள் விஸ்வரூப வளர்ச்சியடைந்து நிற்கின்றன.

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு சப்மரைன்கள் எவ்வளவு பலமாக இருக்கின்றனவோ அதே அளவு எதிரி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்தன. போர்க் காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களில் கூட எதிரி நாட்டை வேவு பார்ப்பதில் சப்மரைன்கள் முக்கிய பங்கு வகித்தன. இதனாலேயே காலப்போக்கில் எதிரி நாட்டு சப்மரைன்களை மோப்பம் பிடிப்பதற்கு என்று Anti-Submarine Technology கண்டுபிடிக்கப்பட்டது. கடற்படைப் பாதுகாப்பின் முக்கியமான அம்சமாகக் கருதப்பட்ட இது எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் கண்டுபிடித்துத் தாக்குதல் நடத்த உதவியது. ஆனால் அதற்கும் ஒரு மாற்றீடு கண்டுபிடித்து அந்தத் தொழில்நுட்பத்தின் கண்ணிலும் மண்ணை தூவித் தப்பிச் செல்கின்றன இன்றைய நவீன அணுசக்தி சப்மரைன்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஜனவரி 21, 1954 அன்று முதல் அணுசக்தியால் இயங்கும் கப்பலான USS Nautilus ஏவப்பட்டதில் தொடங்கியது. இவை நீர்மூழ்கிக் கப்பல்களுக்குக் காலவரையின்றி நீருக்கடியில் இயங்கும் திறனைக் கொடுத்தது. அதற்கு அடுத்தபடியாக அறிமுகப்படுத்தப்பட்ட "Tear Drop" சப்மரைன்கள் நீருக்கடியில் அதிக வேகத்தையும், செயற்பாடு ஆற்றலையும் கொண்டிருந்தன. Nuclear Power, Hull Design, காற்று உருவாக்கம் மற்றும் மின் உணரிகள் (Air Generation and Electrical Sensors) போன்ற தொழில்நுட்பங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆழ் கடலின் அச்சுறுத்தும் அரக்கனாக மாற்றின.

இன்று உலகின் அனைத்து வல்லரசுகளும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு சப்மரைன்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியிலிருந்தாலும், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களின் பவர் இவர்கள் அனைவருக்கும் சவால் விடும் ஒரு வலிமைமிகு சக்தியாக உள்ளது.

எவ்வளவுக்கு எவ்வளவு சப்மரைன்கள் ஆய்வு, ஆராய்ச்சி, மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய அம்சம் வகிக்கின்றனவோ அதே அளவுக்கு ஆழ்கடலின் அடியில் அதன் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலும் அதிகமாகத்தான் உள்ளது. வரலாற்றில் பதியப்பட்டுள்ள அத்தனை நீர்மூழ்கிக் கப்பல்களின் விபத்துகளுமே யுத்தங்கள், மோதல்கள் முதல் இயந்திரக் கோளாறுகள் வரை, நீருக்கடியில் காத்திருக்கும் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நீர்மூழ்கிக் கப்பல்

என்னதான் ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் ராணுவ பாதுகாப்பில் முக்கிய பிஸ்தாவாக இருந்தாலும், விபத்து என்று ஒன்று நிகழும் போது, தொழில்நுட்ப கோளாறு, தோல்வி போன்ற பேச்சுக்கே இடமில்லாத 'Do or Die' நிலைமைதான். அதாவது சப்மரைனின் ஏதாவது ஒரு பகுதி தோல்வியுறும் பட்சத்தில், அதில் பயணிக்கும் அனைவருக்குமே குளிர் உறைந்த இருள் சூழ் ஆழ் கடலில், ஜல சமாதி நிச்சயம்.

இந்த வருடம் ஜூன் 22 அன்று டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்க்கப் போகிறோம் என்று கிளம்பிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற 5 பேரும், இறந்துவிட்ட செய்தியை நீங்கள் அனைவருமே கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஏப்ரல் 10, 1963 அன்று 129 மாலுமிகளுடனும் மூழ்கிய USS Thresher என்ற நீர்மூழ்கிக் கப்பலின் விபத்து முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பேரழிவாகவும், இன்றுவரை அதிக இறப்பு எண்ணிக்கை உள்ள சப்மரைன் விபத்தாகவும் பதியப்பட்டது.

அதே போல அட்லாண்டிக்கின் அசோர்ஸ் தீவுகளுக்கு 400 மைல்கள் தென்மேற்கில் காணாமல் போன USS Scorpion எனும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 99 பேரும் உயிரிழந்தனர். ஸ்பெயின் நாட்டின் வடக்கே பிஸ்கே விரிகுடாவில், மின்சார கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்ததில் மூழ்கிய K-8 எனும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலிலிருந்த 52 மாலுமிகளும் கொல்லப்பட்டனர். Komsomolets K–278 என்ற ரஷ்யக் கப்பலில் ஏற்பட்ட தீயினால் அதிலிருந்த 69 உறுப்பினர்களில் 49 பேர் உயிரிழந்தனர். சமீபத்திய மிக மோசமான நீர்மூழ்கிக் கப்பல் பேரழிவாக ரஷ்யாவின் K-141 Kursk அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 12, 2000 அன்று வெடித்துச் சிதறி அதன் குழுவில் உள்ள 118 உறுப்பினர்களும் உயிரிழந்தனர். இப்படி நீர்மூழ்கிக் கப்பல் வரலாற்றில் நிகழ்ந்த விபத்துக்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட கப்பலில் பயணித்த மொத்தப் பேரையும் காவுகொண்டு கோரமான விபத்தாகவே பதியப்பட்டுள்ளன.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து

பாதுகாப்புக்கு அப்பால், அறிவியல், ஆய்வு மற்றும் ஆராய்ச்சியிலும் நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் வாழ் உயிரினங்கள், புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காகக் கடலின் அறியப்படாத ஆழங்களை இவை ஆராய்கின்றன. நீருக்கடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும், கடல் வளங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகளுக்கும், கடல் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்தும் ஆழ்கடல் ஆராய்ச்சியை நடத்துவதற்கும் இவை முக்கிய பங்களிக்கின்றன.

இன்று உலகின் வல்லரசுகளிடம் எவ்வளவு நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன என்ற எண்ணிக்கையும் கூட சர்வதேசத்தில் அவர்களின் சக்தியையும் ஆளுமையையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணியாகி விட்டது. அடுத்து உலக நாடுகளுக்கு இடையே மூன்றாம் உலக யுத்தம் என்ற ஒன்று உருவாகும் பட்சத்தில், அதில் டிரோன்களைப் போலப் பிரதான ஆயுதமாக மாறப்போவது சப்மரைன்களும்தான். அதனால் ஏற்படப்போகும் இழப்புகளும் சேதாரமும் நிச்சயம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.

நீர்மூழ்கிக் கப்பல்களில் அடுத்த பெரிய அறிவியல் முன்னேற்றம் என்னவாக இருக்கும்? இப்போதைக்கு விடை தெரியவில்லை. ஆனால் மிகப் பிரமாண்டமாக, அதிரடியாக இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

- Euro Tech Loading...



from Latest news

Post a Comment

0 Comments