Ticker

6/recent/ticker-posts

Ad Code

நடத்தைமீது சந்தேகம்: மனைவிக்குக் கத்திக் குத்து; ஜேசிபி வாகனங்களுக்குத் தீ - வில்லங்க கணவர் கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நடத்தைமீது சந்தேகப்பட்டு மனைவியைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவரை, போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 42). இவர் வெங்கடாசலபுரம் செக்போஸ்ட் அருகே வாடகையின்பேரில் ஜேசிபி வாகனங்கள் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்குச் சொந்தமான ஜேசிபி. வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக தஸ்தகீருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்குக் கிடைத்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், ஜேசிபி வாகனங்கள் பற்றி எரிவதை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இது குறித்து, தஸ்தகீர் சாத்தூர் போலீஸில் புகார் அளித்தார்.

ஜேசிபி

அதன்பேரில் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜேசிபி வாகனங்களுக்கு யாரோ மர்மநபர் தீ வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் விசாரணையை மேலும் தீவிரமாக மேற்கொண்டதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா என்பவர்தான் ஜேசிபி வாகனங்களுக்குத் தீ வைத்தார் என்ற விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், ராஜாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்தன. தஸ்தகீரின் சகோதரரான அஸ்கர் அலி, ஜேசி‌பி வாகன ஓட்டுநராக அவரிடம் பணியாற்றி வருகிறார்.

இவர் அண்மையில் இரவு, பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜாவின் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராஜா, இருவரின்மீதும் சந்தேகப்பட்டு, சண்டையிட்டிருக்கிறார். எனவே அஸ்கர் அலி அங்கிருந்து சென்றுவிட்டார். இருந்தபோதிலும், ஆத்திரம் அடங்காத ராஜா, கத்தியால் தன் மனைவியைக் குத்திக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பக்கத்து நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தஸ்தகீருக்குச் சொந்தமான 3 ஜேசிபி வாகனங்களையும் அவர் தீயிட்டுக் கொளுத்தியதும், விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராஜாவைக் கைதுசெய்த சாத்தூர் டவுன் போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.



from Vikatan Latest news

Post a Comment

0 Comments