உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி அருகே, பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா-தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதையை அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், நவம்பர் 12-ம் தேதியன்று சுரங்கத்துக்குள் நிலச்சரிவு ஏற்பட்டு, உள்ளே பணியிலிருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர். பின்னர், பல்வேறு குழுக்களின் 17 நாள்கள் பெரும் போராட்டத்துக்குப் பின்னர், ஒருவழியாக அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த மீட்புப் பணியில், சுரங்கப் பாதை நிபுணர்கள், தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். இத்தகைய மன அழுத்தம் நிறைந்த மீட்புச் சூழ்நிலையிலும் தனது அமைதி மற்றும் நிதானமான அணுகுமுறையால் சமூக ஊடகங்களில் பலரால் பாராட்டப்பட்டவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ். கடந்த 17 நாள்களாகச் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் தொடர்ந்து ஆறுதலும், தொழிலாளர்களை மீட்கத் தீவிர முயற்சியும் மேற்கொண்டு வந்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் நிலத்தடி உள்கட்டமைப்பு, கட்டுமான அபாயம், உலகளவிலான சுரங்கப்பாதை உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவருக்குச் சுரங்கப்பாதை, தீ பாதுகாப்பு தொடர்பான சிறப்புப் பணிக்காக 2011-ம் ஆண்டில் ஆலன் நெய்லாண்ட் டன்னலிங் சொசைட்டி விருது வழங்கப்பட்டது. மேலும், தேசிய தீ பாதுகாப்பு சங்கத்தின் 2022 குழு சேவை விருதும் பெற்றிருக்கிறார்.
புலனாய்வாளர், பல்வேறு துறைகளில் நிபுணர், ஆலோசகர் எனப் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். மேலும், கடந்த 30 வருடங்களாக பொறியியல், புவியியல், சட்டம் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் துறை சார்ந்த பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். இதற்கிடையில், பாரிஸ்டராகவும், பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்வெஸ்டிகேட்டர்ஸ்-ல் உறுப்பினராகவும், டோக்கியோ நகரப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வருகை பேராசிரியராகவும் பங்களிக்கிறார்.
உத்தரகாண்ட் மாநில மீட்புப் பணியில் இவரது பங்களிப்பு குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பெருமிதத்துடன் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,"41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. ஆஸ்திரேலியா பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் - வும் ஒரு பங்கைக் கொண்டிருந்தது பெருமையாக இருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக தனது மீட்புப்பணி குறித்துப் பேசிய சுரங்க நிபுண அர்னால்ட் டிக்ஸ், மலை சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பதை விளக்கினார். அப்போது,"எனக்கு, இது ஒரு பழங்காலக் கதை போன்றது... அந்த 41 பேரையும் ஒரு தாயைப் போலப் பாதுகாத்து, அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், மலை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கப்பாதைக்குள் முழுவதுமாக பாதுகாப்பாக இருக்கிறார்கள்... அந்த மக்கள் எப்போது, எந்த வாசலிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதை மலையின் விருப்பம்தான் தீர்மானிக்கும்" எனக் குறிப்பிட்டு நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த மீட்புக்குப் பணி முடிந்த பிறகு,"மக்களுக்கான சேவை செய்வதும், ஒரு பெற்றோராக, அனைவருக்கும் உதவுவதும் எனது மரியாதை. தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்குப் பத்திரமாக அழைத்துச் செல்கிறார்கள்" எனத் தெரிவித்து நெகிழ வைத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Vikatan Latest news
0 Comments