`காவிரி பிரச்னை; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!' - டி.ஜி.பி
``காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாகச் சிலர், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள், போஸ்டர்களை தற்போது நடந்தவைபோலச் சித்திரித்து வதந்தி பரப்பிவருகின்றனர். இத்தகைய வதந்திகள் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும். வதந்தி பரப்புவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்ப வேண்டாமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்." - தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால்
`வங்கிக் கணக்கு முடக்கத்தால் சிரமத்தில் இருக்கிறேன்!' - ஆர்.கே.சுரேஷ்
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில், தொடர்புடைய பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால், தான் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாகவும், வங்கிக் கணக்கை விடுவிக்க வேண்டுமென்றும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆர்.கே.சுரேஷ். அதை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்திருக்கிறது.
`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!' - சென்னை உயர் நீதிமன்றம்
கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி நிலங்களாக அரசு அறிவித்தது. இந்த நிலையில், பட்டா வழங்கக் கோரி அவரின் வாரிசுகள் சிவராஜ், பாலாஜி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அறிக்கை சமர்ப்பித்த தமிழக அரசு, `நிலம் மீட்கப்பட்டது. நேரில் சென்று மீண்டும் ஆய்வு செய்தபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ., பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஆகியோர் பல கட்டுமானங்களை ஏற்படுத்தியிருந்தனர்' எனத் தெரிவித்திருந்தது.
அதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ``நில உரிமை மாற்றம், அழுத்தத்தின் காரணமாக நடைபெற்றதா அல்லது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டார்களா என விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். நிலத்தில் சட்டவிரோதமாகக் குடியிருந்தவர்கள், கட்டுமானங்களை மேற்கொண்டவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க அனுமதிக்க முடியாது. பொது ஊழியர் என்கிற பெயரில் அரசுச் சொத்தை அபகரிக்க அனுமதிக்க முடியாது. நிலத்தையும் கட்டடத்தையும் மீட்டு, பொதுப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். சட்டவிரோதமாகக் குடியிருப்போரை நான்கு வாரங்களில் அப்புறப்படுத்தி, நவம்பர் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
`அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசு வேலை!' - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
``அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்குச் சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றனர்!" - டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
`25% சிறு, குறு தொழில்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன!' - எடப்பாடி பழனிசாமி
``விடியா தி.மு.க-வின் இருண்ட ஆட்சியில் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருள்களின் விலை உயர்வு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், மின்சாரக் கட்டண உயர்வு ஆகியவற்றால் அல்லாடிக்கொண்டிருக்கின்றன சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள். தமிழகமெங்கும் சுமார் 25% சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. உடனடியாக மின்கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும்" என தி.மு.க அரசை வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
from Latest news
0 Comments