சீனாவில் நடந்து வரும் ஆசியப்போட்டிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி 20 ஓவர்களில் 314 ரன்களை எடுத்து வரலாற்று சாதனையைச் செய்திருக்கிறது. மேலும், இந்தப் போட்டியில் தீபேந்திர சிங் என்கிற வெறும் 9 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். குஷால் மல்லா என்கிற வீரர் 34 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார். டி20 வரலாற்றின் அதிகவேக சதம் மற்றும் அரைசதமாக இந்த சாதனைகள் பதிவாகியிருக்கிறது.
மங்கோலியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் நேபாள அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது. தொடக்கத்தில் சில ஓவர்களுக்கு நேபாள அணி இயல்பாகத்தான் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தது. 7.2 ஓவர்களில் 66 ரன்களை மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், அடுத்த 12.4 ஓவர்களில் நேபாள அணியின் பேட்டிங் அசுரத்தனமாக இருந்தது. அந்த கடைசி 12.4 ஓவர்களில் மட்டும் 248 ரன்களை நேபாளம் எடுத்திருந்தது. ஏறக்குறைய ஓவருக்கு 19 ரன்களை எடுத்திருக்கின்றனர். இப்படியான ரன் வீக்கத்திற்கு காரணமாக இருந்தவர்கள் தீபேந்திர சிங் மற்றும் குஷால் மல்லா ஆகியோர் தான்.
அதிரடியாக ஆடிய குஷால் மல்லா 34 பந்துகளில் சதத்தை எட்டியிருந்தார். இதற்கு முன்னர் ரோஹித் சர்மா, டேவிட் மில்லர் சர்வதேச டி20 போட்டிகளில் 35 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதம் என்கிற சாதனையாக இருந்தது.
அந்த சாதனையை குஷால் மல்லா முறியடித்தார். மொத்தமாக 50 பந்துகளை ஏதிர்கொண்டிருந்தவர் 137 ரன்களை எடுத்திருந்தார். இதில் 12 சிக்சர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். பவுண்டரி சிக்சர்களிலேயே தனியாக சதம் அடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேமாதிரி,
தீபேந்திர சிங் வெறும் 9 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். இதற்கு முன்னர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சர்வதேச டி20 போட்டிகளின் அதிவேக அரைசதமாக இருந்தது.
அந்த சாதனையை இப்போது தீபேந்திர சிங் முறியடித்திருக்கிறார். மொத்தமே 10 பந்துகளைத்தான் எதிர்கொண்டிருந்தார். 52 ரன்களை அடித்திருந்தார். 10 பந்துகளில் 8 பந்துகளை சிக்சராக மாற்றியிருந்தார். தொடர்ச்சியாக பந்துகளுக்கு 6 சிக்சர்களும் இதில் அடக்கம். மீதமுள்ள இரண்டு பந்துகளிலும் தலா இரண்டு ரன்கள் ஓடியிருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 520 ஆக இருந்தது. இப்படி ஒரு அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடிக்கும் முதல் வீரர் தீபேந்திர சிங் தான். இடையில் நேபாள அணியின் கேப்டன் ரோஹித் பாடெலும் 27 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். மொத்தமாக 20 ஓவர்களில் 314 ரன்கள். சர்வதேச டி20 வரலாற்றில் எந்த அணியும் 300 ரன்களை கடந்ததே இல்லை. நேபாள அணி முதல் முதலாக அந்த சாதனையை செய்திருக்கிறது. இந்த இன்னிங்ஸில் நேபாள அணி மொத்தமாக 26 சிக்சர்களை அடித்திருந்தது. இதுவுமே புதிய சாதனைதான்.
315 ரன்களை நோக்கி சேஸிங்கை தொடங்கிய மங்கோலியா அணி வெறும் 41 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நேபாள அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றிருக்கிறது.
இந்தப் போட்டியை பொறுத்தவரைக்கும் நேபாள அணி செய்திருப்பது எல்லாமே 'ரெக்கார்ட் ப்ரேக்கர் இல்ல; ரெக்கார்ட் மேக்கர்!' வகைதான்.
from Latest news
0 Comments