நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெற ஊழியர்களை நியமிக்கும் படி வங்கிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ``ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுதோறும் தாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கான வாழ்நாள் சான்றிதழை (Life Certificate) வழங்க வேண்டும்.
நாடு முழுவதிலும் சுமார் 69.76 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். முக அங்கீகார தொழில் நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தோ, வங்கிக் கிளையிலோ டிஜிட்டல் முறையில் உயிர் சான்றிதழை ஒவ்வொரு குடிமகனும் சமர்ப்பிக்க முடியும்.
80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் ஓய்வூதியதாரர்கள், முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான வசதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கிகள் பல்வேறு தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் தகவல் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலம் பரவலாக விளம்பரப்படுத்த முடியும். அதோடு முக அங்கீகார வலைதள இணைப்போடு கூடிய மெசேஜ் அல்லது இ-மெயிலை சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அனுப்பலாம்.
ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கு ஓய்வூதியம் வழங்கும் அனைத்து வங்கிகளும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் களைச் சமர்ப்பிப்பதற்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.
80 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை நவம்பர் மாதத்துக்குப் பதிலாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 முதல் சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டில் மத்திய அரசு வங்கிகளைக் கேட்டுக்கொண்டது. அதன்படி 80 வயதுக்குக் கீழுள்ள ஓய்வூதியதாரர்கள் நவம்பரில் தங்கள் வாழ்நாள் சான்றிதழை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.
from Latest news
0 Comments