Ticker

6/recent/ticker-posts

Ad Code

எதிர்நீச்சல்: `புது ஆதி குணசேகரன் வந்து விட்டார்; அவர் யாராக இருக்கும்?' அப்செட்டில் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் `எதிர்நீச்சல்' சீரியலுக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் தனக்கென தனியொரு இடம் பிடித்தவர் நடிகர் மாரிமுத்து.

அவரது கம்பீரமான குரல் பலரையும் கட்டிப் போட்டது. குடும்பத்தில் ஒருவராக அவரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். புகழின் உச்சிக்கு சென்றவரை காலம் அழைத்துக் கொண்டது. அவரது மறைவுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் யார்? என்பது சமூகவலைதள பக்கங்களில் பேசு பொருளானது.

`எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன்

பலரும் தங்களுக்குப் பிடித்தவர்களை சாய்ஸாகத் தெரிவித்தனர். ஆனால், அவர் இடத்தில் யாரையும் வைத்து எங்களால் நிச்சயம் பார்க்க முடியாது என்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக இருந்தது. சீரியலின் கதைக்களம் மாறப் போகிறது என்கிற செய்தி வைரலான நிலையில் இப்பொழுது மீண்டும் கதையின் போக்கு மாறியிருக்கிறது.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அண்ணன் ஒருவர் இருப்பதாகவும், அவர் யார் என்பதை அறிமுகப்படுத்தி கதையின் போக்கு அவரை நோக்கி சில நாட்கள் நகர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. முந்தைய நாள் ஒளிபரப்பான எபிசோடில் இயக்குனர் க்ளோஸ் அப் ஷாட்டில் ஒருவர் நடந்து வருவது போல அவரது கால்களை மட்டும் காட்டியிருந்தார். அதனால் ரசிகர்கள் பலரும், `புது ஆதி குணசேகரன் வந்து விட்டார்... அவர் யாராக இருக்கும்?' என மீண்டும் கருத்துகளை பதிவிட தொடங்கிவிட்டனர். 

மாரிமுத்து - வேலராமமூர்த்தி

ஆனால், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் அப்படி யாரையும் காட்டாமல் அவர் செருப்பை விட்டுவிட்டு சென்று விட்டது போன்றும், விரைவில் வருவார் என்பது போன்றும் காட்டியுள்ளனர். இதனால் இப்போதைக்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு யாரையும் உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகியுள்ளது. வேலராமமூர்த்தி படத்தில் பிஸியாக இருக்கிறார். பசுபதி, அழகம் பெருமாள், இளவரசு இவர்களாகத்தான் இருக்கும்... என மக்களின் சாய்ஸ் பட்டியலும் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஒன்று, கதைக்களம் மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யாரையாவது நடிக்க வைக்க வேண்டும்... அப்படியில்லை எனில் அந்தக் கதாபாத்திரம் இறந்தது போன்றே காட்டிவிட்டு புதியதாக கதையை எடுத்துச் செல்லலாம் என்றும் பல்வேறு விதமான கமென்ட்ஸ்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. 

`எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன்

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்னமும் கதையை இழுத்துக் கொண்டிருக்காமல் இயக்குனர் விரைந்து கதையின் ஓட்டத்தை மாற்றி அமைத்தால் எதிர்நீச்சல் ரசிகர்கள் தொடர்ந்து அந்தத் தொடரை ரசித்துப் பார்க்க வழிவகை செய்யும்!

ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வேறு ஒருவர் நடித்து நீட்டிக்கப்பட வேண்டுமா அல்லது கதையின் போக்கை மாற்ற வேண்டுமா? உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!



from Latest news

Post a Comment

0 Comments