கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது போத்தராவுத்தன்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கருப்பையா (29). இவர், கட்டட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கருப்பையா தனது தாய்மாமன் மகளான 16 வயது சிறுமியை ஆறு மாதமாக காதலித்து, கடந்த 2022 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் குள்ளம்பட்டியில் உள்ள காட்டு பெருமாள் கோவியிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தை இரண்டு வீட்டாரும் விரும்பியே செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இருவரும் கணவன், மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானதால் சிறுமியின் பெற்றோர் அந்த சிறுமியை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்ததோடு, அந்த சிறுமிக்கு திருமண வயது வரவில்லை என்பதை உணர்ந்த மருத்துவர்கள், இதுகுறித்து மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் கொடுத்த புகாரின் படி, குளித்தலை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, அந்த சிறுமிக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்பதை அறிந்து, உடனடியாக குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கருப்பையா மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தார். அதன்பிறகு, கரூர் மகிளா நீதிமன்றத்தில் கருப்பையாவை ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர். சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கைதாகியுள்ள சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest news
0 Comments