`உங்களால் பறக்க முடியவில்லையா... ஓடுங்கள். உங்களால் ஓட முடியவில்லையா... நடந்து போகவும். உங்களால் நடக்க முடியவில்லையா... தவழ்ந்து போகவும். ஆனால், நீங்கள் என்ன செய்தாலும் தொடர்ந்து முன்னேறிப் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்.’ - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.
அவர் பரம்பரைப் பணக்காரர் இல்லை. ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் இல்லை. பிரபல விளையாட்டு வீரர் இல்லை. அரசியலில் சாதிப்பது, சினிமாவுக்குக் கதை எழுதுவது, பாடுவது, நடனமாடுவது போன்ற தனித்துவமான திறமை ஒன்றுகூட இல்லை. அவர் ஒரு சாமானியன். ஒருகட்டத்தில் சாதித்தே தீருவது என வீறுகொண்டு எழுந்தார். சாதித்தார். அவர், கிரான்ட் கார்டன் (Grant Cardone).
ஒருவருக்கு வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அநேகம்.ஒருவரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் விஷயங்கள் உண்டு. கிரான்ட் கார்டன் இரண்டாவது ரகம். 1958. அமெரிக்காவின் லூசியானாவிலிருக்கும் லேக் சார்ல்ஸில் பிறந்தார். கொஞ்சம் பெரிய குடும்பம். அவரையும் சேர்த்து ஐந்து குழந்தைகள். அப்பா கர்ட்டிஸ் லூயிஸ் கார்டன், இன்ஷூரன்ஸ் கம்பெனி நடத்தினார். ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார். பிறகு பங்குச் சந்தையில் புரோக்கரானார். எல்லாவற்றிலும் சுமாரான வருமானம். எழுந்து நடக்க ஆரம்பிக்கும் குழந்தை, `தத்தக்கா பித்தக்கா’ என்று நடப்பதுபோல குடும்பம் நடை பழகிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த இடி இறங்கியது. அப்பா கர்ட்டிஸுக்கு தீடீர் ஹார்ட் அட்டாக். மருத்துவமனைக்குப் போகக்கூட அவகாசம் தராமல் இறந்துபோனார். அப்போது கார்டனுக்கு வெறும் 10 வயது.
அம்மா கான்செட்டா நீல் கார்டன் இடிந்துபோனார். ஐந்து குழந்தைகள். குடும்பத்தின் மொத்த பாரமும் இப்போது அவர் தலையில். சினிமாவில் நிகழ்வதுபோல துயரக் காட்சிகள் நடந்தேறின. அப்பா விட்டுச் சென்றிருந்தது சொற்ப தொகை. வாழ்ந்த வீட்டை விற்றார்கள். சுமாரான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார்கள். இருப்பதை சாப்பிடப் பழகிக்கொண்டார்கள்; அவ்வப்போது வயிற்றைக் காயப்போடவும் கற்றுக்கொண்டார்கள்.
அப்பா இல்லாத வெறுமை கார்டனை ரொம்பவே படுத்தியெடுத்தது. அப்பா இறந்து சில வருடங்களிலேயே கார்டனின் மூத்த சகோதரரும் இறந்துபோனார். பல வருடங்களுக்குத் தனிமையும், துயரமும், சோகமும் அவரை விடாமல் பற்றியிருந்தன. கூடவே வேண்டாத சகவாசம். அந்த சகவாசம் கார்டனுக்குக் கற்றுக்கொடுத்தது போதைப் பழக்கம். 16 வயதிலேயே போதைக்கு அடிமையானார் கார்டன்.
``என் வெற்றிக்கு வழிகாட்டவேண்டிய, நான் எந்த வேலையைச் செய்தால் முன்னேறுவேன் எனக் கற்றுக்கொடுக்கவேண்டிய, குடும்பத்துக்கு ஆதாரமாக, பலமாக இருந்த என் தந்தையை நான் இழந்துபோனேன். அதை என்னால் தாங்க முடியவில்லை. போதை சிகரெட்டைப் பிடிக்க ஆரம்பித்தேன். முதல் நாள் `இதை ஏன்தான் பிடிக்கிறோமோ’ என்று தோன்றும். தூக்கிப்போடுவேன். மறுநாள் மறுபடியும் புகைக்க ஆரம்பித்துவிடுவேன். அந்த அளவுக்கு வெறுமை என்னை ஆட்கொண்டிருந்தது’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் கார்டன்.
வீட்டில் அமைதியில்லை. அம்மாவுடன் சதா சண்டை. வெளியிலும் நிம்மதியில்லை. காரணம், கார்டனின் போதைப் பழக்கம். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அது ஒரு மழை இரவு. லேசாகப் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்தபடி வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார் கார்டன். ஒரு கும்பல் வழிமறித்தது. வழிப்பறிக் கொள்ளையர்கள். கார்டனுக்கோ போதை தலைக்கேறியிருந்தது. உடம்பில் தெம்பும் வலுவும் இருந்தாலும், அந்த நேரத்தில் அவரால் அவர்களுடன் போராட முடியவில்லை. அவர்களிடம் கைத்துப்பாக்கி வேறு இருந்தது. அவர்களில் ஒருவன் தன் கையிலிருந்த பிஸ்டலால் கார்டனின் தலையிலும் முகத்திலும் கொடூரமாகத் தாக்கினான். திரும்பத் திரும்பத் தாக்கினான். ரத்தம் சொட்டச் சொட்டத் தரையில் மயங்கிவிழுந்தார் கார்டன். கும்பல், அவரிடமிருந்த வாட்ச், சிறிய தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடியது.
உலகில் நல்ல மனசுக்காரர்களும் இருக்கிறார்கள்... அல்லவா? யாரோ பார்த்து, போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தந்தார்கள். கார்டன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தலையில் தையல்போட்டார்கள். அம்மா கான்செட்டா நீல் வந்து பார்த்தபோது கார்டனை அவருக்கு அடையாளமே தெரியவில்லை. அந்த அளவுக்கு முகத்திலும் தலையிலும் தாக்கியிருந்தார்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள். ``இந்த நிலைமையிலயா உன்னை நான் பார்க்கணும்... கடவுளே...’’ அம்மா அழுது புலம்பினார்.
எல்லாவற்றுக்கும் முடிவு ஒன்று இருக்கிறதுதானே? கார்டன் வாழ்க்கையிலும் அது நடந்தது. உடல்நிலை தேறி வீட்டுக்கு வந்தார். கைகளில் நடுக்கம். பல ஆண்டு போதைப் பழக்கம் அவரை `வா... வா...’ என்று அழைத்துக்கொண்டிருந்தது. அம்மா, அன்பாகச் சொல்லிப் பார்த்தார். கெஞ்சிக் கேட்டார். அதட்டிப் பார்த்தார். அழுது பார்த்தார். கார்டன் போதைப் பழக்கத்தை விடுவதாக இல்லை. அம்மா அதிரடி முடிவெடுத்தார்.
``உன் ஒருத்தனால மத்த பிள்ளைங்களோட வாழ்க்கையும் கெட்டுப்போயிரும்போல இருக்கு. இனி ஒரு நிமிஷம்கூட நீ வீட்ல இருக்கக் கூடாது. வெளியில போ!’’
திகைத்துப்போனார் கார்டன். நிலைமையின் தீவிரம் லேசாக உறைக்கத் தொடங்கிய தருணம் அது. `வெளியே போவதா... எங்கே போவது... என்ன செய்வது... எங்கே தங்குவது...’ கார்டன் ஒரு முடிவெடுத்தார். `இனியும் போதையோடு புழங்குவது சரிப்படாது. இதற்கு முடிவுகட்டியே ஆக வேண்டும்.’ வீட்டைவிட்டு வெளியேறியவர் சென்று சேர்ந்த இடம் ஒரு போதை மறுவாழ்வு மையம். சிகிச்சை எடுத்துக்கொண்டார். மெல்லத் தேறினார்.
அப்போது அவருக்கு 25 வயது. அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் அவர் பற்றிய பிம்பம் இதுதான்... `உருப்படாத கேஸ். வாழ்க்கையில் முன்னேறத் தெரியாத இளைஞன். எதற்கும் லாயக்கில்லாதவன். கெட்டுச் சீரழிந்தவன். வாழவே தகுதியில்லாதவன்.’ மறுவாழ்வு மையத்திலிருந்து வெளியே வந்த கார்டனுக்கு உலகம் புதிதாகத் தெரிந்தது. இனி போதையின் பக்கம் திரும்பவே கூடாது என்கிற உறுதி மனதில் பதிந்துபோயிருந்தது. பழைய பழக்கம், உறவு எதுவும் கூடாது என முடிவெடுத்தார். போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்த நண்பர்களிடமிருந்து விலகினார். எதிரிகளிடமிருந்து தள்ளிப்போனார். நெகட்டிவ் சிந்தனையை ஏற்படுத்தும் எல்லாவற்றையும் ஓரங்கட்டினார். இனி எல்லாமே நலம்தான். வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும். இனியும் வறுமையும் துயரமும் நமக்கு வேண்டாமே! இந்த எண்ணம் அவரை ஒரு தனிப்பாதைக்கு அழைத்துப்போனது.
கார்டன் படித்திருந்தது அக்கவுன்ட்டிங். ஆனால், அந்தத் துறையில் வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டம் அமெரிக்காவில் வளர்ந்திருந்த காலகட்டம் அது. அவருக்கும் வேலை கிடைத்தது. கார்களை விற்பனை செய்யும் சேல்ஸ்மேன் வேலை. ``கூவிக் கூவி ஒன்றை விற்கும் வேலையை நான் வெறுத்தேன். அதேபோல என் வாழ்க்கையையும் நான் வெறுத்தேன். ஆனால் வீட்டு நிலைமை நன்றாக இல்லை. வீட்டு வாடகையைக்கூட ஒழுங்காகக் கொடுக்க இயலாத நிலைமை. நான் என்ன செய்வேன்... மறுபடியும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்கிற பயம் எனக்கு எழுந்தது. முடங்கிப்போய்விடக்கூடிய சேல்ஸ்மேன் வேலை. யாருமே விரும்பாத வேலை. ஆனால், அந்தக் கணத்தில் நான் முடிவெடுத்தேன்... இதில் சாதித்தே தீருவதென்ற முடிவு’’ என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் கார்டன். இதற்குப் பின்னணியில் அவருடைய அம்மாவும் இருந்தார். ``நீ செய்யப்போறது புது வேலை. புதுசா ஒரு துறை சம்பந்தமான அறிவு உனக்குக் கிடைக்கப்போகுது. அறிவுல முதலீடு செய்யறதுங்கறது, பின்னாளில் நல்ல வட்டியைக் கொடுக்கும்’’ என்றார் அம்மா.
அம்மாவின் வார்த்தைகள் கார்டனுக்குத் தூண்டுகோலாக இருந்தன. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கார்களை விற்பனை செய்யும் சேல்ஸ்மேனாக இறங்கினார். மெல்ல மெல்ல விற்பனை நுட்பங்களைப் புரிந்துகொண்டார். வாடிக்கையாளர்களை எப்படி வசீகரிப்பது என்பது அவருக்குப் பிடிபட்டது. ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி என்கிற மிகப்பெரிய உலகம் அவரை வாரி அணைத்து, வரவேற்றது. 3,000 டாலர் என்ற அவருடைய மாத வருமானம், சில மாதங்களிலேயே 6,000 டாலருக்கு உயர்ந்தது. `பரவால்லையே... இது நல்லா இருக்கே... கொஞ்சம் கொஞ்சமா இப்பிடியே வளர்ந்துடலாம்போல...’ என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது.
ஆனாலும் பிரச்னை விடுவதாக இல்லை. சக ஊழியர் ஒருவர் தவறாக ஏதோ ஒரு கம்ப்ளெயின்ட் கொடுக்க, அவர் வேலையிலிருந்து தூக்கப்பட்டார். குறுகிப்போய்விடவில்லை கார்டன். இனி யாரிடமும், எந்த கம்பெனியிலும் வேலை பார்ப்பதில்லை என முடிவெடுத்தார். விற்பனை தொடர்பான ஆலோசனையை வழங்கும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். மெல்ல மெல்ல அவருடைய விற்பனை யுக்தியும், அவருடைய வியாபார தந்திரமும் நாடு முழுக்கப் பிரபலமாகின. அந்தக் காலத்தில் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் அது மிகப்பெரிய சாதனை. ஐந்தே வருடங்கள்... தன் 30-வது வயதில் பில்லியனர் ஆகிவிட்டார் கார்டன். அதோடு அவருடைய பயணம் நிற்கவில்லை.
எந்த பிசினஸுக்கும் அடிப்படை நம்பிக்கை. `இந்த மனிதரிடம் போனால், நமக்கு லாபம் கிடைக்கும்’ என்கிற வாடிக்கையாளரின் நம்பிக்கை. அதை நிறையவே பெற்றுவிட்டிருந்தார் கார்டன். விற்பனை யுத்தி என்பது சாதாரணமல்ல. எந்தத் தொழிலுக்கும் அதுதான் அடிப்படை என்பதை அழுத்தமாக உணர்த்தியிருந்தார் கார்டன். அடுத்து ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கினார். வெற்றி அவரை வரவேற்றது. விற்பனை உத்திகளைக் கற்றுக்கொடுப்பதற்காகவே, `கிரான்ட் கார்டன் சேல்ஸ் யுனிவர்சிட்டி’ என்ற கல்வி நிறுவனத்தை அமெரிக்காவின் மியாமியில் ஆரம்பித்தார். எல்லாமே சக்சஸ். வெற்றி மேல் வெற்றி. இன்னும் பல தொழில்கள்... சொந்தமாக விமானம் வைத்திருப்பது வரை வளர்ந்துவிட்டார் கார்டன். வியாபார, விற்பனை உத்திகளை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதிய புத்தகங்கள் அதிக கவனம் பெற்றன; விற்றுத் தீர்ந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று... `The 10X Rule: The Only Difference Between Success and Failure.’ பல மேடைகளில் பேசுகிறார்; வகுப்புகள் எடுக்கிறார்; வழிகாட்டுகிறார். ஒரு சாமானியன், சாதனையாளனாக மாறிய வரலாறு இது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட `25 Marketing Influencers to watch in 2017'-ல் அவருக்கு முதல் இடம். இன்னும் எத்தனையோ விருதுகள். இன்றைக்கு கிரான்ட் கார்டனின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டாலர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதற்குப் பின்னால் இருப்பது ஒன்றே ஒன்றுதான்... விடா முயற்சி, தன்னால் முடியும் என்கிற ஆதார, அடிப்படை நம்பிக்கை!
from Latest News
0 Comments