பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
- ஈரோடு சம்பத் நகரில் உள்ள அம்மன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தனது மனைவி பிரசிதாவுடன் காலை 7.15 மணிக்கே வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கியுள்ளது, 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டதால், உடனடியாக வேறு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொய்வின்றி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
- மொத்தம் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டதால் அந்த வாக்குச்சாவடிகளுக்கு முன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். பல இடங்களில் போலீஸார் அதிக கெடுபிடிகளை காட்டியதாக வாக்காளர்கள் சிலர் வேதனை தெரிவித்தார்கள்.
- சம்பத் நகர் வாக்குச்சாவடியில் காலை 7.15 மணிக்கே மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய வீல் சேரில் வந்து ஆர்வத்துடன் வாக்களித்தார். ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த பழனியம்மாள் (78) உடல் நலக்குறைவால் நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் அழைத்து வரப்பட்டு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
- கலைமகள் பள்ளியின் வாக்குச்சாவடியில் காலை 7.30 மணிக்கே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக காத்திருந்தனர்.
- காரைவாய்க்கால் பழைய கோர்ட் அருகே மாநகராட்சி பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்களித்தார். வாக்களித்த பின், ``பதிவாகும் மொத்த வாக்குகளில் 80 சதவீதம் வாக்குகளை பெறுவேன்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
- இந்திரா நகர், மாதவகிருஷ்ணா வீதி, அக்ரஹார வீதி பகுதிகளில் வட இந்தியர்களான ஜெயின், குப்தா சமூகத்தைச் சேர்ந்தவர்களும், வடமாநிலத் தொழிலாளர்களும், இஸ்லாமியர்களும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துச் சென்றதை பார்க்க முடிந்தது.
வாக்குச்சாவடிக்கு 100 அடிக்கு அப்பால் தான் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், மாதவகிருஷ்ணா வீதியில் கயிற்றால் தடுப்பு போட்ட போலீஸார், அங்கிருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு அப்பால் உள்ள அப்துல்கனி மதரசஸா பள்ளிக்கு முன்பே வாக்காளர்களை தடுத்து நிறுத்தினர். தேவையில்லாத கெடுபிடியால் நடந்து செல்ல முடியாத முதியவர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட தூரம் நடந்து சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த வாக்குச்சாவடியில் நடக்க முடியாமல் வீல் சேரில் அழைத்து வரப்பட்ட மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்த 88 வயதான மூதாட்டி சரோஜா, 65 வயதான மாபீவி, 90 வயது விசாலாட்சி பாட்டி ஆகியோரை, வாக்குச்சாவடியில் பணிபுரிந்த மாநகராட்சி ஊழியர்களும், போலீஸாரும் வீல் சேரில் ஏற்றி வாக்களிப்பதற்காக அழைத்து வந்தனர்.
- அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வாக்களிப்பதற்காக கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்தார். அங்குள்ள 124-வது வாக்குச்சாவடியில் தென்னரசு வாக்களித்தார். அந்த வாக்குச்சாவடிக்குள் செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று வாக்குச்சாவடி அலுவலர் கெடுபிடி செய்தார். ``கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வாக்களிக்கும்போதே அனைத்து பத்திரிகையாளர்களும் வாக்குச்சாவடிக்குள் சென்று தான் புகைப்படம் எடுத்தோம். புகைப்படம் எடுப்பதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று கேட்டதை அந்த வாக்குச்சாவடி அதிகாரி கண்டுகொள்ளவே இல்லை. உள்ளே நுழைய முயன்றவர்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தால் தேவையின்றி அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
- வாக்களித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த தென்னரசு, தேர்தல் அமைதியான முறையில் நடப்பதாகவும், 5 பேலட் இயந்திரங்கள் வைத்திருப்பதால் வாக்களிக்கும் நேரம் தாமதம் ஆகிறது என்றும், அதிகாரிகள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தார். மேலும் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் நம்பிக்கையுடன்.
- நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன், பெரியண்ணன் வீதியில் உள்ள கலைமகள் பள்ளியில் வாக்களித்தார்.
- தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த், பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் வாக்களித்தார். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார், ஓட்டுநர் லைசன்ஸ் உள்ளிட்ட 14 விதமான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், இங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் அட்டை இல்லாத மற்ற ஆவணங்களுடன் வந்தவர்களை வாக்களிக்க அனுமதியளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனால் வாக்களிக்க முடியாமல் பலர் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து வேட்பாளர் ஆனந்த், தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாருக்கு புகார் அளித்தார். நீண்ட முறையீடுக்கு பின் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் ஆதார் அட்டையைக் காட்டி வாக்களிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆனந்த் நம்மிடம் கூறுகையில், ``14 வகை ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதிக்காததாலும், தேர்தல் அதிகாரிகளின் தேவையில்லாத கெடுபிடிகளாலும் வாக்களிக்க முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டனர்” என்றார்.
- திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்த கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ், அவருடன் வந்த உதவியாளரின் உதவியோடு தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
- பி.பெ.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிப்பதற்காக வந்த 18 வயது பூர்த்தியான ஜனனி என்பவர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாததால் வாக்களிக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
- பி.பெ.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெண்கள் மிக ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்துச் சென்றனர். சில வாக்குச்சாவடிகளில் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் சிலர் மயக்கமடைந்தனர். பல வாக்குச்சாவடிகளில் குடிநீர் ஏற்பாடு செய்யாததால் வாக்காளர்கள் பாதிப்படைந்தனர்.
- தொகுதி முழுவதும் சுற்றி வந்ததில் பல வாக்குச்சாவடிகளில் 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை பார்க்கவே முடியவில்லை. 2-வது அல்லது 3-வது முறையாக வாக்களிக்க வந்த இளைஞர்கள், இளம் பெண்களே அதிகமாக இருந்தனர். கடந்த 2019-ல் நாடாளுமன்ற தேர்தல், 2021 -ல் சட்டப்பேரவைத் தேர்தல், தற்போது 2023-ல் இந்த இடைத்தேர்தல் என 2 ஆண்டுக்கு 1 முறை தேர்தல் வந்ததாலும், எம்.எல்.ஏ.திருமகன் ஈவெரா இறந்த 14 நாள்களில் இடைத்தேர்தல் தேதி அறிவித்ததாலும் 18 வயது பூர்த்தியான பல வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போனதாக சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய வாக்காளர்களை சேர்க்க முடியாது என்பதால் புதிய வாக்காளர்களின் பெயர் இடம் பெறாமல் போனது. இதனால் புதிய வாக்காளர்களை காண்பதே அபூர்வமாக இருந்தது.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை விறுவிறுப்புடன் வாக்குப்பதிவான நிலையில், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வாக்குப்பதிவு மந்தமானது. அதன் பின் வெயில் சற்று தணிந்ததும் 4 மணிக்கு பின் வாக்களிக்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ராஜாஜிபுரம், வீரப்பன்சத்திரம், பி.பெ.அக்ரஹாரம் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குச்சாவடியின் கதவு மூடப்பட்டது. வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் பகுதிகளில் சுமார் 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நீடித்தது. ஆனால், ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் 300க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குவிந்ததால் இரவு 9 மணியைக் கடந்தும் வாக்காளர்கள் வாக்களித்தனர். இரவு 9.20 மணிக்கு தான் அங்கு வாக்குப்பதிவு பூர்த்தியானது.
மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில் 237-ல் பதிவான வாக்குகளின் விவரம் கிடைத்து விட்ட நிலையில் ராஜாஜிபுரத்தில் பதிவான வாக்குகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இறுதியாக தொகுதி முழுவதும் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இரவு 9.52 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இறுதி வாக்குப்பதிவின்படி 82,138 ஆண் வாக்காளர்களும், 88,037 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,70,192 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குச் சதவீதம் 74.79 % ஆகும்.
மணி வாரியாக பதிவான வாக்குகள்
காலை 9 மணிக்கு- 10.10 % வாக்குபதிவு
11.00 மணி நிலவரம்- 27.89 %
ஆண்கள்- 30,907
பெண்கள்- 32562 பெண்கள்
1 மணி நிலவரம்- 44.56 %
ஆண்கள் : 49740
பெண்கள்: 51649
இதர வாக்காளர்: 3
3 மணி நிலவரம்- 59.22 %
ஆண்கள்- 65,350
பெண்கள்- 69,400
இதர வாக்காளர்: 8
5 மணி நிலவரம்-70.58 %
ஆண்கள்: 77,183
பெண்கள்: 83,407
இதர வாக்காளர்: 13
இறுதி நிலவரம்
இரவு 9.30- 74.79 %
ஆண்கள்- 82,138
பெண்கள்- 88,037
இதர வாக்காளர்- 17
மொத்தம்: 1,70,192
மொத்த வாக்குச் சதவீதம்: 74.79 %
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News
0 Comments