மும்பை, சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கமல்காந்த் ஷா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அவரின் ரத்தத்தை சோதித்து பார்த்ததில் அதிகளவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. செப்டம்பர் 19-ம் தேதி அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தக் கொலையில் கமல்காந்த் மனைவி கவிதாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கவிதாவுக்கும், ஹிதேஷ் ஜெயின் என்பவருக்கும் திருமணம் மீறிய இருந்திருக்கிறது.
இந்த நிலையில், கவிதாவும், ஹிதேஷ் ஜெயினும் சேர்ந்து சாப்பாடு, ஜூஸ் போன்றவற்றில் சிறிது சிறிதாக விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்திருப்பது தெரியவந்தது. அதன்பிறகு இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கமல்காந்த் மட்டுமல்லாது அவரின் தாயார் சரளா தேவிக்கும் இதே போன்று சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்திருந்தனர். போலீஸார் இந்தக் கொலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்திருக்கின்றனர்.
அதில் கவிதாவும், ஹிதேஷ் ஜெயினும் பகிர்ந்து கொண்ட மெசேஜ் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த மெசேஜில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்காந்த் உயிர் பிழைத்துவிடக்கூடாது என்பதற்காக தண்ணீரில் விஷம் கலந்து கொடுப்பது குறித்து விவாதித்திருந்தனர். குற்றப்பத்திரிக்கையில் கமல்காந்த் சகோதரி, மைத்துனர், நெருங்கிய உறவினர்கள், டாக்டர்களின் வாக்குமூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.
கமல்காந்த் உடலில் தெல்லியம் என்ற உலோகம் மற்றும் விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் குடும்பத்தில் உள்ள அனைவரும் சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் கவிதா மட்டும் உடனே சோதனை செய்து கொள்ள முன் வரவில்லை. ஒரு வாரம் கழித்து தான் சோதனை செய்ய ஒப்புக்கொண்டார். ஒரு வாரத்தில் கணவனுக்கு கொடுத்த அதே விஷத்தை சிறிதளவு தானும் எடுத்துக்கொண்டார் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தெல்லியம் உலோகத்தை ஹிதேஷ் ஜெயின் பஞ்சாப்பிலிருந்து வாங்கி வந்ததாகவும், விஷத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவிதாவுக்கும், அவரின் கணவனுக்கும் சிறு, சிறு பிரச்னையில் சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் கவிதா தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். கடந்த 2022-ம் ஆண்டு இரு குடும்பத்தினரும் பேசி இருவரையும் சேர்த்து வைத்தனர். ஆனால் கமல்காந்த்துடன் எந்த விதமான தாம்பத்திய உறவும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்ற நிபந்தனையுடன் கவிதா மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்தார். அதோடு தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் எந்த வித கேள்வியும் கேட்கக்கூடாது. தான் யாரிடம் போனில் பேசினாலும், வெளியில் சென்றாலும் அது அது குறித்து கேள்விகேட்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.
வீட்டுக்கு வந்தப் பிறகு கமல்காந்த் தாயார் சரளாதேவியுடன் கவிதா அடிக்கடி சண்டையிட்டார். கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி சரளாதேவி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்தார். ஆகஸ்ட் 13-ம் தேதி சரளா சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். ஆகஸ்ட் 24-ம் தேதி கமல்காந்த் அதே போன்று வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவரை சோதித்த டாக்டர்கள் வெளியில் இருந்து விஷம் கொடுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். கவிதாவும், ஹிதேஷ் ஜெயினும் சேர்ந்து கமல்காந்த் சொத்தை அபகரிக்கும் நோக்கில், இந்தக் கொலையைசெய்திருப்பதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
from Latest News
0 Comments