திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துரை, நெடுஞ்சாலைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). கட்டுமான கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். உள்ளூரில் கட்டட வேலைகளுக்குச் செல்லும் ராஜா, அவ்வப்போது வெளியூருக்கு வேலைக்குச் செல்வதும், சமயங்களில் அங்கேயே சில நாள்கள் தங்கியிருப்பதுமாக இருந்து வந்துள்ளார். திவ்யா திருச்சியில் உள்ள பிரபலமான துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார். வேலைக்குச் சென்ற இடத்தில் திவ்யாவுக்கும், அங்கு வேலை பார்த்த திருச்சி வடக்கு அரியாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விஷயம் தெரியவர, ராஜா மனைவியை அழைத்து கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனாலும், திவ்யா அந்த இளைஞருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவந்ததும், அடிக்கடி செல்போனில் பேசுவதுமாக இருந்துள்ளார். இதனால் ராஜாவுக்கும் திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ராஜா புகார் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அதுசம்பந்தமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு, திவ்யா, தான் தொடர்பிலிருந்த இளைஞருடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். இதில் மனமுடைந்த ராஜா கடந்த சில நாள்களாகவே யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், மேலவாளாடி ரயில்வே மேம்பாலம் பகுதிக்குச் சென்ற ராஜா, ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக விருத்தாச்சலம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
from Latest News
0 Comments