மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழ்கிறான். தாவூத் மட்டுமல்லாது அவன் கூட்டாளிகள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளின் ஆட்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இதில் தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன், தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டாசகீல் மைத்துனர் சலீம் புரூட் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். இதில் சலீம் புரூட் தாவூத் இப்ராஹிமிடமிருந்து பணத்தை வாங்குவது மற்றும் இங்கிருந்து பணம் அனுப்புவது போன்ற வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சலீம் புரூட், சபீர் ஷேக் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். சலீம் புரூட்டிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக தாவூத் இப்ராஹிமுக்கு துபாயிலுள்ள தொடர்புகள் குறித்த முக்கியமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சபீர் ஷேக், மும்பையில் இறைச்சி ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்கிறார். இதில் கிடைக்கும் பணத்தை சபீர் ஷேக் துபாய்க்கு அனுப்பி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அந்தப் பணம் பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராஹிமுக்கு அனுப்பி வைக்கப்படும் விவரமும் தெரியவந்திருக்கிறது. துபாயில் தாவூத் இப்ராஹிம் போதைப்பொருள் கடத்தல், ஹவாலா உட்பட பல்வேறு விதமான தொழில்களை செய்து வருகிறான் என்று தெரியவந்திருக்கிறது.
தாவூத் துபாயில் தனது தளத்தை அமைத்து அங்கிருந்து செயல்படுவதும், மும்பையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. துபாய் மட்டுமல்லாது சவுதி அரேபியாவிலும் தாவூத் இப்ராஹிம் தனது தொழிலை நடத்தி வருகிறான். இது தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதால், தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தனிப்படை ஒன்று துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. இந்தப் படை துபாய் போலீஸாருடன் இணைந்து தாவூத் இப்ராஹிமுக்கு இருக்கும் தொடர்புகள், கூட்டாளிகள், தொழில்கள் குறித்து முக்கிய விசாரணை நடத்தவிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளும் இதில் சிக்குவார்கள் என்று கருதப்படுகிறது.
from Latest News
0 Comments