Ticker

6/recent/ticker-posts

Ad Code

Doctor Vikatan: டூ வீலர் ஓட்டுவதால் ஏற்படும் முதுகுவலிக்கு என்னதான் தீர்வு?

Doctor Vikatan: நான் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கிறேன். வயது 38. தினமும் 80 முதல் 100 கிலோமீட்டர் தூரம் பைக் ஓட்டுகிறேன். எனக்கு கடந்த ஆறு மாதங்களாக கடுமையான முதுகுவலி இருக்கிறது. டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்ப்பதுதான் வழியா? முதுகுவலிக்கு வேறு தீர்வே கிடையாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார்

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை

டூ வீலர் ஓட்டுவது என்பது முதுகுவலிக்கு முக்கியமான ஒரு காரணம்தான். பலரும் தினமும் 50- 60 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள். இதைத் தவிர்ப்பது என்பது அவர்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கலாம். டூ வீலர் ஓட்டுவோருக்கு முதுகுவலி வருகிறது என்றால் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்களது பாஸ்ச்சர் எனப்படும் தோற்றப் பாங்கு.

இன்று டூ வீலர்களில் விதம் விதமான மாடல்கள் வருகின்றன. ஃபேன்சி பைக்குகளை ஓட்ட விரும்பும் மனநிலை அதிகரித்திருக்கிறது. 20 வயதில் இருக்கும் ஓர் இளைஞருக்கு அப்படிப்பட்ட பைக்கை ஓட்டுவது சிரமமாக இல்லாமல் இருக்கலாம். அதுவே வயதானவர்களுக்கு அப்படிப்பட்ட டூ வீலர்களை ஓட்டுவது நிச்சயம் பாஸ்ச்சரை பாதித்து, அதன் தொடர்ச்சியாக முதுகுவலியைத் தரும்.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, உங்கள் பைக் முதலில் சரிசெய்யப்பட வேண்டும். உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறதா, ஓட்டும்போது அசௌகர்யமாக உணரச் செய்யாமல் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அடுத்து டூ வீலர் ஓட்டுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், உங்கள் முதுகுப் பகுதியை உறுதியாக்கும் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டு, தொடர்ந்து செய்து வர வேண்டும். தினமும் இந்தப் பயிற்சிகளை காலையில் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வீடு திரும்பியதும் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்த பிறகுதான் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

முதுகுவலி

பல வருடங்களாக டூ வீலர் ஓட்டுபவர், முதுகுப் பகுதியிலுள்ள எலும்பு தேய்ந்திருக்கிறது, வலியும் அதிகமிருக்கிறது என்ற நிலையில், அவர்களை வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவோம். வேலையிடத்துக்குப் பக்கத்திலேயே குடியிருப்பது அல்லது வீட்டின் அருகே வேலை என ஏதேனும் ஒரு மாற்றத்தைச் செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை என்றால் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News

Post a Comment

0 Comments