பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் தெரபியை, திருநர்கள் இரண்டு ஆண்டுகள் மேற்கொள்வதன் மூலம் அவர்களின் மன அழுத்தம், கவலை குறைந்து, வாழ்க்கையை அமைதியுடன், மன நிறைவுடன் வாழ வழிவகுப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையானது, நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின் ( New England Journal of Medicine) என்னும் இதழில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த ஆய்வுக்காக 12 முதல் 20 வயதுக்குட்பட்ட 315 இளவயது திருநர்களுக்கு பாலினத்தை உறுதிப்படுத்தும் ஹார்மோன் தெரபி அளித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சராசரியானோர் 16 வயதுடைய திருநர்கள் ஆவர்.
இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிகாகோ, பாஸ்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளுடன் தொடர்புடைய மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர் குழு. இந்த ஆய்வுக்கு யூனிஸ் கென்னடி ஸ்ரீவர் தேசிய குழந்தைகள் நலம் மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனமானது மானியம் வழங்கி ஆதரவளித்துள்ளது.
திருநர்கள் தங்கள் வெளிப்புறத் தோற்றம் எவ்வாறு தங்கள் பாலினதின் அடையாளத்தோடு ஒத்துப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் மனஅழுத்தம், கவலை, நேர்மறையான உணர்ச்சிகள் , வாழ்க்கையின் மீது எந்தளவுக்கு திருப்தியோடு இருக்கின்றனர் என்பதை அளவீடு செய்திருக்கின்றனர். ஹார்மோன் தெரபி மூலம், சராசரியாக நேர்மறையான உணர்ச்சிகள், வாழ்க்கையின் மீதான திருப்தி அதிகரித்துள்ளதாகவும், அதோடு மனஅழுத்தம் மற்றும் கவலை குறைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் , ``இந்த ஹார்மோன் தெரபி திருநர் மற்றும் non-binary எனப்படும் பாலின அடையாளத்தை ஆண், பெண் என உறுதிசெய்து முடியாத சூழலில் இருப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும். பிறக்கும்போது இருக்கும் பாலினத்திலிருந்து, பூப்படையும்போது ஏற்படும் உடல் மற்றும் மனநல மாற்றங்களின் வேறுபாடுகளை உணரவும் இது வழிவகுக்கும்.
மேலும் இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 24 பேர் மட்டுமே பூப்படைவதற்கு முன்பு ஹார்மோன் மாற்று சிகிசிச்சைகள் செய்துள்ளனர். அவர்களுக்கு மற்றவர்களை விட நேர்மறையான உணர்ச்சிகள், வாழ்க்கையின் மீதான திருப்தி ஆகியவை அதிகரித்துள்ளது. அதோடு மனஅழுத்தம் மற்றும் கவலை குறைந்துள்ளது" என்றனர்.
இந்த வேறுபாடுகள் குறித்து அவர்கள் தங்களது ஆய்வறிக்கையில், ``ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுடன் தொடர்புடைய அளவில் மார்பகங்களின் மாற்றம் மற்றும் ஒருசில உடலளவிலான மாற்றங்கள் நிகழ 2 முதல் 5 வருடங்கள் ஆகலாம். அடுத்ததாக டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் உந்துதலால் ஏற்படும் கடினமான குரல் ஆகியவை திருநங்கைகளுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும்போது மாறுபடலாம். மனஅழுத்தம் , கவலை ஆகியவை திருநம்பிகளை விட திருநங்கைகளுக்கு தான் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் சமுதாயத்தில் அவர்களை குறைந்த விழுக்காடு மக்களே ஏற்றுக்கொள்வது தான்" என்று தெரிவித்துள்ளனர்.
from Latest News
0 Comments