கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மீது அவரது எதிர் வீட்டுக்காரர் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக நித்யா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பரபரப்பு விவகாரம் தொடர்பாக நித்யாவிடம் பேசினோம்.
"மணி என்கிற அந்த நபர் ஆசிரியரா இருந்து இப்ப பணி ஓய்வு பெற்ற பிறகு மளிகைக் கடை நடத்திட்டு வர்றார். அவருக்கும் எனக்கும் இடையில் ஒரு எதிர்வீட்டுக்காரருடன் இருக்கக் கூடிய சுமூகமான நட்பு நீண்ட நாள்களாகவே கிடையாது. ஏன்னா, எனக்கும் என் கணவர் பாலாஜிக்கும் இடையில் பிரச்னை நடந்த போது இவர்தான் முழுக்க முழுக்க பாலாஜிக்கு ஆதரவா செயல்பட்டு வந்தார்.
என் வீட்டுல நடக்கிற விஷயங்கள் குறித்துப் பாலாஜிக்குத் தகவல் சொல்றதே இவர்தான். பாலாஜி என்னை அடிச்ச போது அதை வேடிக்கை பார்த்தவர். அந்த நாள்கள்ல நான் அவருடைய ஆதரவைக் கூடக் கேட்டிருக்கேன். ஆனா அவர் உதவலை. அதனாலேயே எங்களுக்கிடையில் சரியான பேச்சுவார்த்தை இல்லை. அதனாலதான் சின்னச் சின்ன பிரச்னையைக் கூட பூதாகரமாக்கிச் சண்டைக்கு வருவார்.
கடந்த பொங்கல் பண்டிகை அன்னைக்குக் கூட குடும்பத்துடன் என்கூட சண்டைக்கு வந்தார். கெட்ட கெட்ட வார்த்தைகள்ல என் நடத்தை குறித்தெல்லாம் அவதூறாகப் பேசினார். நானும் வயசுல பெரியவரா இருக்காரேன்னு மரியாதையாத்தான் பேசிட்டிருந்தேன். ஆனா எவ்வளவு நாள்தான் பொறுத்துட்டிருக்க முடியும்? அதனால சமயத்துல நானுமே அவர் பேசியதுக்கு மறு பேச்சு பேசினேன்.
இப்ப கார் நிறுத்தற பிரச்னையில நான்தான் அவர் காரை சேதப்படுத்தினேன்னு சொல்றது பொய். வீடியோ ஃபுட்டேஜ்ல நான் அந்த காரை கடந்து போறது மாதிரிதான் இருக்கு. அன்னைக்கு 'துணிவு' படம் பார்த்துட்டு ராத்திரியில நான் வீட்டுக்கு வந்தேன். அப்ப எடுத்த ஃபுட்டேஜ் அது. மத்தபடி நான் அவரது காரை சேதப்படுத்தலை. போலீஸ்ல தற்கொலை செய்து கொள்வேன்னு சொல்லி நாடகமாடி வழக்குப் பதிய வெச்சிருக்கார்.
அதனாலதான் இந்தக் கேஸை நானும் எதிர்கொள்ளலாம்ன்னு முடிவு செய்துட்டேன். அதேநேரம் என்னை அவர் அவதூறா பேசினது குறித்து போலீஸ்ல புகார் தர இருக்கேன்’’ என்றவரிடம், "இந்தப் பிரச்னையில் பாலாஜியின் தூண்டுதல் இருக்குமென நினைக்கிறீர்களா?" என்றதற்கு, "அப்படி நான் நினைக்கலை. அதேநேரம், இருந்தாலும் அது குறித்தெல்லாம் எனக்குக் கவலை இல்லை" என்றார்.
from Latest News
0 Comments