Ticker

6/recent/ticker-posts

Ad Code

``உங்களுக்கு எப்படி தெரியும்... நீங்கள்தான் நவீன பி.டி.ஆர் ஆச்சே” - மதுரையில் அதிரடித்த டி.ஆர்.பாலு

சமீபகாலமாக தி.மு.க அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அதிரடியாக நடந்து கொள்கிறதும், எகிடு தகிடாக பேசுகிற சம்பவங்களும் அவ்வப்போது வெளி வந்து கொண்டு இருக்கிறது. கே.என்.நேரு, ஆவடி நாசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆர்.எஸ்.பாரதி, சைதை சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகளின் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் டி.ஆர்.பாலு பேசிய சில விஷயங்கள் கட்சிக்குள்ளும், வெளியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் திறந்தவெளி மாநாட்டை நேற்று மாலை திராவிடர் கழகம் நடத்தியது. இதில் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, செந்திலதிபன், அருணன் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

தான் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு நன்மையைத்தரும் சேது கால்வாய் திட்டம் கொண்டுவர தீவிரமாக பாடுப்பட்டதையும், அதில் ராமர் பாலம் இருப்பதாக சொல்லி சிலர் தடுத்து அத்திட்டத்தை நிறுத்தியது குறித்தும் ஆதாராங்களை காட்டி விரிவாக பேசினார் டி.ஆர்.பாலு.

அப்போது இடையிடையே அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் தான் இப்போது ஹாட் டாப்பிக்...

``ராமேஸ்வரம் கோயிலுக்குள் இருந்த 3 தீர்த்தங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இடம் மாற்றி வைக்கப்பட்டது. இது மத நம்பிக்கையை பாதிக்காதா" என்று பேசியவர், ``இது உங்களுக்குத் தெரியுமா?" என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பார்த்து கேட்டவர், "உங்களுக்கு எப்படி தெரியும். உங்கள் தந்தைக்கு தெரிந்திருக்கும், நீங்கள்தான் நவீன பி.டி.ஆராச்சே?" என்று கிண்டலடித்தார்.

வந்திருந்த மக்கள்

தொடர்ந்து பேசும்போது, ``மக்களுக்கான திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் முதலில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நான் அமைச்சராக இருந்தபோது அப்படித்தான். அதையும் மீறி திட்டங்களை கொண்டு வந்தேன். தமிழ் நாட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் நிதி ஒதுக்க மறுப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். அதிகாரிகள் சொல்வதை கேட்டு கொடுக்காமல் இருக்காதீர்கள்." என்று அமைச்சர் பி.டி.ஆரையும், பி.மூர்த்தியையும் பார்த்தபடி பேசினார்.

மேற்கு வங்கத்தில் சிபிஎம் முதல்வர் ஜோதிபாசு, அக்கட்சி எம்.பிக்களை கன்வீன்ஸ் செய்து அங்கு நெடுஞ்சாலை திட்டங்களை நிறைவேற்றியது குறித்து பேசும்போது, "அருணன் மேடையில் இருக்கிறாரா? அவர் போனதும் நல்லதா போச்சு..." என்று கமெண்ட் செய்தார்.

டி.ஆர்.பாலு

தொடர்ந்து பேசும்போது, "நான் தலைவராக மதிப்பவர்களை யாராவது சீண்டினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். ஆசிரியர் வீரமணி மீது யாராவது கை வைத்தால், அவர் சும்மா இருப்பார். நான் அவன் கையை வெட்டுவேன். உடல் பலம் உள்ளவன். கண்டிப்பாக வெட்டுவேன்." என்று அதிரடியாக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், திமுகவின் மூத்த நிர்வாகியே சட்டவிரோத கருத்துகளை பேசலாமா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.



from Latest News

Post a Comment

0 Comments