ஈரோடு முனிசிபல் காலனி, கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு கௌதம் (30), கார்த்தி (26) என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் கார்த்தி, நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் பொருளாளராக இருந்து வந்தார். அதோடு, இவர்கள் செக்கு எண்ணெய், மலைத்தேன், மசாலா தூள் போன்றவற்றை வாங்கி வீட்டிலேயே வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இவர்களுக்கும், ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்ற இவர்களது தாய்மாமனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததால், நீண்ட காலமாக பேச்சுவார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு நாள் குடும்பத் தகராறு தொடர்பாக கௌதம், கார்த்தி இருவரும், ஆறுமுகசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனர். அப்போது கௌதம், கார்த்தி இருவரும் ஆறுமுகசாமியிடம் ஆவேசமாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி, நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கார்த்தியின் வீட்டுக்கு வந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வீட்டுக்கு வெளியே வந்து ஆறுமுகசாமியுடன் வாக்குவாதம் செய்த படியே அதை கார்த்தி, தன்னுடைய செல்போனில் வீடியோ எடுக்க முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசாமி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கௌதம், கார்த்தி இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார்.
இதில் முகம், உடல், கை, கால்களில் குத்துப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்து விழுந்தனர். அவர்களை பக்கத்து வீட்டார் மீட்டு ஒரு காரில் கொண்டு போய் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
from Latest News
0 Comments