மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு வங்கக் கடலில் பழையாறு துறைமுகத்தையொட்டி கலக்கிறது. கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதியருகே திட்டுப்பகுதிகள் இருக்கின்றன. அதில் ஒரு திட்டுப் பகுதிதான் கோட்டைமேடு கிராமமாகும். இந்த கிராமத்தில் விவசாயமே பிரதானத் தொழில். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இங்கு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால், இந்தத் திட்டுக் கிராமம் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. இங்குள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்த இந்தக் கிராம மக்கள், விவசாயத்துக்கு மிகவும் அடிப்படை தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் கிராமத்தை காலி செய்துவிட்டு வெளியே வந்து குடியேறிவிட்டனர்
அதனால், 2004-ம் ஆண்டிலிருந்து கோட்டைமேடு கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு வாழ்ந்தவர்களின் வீடுகள் இன்றும் இடிந்த நிலையில் அடையாளமாக இருக்கின்றன. கோயில் மற்றும் அங்குள்ள துவக்கப் பள்ளியும் இன்றும் அழகு மாறாமல் இருந்துவருகின்றன.
கோட்டைமேடு கிராமத்தில் தற்போது யாரும் வசிக்கவில்லை. அங்கு மக்கள் வாழ்ந்த அடிச்சுவாடாக பள்ளிக் கட்டடம், குடியிருப்புகள், மின்கம்பங்கள், ஊர் பொது குளங்கள் இருக்கின்றன. மேலும் அந்தப் பகுதியில் நினைவுச் சின்னமாக பழைமையான கோட்டை சிதைந்து அதன் அடையாளமாக அடிச்சுவர் இருந்து வருகிறது. இந்தக் கிராமங்களைச் சுற்றிலும் அலையாத்திக் காடுகள் சூழ்ந்திருக்கின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் படகுமூலம் வந்து சுற்றிப் பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து கோட்டைமேடு கிராமத்தில் வசித்தவர்களிடம் பேசினோம். ``நாங்கள் ஆண்டாண்டு காலமாக கோட்டைமேடு கிராமத்தில் வசித்து வந்தோம். எங்க ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் படகு மூலமாகத்தான் பயணித்தாகவேண்டும். கொள்ளிடம், சீர்காழி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவி வந்தது. இதனால் எங்களுக்கு போக்குவரத்து பெரும் சிரமமாக இருந்தது. ஒரு அவசர சிகிச்சைக்குக்கூட அவதிப்படும் நிலை இருந்தது. நாங்கள் அதிகமாக சிதம்பரம், பிச்சாவரம் ஆகிய பகுதிகள் வழியாகத்தான் செல்வோம். இந்த நிலையில், அரசு சார்பில் எங்கள் கிராமத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினாலும், சுனாமிக்குப் பிறகு எங்கள் பகுதியில் குடிநீர் இல்லை. எனவே வேறுவழியின்றி அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கொள்ளிடம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் குடியேறிவிட்டோம்.
மேலும் நாங்கள் வாழ்ந்த கிராமத்தில் வழிபாட்டுத் தலமான முனீஸ்வரன் கோயில் இருக்கிறது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் கிராமத்தில் வசித்த நாங்களெல்லாம் ஒன்றுகூடி முனீஸ்வரனுக்கு படையல் போட்டு எங்கள் உறவு முறைகளைச் சந்திப்போம். இந்த முனீஸ்வரன் கோயில் எங்க கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சோழ குறுநில மன்னர் கட்டியதாக செவிவழிச் சேதியாகும். பெரும் கோட்டை கட்டி இங்கு மன்னர் வாழ்ந்து வந்ததாகவும், அந்தக் கோட்டையை பீரங்கி மூலம் அந்நியர்கள் தகர்த்தனர் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்தக் கிராமம் அலையாத்தி காடுகள் மூலம் சூழப்பட்டிருப்பதால், மக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். தற்போது இந்தக் கிராமம் பெரிய காட்டுப் பகுதியாக அமைந்திருக்கிறது. மக்களே வசிக்காத இந்தக் காட்டு கிராமத்தில் சிலர் கண்டு களிப்பதற்காக வந்து செல்கின்றனர். எனவே இந்தக் கிராமத்தைச் சுற்றுலாத்தலமாக அறிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்" என்றனர்.
from Latest News
0 Comments