சேலம், மேட்டூர் அருகே பழங்கோட்டை எனும் கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் எனும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ய முற்பட்டபோது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அவர்களை கோயிலுக்குள் நுழைய தடை விதித்திருந்தனர்.
இந்த சம்பவம் அறிந்து வந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அப்போது பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
பின்னர் கடந்த 25-ம் தேதி 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. அப்போது பட்டியலின மக்கள் மீண்டும் கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது, அந்த குறிப்பிட்ட சமூக மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசலம், இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ராஜா ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் சீல் அகற்றப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. ஒன்றிய குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து பட்டியல் இன மக்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர். மேலும் கிராமத்தைச் சுற்றி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
from Latest News
0 Comments