சேலம், கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். சேலத்தில் வெள்ளமண்டி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில், தர்மராஜ் தான் வேலை பார்த்து வந்த வெள்ளமண்டியில் உடன் பணிபுரியும் கோகிலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எனும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் இருவரும் நெறுங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இதனால் அடிக்கடி வீட்டிற்கு வரும் தர்மராஜ் தனியாகச் சென்று போன் பேசுவது, சிரிப்பது என்று இருந்து வந்துள்ளார். இதை கவனித்துவந்த அவர் மனைவி சரண்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தன் கணவரின் செல்போனை சோதனை செய்ததில், அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் தன் கணவருடன் வேலைப்பார்த்து வருபவர் என்று அறிந்து அவரை நேரில் சென்று கண்டித்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் சம்பந்தப்பட்ட வெள்ளமண்டி கடைக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். இருப்பினும், தன் மனைவி சரண்யாவுக்கு தெரியாமல் அவ்வப்போது கோகிலாவை தனியாக சென்று சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல், கோகிலாவை ஏற்காடு வரச் சொல்லிவிட்டு, தானும் அங்கு சென்று... ஒரு சொகுசு விடுதியில் அந்தப் பெண்ணுடன் தங்கியிருக்கிறார்.
பின்னர் மதியம் போல் தன் மனைவிக்கு செல்போன் வீடியோ கால் வாயிலாகப் பேசிய தர்மராஜ், தான் விஷ மருந்து அருந்தி தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், தன்னுடன் கோகிலாவும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியுள்ளார்.
இதனை கேட்ட மனைவி பதறிப்போய், `தயவு செய்து அதுமாதிரி முடிவு எடுக்க வேண்டாம்' என்று கெஞ்சியுள்ளார். ஆனால் அவர் எதனையும் பொருட்படுத்தாமல் தான் தங்கியிருந்த விடுதியின் பெயரை மட்டும் சொல்லிவிட்டு, விஷமருந்திவிட்டு மயக்கமடைந்துள்ளார். உடனே சரண்யா என்ன செய்வது என்று தெரியாமல், காரில் ஏற்காட்டிற்கு புறப்பட்டுப்போய் சம்பந்தப்பட்ட விடுதியில் இருந்து இருவரையும் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு முதலுதவி அளித்தபின் இருவரையும் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் தர்மராஜூக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
from Latest News
0 Comments