Ticker

6/recent/ticker-posts

Ad Code

முதல்முறையாக தமிழில் எம்.பி.பி.எஸ் பாடப்புத்தகங்கள் - டிசம்பருக்குள் வழங்கத் திட்டம்!

தமிழகத்தில் இந்தாண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், முதல்முறையாக எம்.பி.பி.எஸ். பாடப் புத்தகங்களை தமிழில் பெறவுள்ளனர். இதற்கென 4 பாடப்புத்தகங்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, வருகிற டிசம்பர் மாதத்திற்கு முன்பாக வழங்கப்பட உள்ளன.

மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ். படிப்பு, நான்கரை ஆண்டு பாடப்படிப்பும், ஓராண்டு பயிற்சியுமென மொத்தம் ஐந்தரை ஆண்டுகள். பாடங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் உள்ள நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக, எம்.பி.பி.எஸ் பாடப் புத்தகங்கள் அண்மையில் இந்தியில் அறிமுகம் செய்யப்பட்டன. மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, மூன்று எம்.பி.பி.எஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளன.

MBBS

அதேபோல், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமிழிலும் எம்.பி.பி.எஸ் பாடப்புத்தங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்விச்சேவைகள் கழகம் ஆகியன இணைந்து, 25 மருத்துவப் பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணிகளைத் தொடங்கியுள்ளன.

அதன்படி முதல்கட்டமாக, கிரேஸ் அனாடமி கைட்டன், ஹால் டெக்ஸ்ட் புக் ஆஃப் மெடிக்கல் பிசியாலஜி, பெய்லி அண்ட் லவ்ஸ் ஹார்ட் பிராக்டிஸ் ஆல் சர்ஜரி (தொகுதி `1) மற்றும் முதலியார் மற்றும் மேனனின் மருத்துவ மகப்பேறியியல் ஆகிய 4 பாட நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 30 பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு, கடந்த ஓராண்டாக, எம்.பி.பி.எஸ். ஆங்கில பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம் தரப்பில் கூறுகையில், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு 13 முக்கிய பாடப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக மொழிபெயர்க்க உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் பாடங்களில் கருத்தியல் தெளிவைப் பெற முடியும். பாடங்களை மாணவர்கள் தமிழில் படித்தாலும், தற்போதுள்ள விதிகளின்படி மாணவர்கள் தேர்வினை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்றனர்.

படிப்பு

மாணவர்களில் பலரும் கிராமப்புறங்களில் தமிழ்வழியில் பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பை தொடர்கின்றனர். அப்போது, மருத்துவம் உள்ளிட்ட பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பது, அவர்களின் கற்றலை, புரிந்துணர்வைக் கடினமாக்குகிறது. இந்த நிலையில், மருத்துவப் படிப்பு சார்ந்த பாடங்கள் முதல்முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட உள்ளது, மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



from Latest News

Post a Comment

0 Comments