Ticker

6/recent/ticker-posts

Ad Code

`பேருந்துகளில் பெங்களூருவுக்கு வெடி பொருள்கள் கடத்தினால்...’ - எச்சரிக்கும் சேலம் எஸ்.பி.

சேலம் மாவட்டம், தாரமங்கலம், இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி போன்ற பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு, நாட்டு பட்டாசு, கல் வெடி தயாரிப்பு பணி குடிசைத் தொழில் போன்று நடைபெற்று வருகிறது. கணிசமான நபர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெற்று வெடி மருந்துகளை வாங்கி வெடி பொருட்களை தயாரிக்கின்றனர். அதேசமயம், எந்த அனுமதியும் பெறாமல் முறைகேடாக நாட்டு வெடிகுண்டு, பட்டாசுகளை தயாரிக்கும் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அனுமதியின்றி வெடி குண்டு, நாட்டு பட்டாசுகளை தயாரிக்கும்போது, ஏற்பட்ட வெடி விபத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களும் உண்டு.

COUNTRY BOMBS

சமீபகாலமாக இப்பகுதிகளில் இருந்து வெடி பொருள்கள் தயாரிக்க உதவும் மூலப் பொருள்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி, தருமபுரி, ராயக்கோட்டை வழியாகவும், பொம்மிடி, கிருஷ்ணகிரி வழியாகவும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் மூலமாக கடத்திச் செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த விவரமறிந்தவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெயர் கூற விரும்பாத அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியதாவது, `பெங்களூரு பிடதி பகுதியில் அதிக அளவில் கல் குவாரிகள் உள்ளன. அப்பகுதியில் வெடி பொருள்களுக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் சேலம் மாவட்டத்தின் புறநகரில் உள்ள தாரமங்கலம், இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பேருந்துகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி, சட்டத்துக்கு புறம்பாக வெடிபொருள்களை கடத்திச் செல்கின்றனர்.

குறிப்பாக, பெண்கள் சாதாரண குச்சிப் பையில் ராகி, கம்பு போன்ற தானியங்களுக்கு அடியில் வெடி பொருள்களுக்கான மூலப்பொருள்களை பதுக்கி வைத்து எடுத்துச் செல்கின்றனர்.

இந்த மூலப்பொருள்கள் அடங்கிய பையை முன்பகுதியிலோ, பின்பகுதியிலோ இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு வேறு இடம் மாறி உட்கார்ந்து கொள்வார்கள். ஒருவேளை வாகனச் சோதனை நடந்தால் அந்தப் பை தங்களுடையது தான் என்பதை கூறாமல் மெளனமாக இருந்து விடுவார்கள். யாரும் கேட்கவில்லை என்றால் கடைசியாக பையை எடுத்துக் கொண்டு இறங்கி விடுவார்கள். இந்த மூலப்பொருள்களை பெங்களூரு, பிடதி பகுதிக்கு கொண்டுபோய் வெடிகுண்டாக தயாரித்து குவாரிகளுக்கு விற்று விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைப்பதால் முக்கியத் தொழிலாகவே ஒரு சிலர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேபோல, ஜல்லி கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்று செல்லும் நபர்களும், லாரியினுள் வெடிபொருள்களை பதுக்கி வைத்து கொண்டு செல்கின்றனர்.

பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் வெடித்து சிதறும்பட்சத்தில் பேருந்திலும், லாரியிலும் பயணிக்கும் பயணிகள் பெரும் உயிர்பலி ஏற்படவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த வெடிபொருள்களின் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

எஸ்.பி. ஸ்ரீ அபினவ்

வெடி பொருள்களை கடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபினவ்விடம் கேட்டபோது, ``மாவட்டம் முழுவதும் வெடிபொருள்களை பெற்று செல்லும் லைசன்ஸ்தாரர்களின் பட்டியலை ஆய்வு செய்து அவர்கள் வைத்துள்ள வெடி மூலப்பொருள்களின் இருப்பு சரிபார்க்கப்படும். தற்காலிகமாக லைசன்ஸ் பெற்று வெடிபொருள்களுக்கான மூலப்பொருள்களை வாங்கிச் செல்பவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பேருந்துகளிலோ, லாரியிலோ வெடி பொருள்களைக் கடத்திச் செல்வது வாகனச் சோதனையில் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார்.



from Latest News

Post a Comment

0 Comments