மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு நாள்களில் 200-க்கும் மேற்பட்ட வெற்று அழைப்புகளை செய்ததாக இருவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான காவல்துறை விசாரணையில், வெற்று அழைப்பு வந்த எண்ணை கண்டுபிடித்து, அதற்குரிய முகவரிக்கு சென்றனர். அங்கு ஷாருக் கான் என்பவர் தன் மொபைலையும், இன்னும் இரண்டு சிம் கார்டுகளையும் முகமது ஜாஹித், ஷேக், முகமது சிராஜ், ஷபீர், ஜமாதார் ஆகியோர் ஆறு மாதங்களுக்கு முன்பு தன்னை மிரட்டி எடுத்துச் சென்றதாக தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, இணையம் மூலம் அழைப்பு வந்த சிக்னல் பகுதியை கண்டுபிடித்து அந்த இடத்துக்கு சென்ற காவல்துறை, ஜாஹிர் என்பவரை கைது செய்திருக்கிறது. அவரிடமிருந்து வேறு நபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 20 மொபைல்கள் மற்றும் 25 சிம்கார்டுகளை காவலர்கள் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பு, "ஜாஹித் ஒரு தொலைக்காட்சி நிருபரிடம் மிரட்டி பணம் பறிக்க மிரட்டல் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பத்திரிகையாளர் முதலில் இது விளையாட்டாக இருக்கலாம் என்று நினைத்து அந்த தகவலைப் புறக்கணித்திருக்கிறார். ஆனால் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 20 வரை, அந்த பத்திரிகையாளருக்கு ஒவ்வொரு நாளும் மிரட்டல் செய்தி வந்துக்கொண்டே இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் வொர்லி காவல்துறையை அணுகி செய்திகளை அனுப்பி மிரட்டுபவர் மீது புகார் பதிவு செய்தார்.
இந்த விசாரணையின் போதுதான், ஜாஹித், அந்த எண்ணை பிஸியாக வைத்திருப்பதற்காக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு இரண்டு நாள்களில் 200 வெற்று அழைப்புகளை செய்திருக்கிறார். தன்னைப் பற்றிய செய்திகளை வெளியிடாமல், தன்னை ஆர்.டி.ஐ ஆர்வலர் என மட்டும் அறிமுகம் செய்துக்கொண்டு, அந்தப் பகுதி மக்கள் மீது புகார் செய்தார். அதன் பிறகே அவரை தேடத் தொடங்கினோம். அவர் மக்களுக்கும் மிரட்டல் செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அவர் மிரட்டி பணம் பறிப்பதற்காக ஏதேனும் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாரா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 392 (கொள்ளை), 419 (ஆள் மூலம் ஏமாற்றுதல்) மற்றும் 506 (அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest News
0 Comments