ராகுல் காந்தி எம்.பி., வருகிற 7-ம் தேதி தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிliருந்து தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 'பாரத் ஜோடா யாத்திரை' எனும் பெயரில் ராகுல் காந்தி எம்.பி. மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் தொடக்க விழா குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி., தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``ராகுல் காந்தி எம்.பி-யின் நடைபயணம் தேசிய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மக்களை பிரித்தாளுகிறது. இதற்கு எதிராக, இந்திய மக்களை ஒன்றிணைக்கும் சித்தாந்தத்துடனும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை விளக்கியும், இந்திய மக்களின் ஒற்றுமையை வளர்க்கவும், நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்கவும், இந்தியாவின் வளமையை மையப்படுத்தியும் இந்த நடைபயணத்தின் வழியே மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி எம்.பி. பேசுகிறார். சுமார் 10 லட்சம் பேர் இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்காக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவது, காய்த்த மரத்தில் பழுத்த மட்டைகள் கீழே விழுவது போலதான். ஒரு அமைப்பு எப்போதும் 100 சதவிகிதம் சரியாக இருக்க முடியாது. சிறு, சிறு குறைகள் இருக்கலாம். அதுபோலத்தான் காங்கிரஸூம். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதாயம் அடைந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றதும் ஆதாயம் பெற முடியவில்லை. எனவே கட்சியிலிருந்து வெளியேறுகிறார்கள். அதற்கு அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தைக் காரணமாக சொல்லி கட்சியிலிருந்து வெளியேறுவது பேராண்மை கிடையாது. உண்மையில் அவர் கட்சியைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் அந்தச் சம்பவம் நடந்தபோதே வெளியேறியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு மட்டும் இரண்டு தலைவர்கள் உள்ளனர். ஒருவர் அண்ணாமலை. மற்றொருவர் ஆளுநர் ரவி. அண்ணாமலையிடம் உளறல் அதிகமாகிவிட்டது. எனவே பா.ஜ.க தற்போது ஆளுநர் ரவியை களத்தில் இறக்கி விட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேச வேண்டியதை ஆளுநர் ரவி பேசி வருகிறார். அவர் திருக்குறளை திரித்து புதுக்கருத்தை சொல்கிறார். இதன் மூலம் பா.ஜ.க இனவெறியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுவது தெரிகிறது. திருக்குறளை சமய நூலாக கருதுகின்றனர். உண்மையில் மதம், இனம், சமயத்திற்கு அப்பாற்பட்டதுதான் திருக்குறள். பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைகள் கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட படையெடுப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. நமது நாட்டின் பலமே கலப்பு பொருளாதாரம்தான். ஆகவே பொதுத்துறையும், தனியார் துறையும் நமக்கு முக்கியம். ஆனால் தற்போது நாட்டில் உள்ள அநேக பொதுத்துறைகளை மத்திய அரசு விற்றுவருவது கண்டனத்திற்குரியது.
நாட்டிற்கு வளர்ச்சித் திட்டங்கள் மிகவும் அவசியம். அந்த வகையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கொண்டு வருவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனில் மக்களின் ஜீவாதாரத்தை அழிக்காமல் அவர்களுக்கு மாற்று வழி என்ன செய்து கொடுக்க முடியுமோ அதை இந்த அரசு செய்ய வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசு யாரை வேண்டுமானாலும் விலைக்கொடுத்து வாங்கிவிடலாம் என்ற நினைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களின் இந்த டெக்னிக் எடுபடாது. பி.ஜே.பி-யின் வாங்கும் திறன் குறைந்துகொண்டே வருகிறது. எனவே 2024-ம் ஆண்டில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். நாடு முழுவதும் ஒரேவரி, அதுவும் குறைந்த வரி என்ற விளக்கத்துடன் ஜி.எஸ்.டி-யை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பா.ஜ.க. ஆதரவின்மையால் ஜி.எஸ்.டி வரியை நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி அதிகபட்சமாக 48 சதவிகிதம் வரை வரியை உயர்த்தினார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு அதை 28 சதவிகிதமாக குறைத்து நிர்ணயித்துள்ளனர். எனவே சாதாரண மக்களின்மீது வரி சுமையை ஏற்படுத்துகின்ற பி.ஜே.பி-யின் இந்த போக்கு விரைவில் மாற்றப்படும். அதற்கு ராகுல் காந்தி எம்.பி-யின் இந்த நடைபயணம் வித்திடும்" என்றார்.
from Latest News
0 Comments