`பொருள்கள் களவு போய்விடுமோ' என திருடனுக்குப் பயந்து, பீரோவுக்கு மின்சாரம் கொடுத்து வைத்திருந்த பெண்மணி ஒருவர், அதே பீரோவைத் தொட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (வயது 68). சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அன்பழகி தனியாக வசித்து வந்திருக்கிறார். இவர் வசித்த பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதால், தற்காப்பு நடவடிக்கையாக வீட்டில் பொருள்கள் வைத்திருக்கும் பீரோவுக்கு மின்சாரம் கொடுத்துவிட்டு, இரவில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். வித்தியாசமான இந்தச் செயலே இவருக்கு எமனாகிவிட்டது.
நேற்று காலை வழக்கம்போல் எழுந்த அன்பழகி, வாசல் தெளித்துக் கோலம் போட்டுள்ளார். எப்போதும் எழுந்தவுடன் மின் இணைப்பை துண்டித்துவிடும் அன்பழகி இன்று ஏனோ மறந்துவிட்டாராம். வாசலில் கோலமிட்ட பின்னர் வீட்டிலுள்ளே பீரோவுக்கு அடியில் கோலமாவு டப்பாவை வைப்பதற்காக அன்பழகி, கையை பீரோவின் அடியில் விட்டபோது பீரோவிலிருந்து மின்சாரம் பாய்ந்தது. ஈரக் கையோடு இருந்த அன்பழகிமீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .
தகவலறிந்து விரைந்த சீர்காழி போலீஸார், மூதாட்டியின் உடலைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடனுக்குப் பயந்து பீரோவுக்கு மின்சாரம் வைத்த பெண்மணி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News
0 Comments