செல்போன்களில் ஆப்கள் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்களில் சுமார் 200 செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. லோன் ஆப்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு மோசடிகள் நடந்து வருவதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லோன் ஆப்கள் தேடிச் செல்வது ஏன்?
ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் இந்த "லோன் ஆப்"கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது. எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை, எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை, மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு.
ஆம் ஆதாரும், பான் அட்டையும் இருந்தாலே போதுமானது. இதை படிப்பதற்கே கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYCயை மட்டும் அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுப்பதுதான் இதன் நோக்கம். கடன்கள் ரூ.2000 முதல் ரூ.30000 வரை எளிதாக கிடைத்துவிடும். திரும்ப செலுத்தும் காலம் 7 நாள் முதல் 15 நாள் வரை இருக்கும். ஆனால், குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்த முடியவில்லை என்றால் அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கும்.
சிக்கி தவிப்பது எப்போது?
லோன் வாங்கியவருக்கு 7ஆம் நாள் காலை தொலைபேசியில் அழைப்பார்கள். 1 மணிக்குள்ளாக லோன் பணத்தை அடைக்க வேண்டும் என்பார்கள். அப்போது உங்களிடம் பணம் இல்லை என்றால் சிக்கல்தான். உங்கள் புகைப்பட்டை வைத்து அதில் "Loan Defaulter" அல்லது "Fraud" என போட்டோஷாப் செய்து உங்களது செல்போனில் இருக்கும் நபர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுவார்கள். மேலும் அவர்களை அழைத்து இவர் லோன் கட்டவில்லை; உங்கள் எண்ணை அவர்தான் கொடுத்தார் என குழப்பத்தை விளைவிப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள், ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும். ஆனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள்.
இதனால் தற்கொலை செய்துக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க இந்தாண்டு தொடக்கத்தில் இந்த லோன் ஆப் விவகாரம் பூதாகரமானது. இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றது. பல மாநிலங்களின் எம்பிக்கள் இது குறித்து பேசினர். இதனையடுத்து ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் "அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" எனத் தெரிவித்தது.
இந்த செயலிகள் மூலம் கடன் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் ஜெயந்த் குமார் தாஷ் தலைமையில் குழு ஒன்றை ஜனவரி 13, 2021 இல் அமைத்தது. அந்தக் குழு ஆய்வை சமர்ப்பித்துள்ளது. அதில் "நவீன கால தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆப் மூலம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அவற்றை தவறாக பயன்படுத்துகின்றன. வாடிக்கையாளர்களின் தனிமனித விவரங்கள் திருடப்படுகின்றன" எனக் கூறியுள்ளது.
மேலும் "அதிக வட்டி, தனி மனிதனை துன்புறுத்துவது, அவதூறாக பேசுவதிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலும் இவை வெளிநாட்டில் இருந்து இயங்கி அதிகளவிளான லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி 1100 லோன் செயலிகளில் 600 சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. பல முறைகேடுகள் தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. மிக முக்கியமாக தனிமனித விவரங்கள் திருடப்படுவதால் இதுபோன்ற செயலிகள் மூலம் கடன் வழங்கும் முறைக்கு மத்திய அரசு வழி வகை செய்ய வேண்டுமென்றும் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் நாடு முழுவதும் ரூபாய் 500 கோடிக்கு மேல் உடனடி கடனுதவி செய்வதாக மோசடி செய்தும், மிரட்டி பணம் பறித்தும் வந்த கும்பலை முறியடித்தது டெல்லி காவல்துறை. இதன் பேரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேரை கைது செய்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் பிளே ஸ்டோரில் இருந்து 200 செயலிகளை நீக்கவும் செய்திருக்கிறது மத்திய அரசு.
எப்படி தவிர்ப்பது.. தப்பிப்பது?
இது குறித்து காவல்துறை சைபர் குற்றங்கள் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது "முதலில் இதுபோன்ற லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்கள் வந்தால் தகுந்த ஆதாரத்துடன் இணையத்திலோ அல்லது நேரிலோ சைபர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம். இதுபோன்ற வசூல்காரர்களை கண்டு பயப்பட தேவையில்லை. நம்முடைய பயம்தான் அவர்களின் முதல் ஆயுதம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், வடிவழகிய நம்பி கூறும்போது, "ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு பிரைவசி என்பதே இல்லை. நீங்கள் எந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், கூகுள் கணக்கில் இணைக்க வேண்டும். ஏற்கெனவே நமது செல்போனில் வைக்கப்பட்டிருக்கும் எண்கள், கூகுளின் இமெயில் முகவரியில் சேமித்து வைத்திருப்போம். அந்த தகவலைதான், ஆப் மூலம் லோன் வழங்கும் நிறுவனங்கள் திருடி, உங்கள் உறவினர்களுக்கு கால் செய்து தன்மானத்தை உரசிப் பார்க்கின்றன. நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெறும்போது, பத்திரத்தில் உள்ளவற்றைப் படித்துப்பார்த்து கடன் வாங்குவீர்கள், கையெழுத்து போடுவீர்கள். அதில், சில தரவுகள் உங்களுக்கு திருப்தியில்லை என்றால் கடன் பெறமாட்டீர்கள். ஆனால், ஆப்-பில் நீங்கள் Agree என்ன அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். எனவே, உங்களை அவர்களின் சட்டதிட்டத்துக்கு கட்டாயமாக வற்புறுத்துகிறார்கள். முதலில், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். பின்பு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் உங்கள் செல்போனில் உள்ள புகைப்படங்களைக் கூட எடுக்கலாம். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments