`எங்கேயும் எப்போதும்' படத்தில் நம் பக்கத்து வீட்டு பையன் போல திரையில் அறிமுகமானவர் சர்வானந்த். சின்னதொரு இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் வருகிறார். அமலாவின் மகனாக `கணம்' படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி திரைப்படங்களிலும் நம்பிக்கை முகமாக ஜொலிக்கும் சர்வானந்திடம் பேசினேன்.
``நீங்க சினிமாத்துறைக்கு வந்து 20 வருஷம் ஆகப்போகுது; எப்படி இருக்கு திரைத்துறை அனுபவம்?"
''நிஜம்தான். 20 வருஷமா நான் சினிமாவில் இருக்கக் காரணமான ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக்கறேன். நான் சரியா வேலை பார்க்கலைனாலும் என்னை திட்டாமல், எனக்கு அறிவுரைச் சொல்லி, என்னை அரவணைச்சிருக்காங்க. நல்ல ஒர்க்கை பாராட்டியிருக்காங்க. ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு லுக் பண்ண வச்சிருக்காங்க. நான் இதுவரை விதவிதமான கேரக்டர்கள் பண்ணினதுக்கு அந்தந்த பட இயக்குநர்கள்தான் காரணம். அவங்க எல்லாருக்குமே இந்த நேரத்துல நான் நன்றி சொல்ல கடன்பட்டியிருக்கேன்.
`கணம்' படம் பண்ண என்ன காரணம்.?
''இதுவரை நிறைய ஜானர்கள்ல படம் பண்ணியிருக்கேன். இப்பத்தான் சயின்ஸ் ஃபிக்ஷன் பண்றேன். எனக்கு விருப்பமான ஜானர் சயின்ஸ் ஃபிக்ஷன்தான். டைம் டிராவலும் இருக்கு. இப்படி ஒரு ஸ்கிரிப்ட் எழுதுறது சாதரணமானதல்ல. அமலா மேமோட நடிச்சது அதிர்ஷ்டம்தான் சொல்லணும். நீங்க எதிர்காலத்தை பத்தியோ, கடந்த காலத்தை பத்தியோ எண்ணவேணாம். இந்த கணத்துல ஒழுங்கா உங்க வேலையை செய்தாலே, எல்லாமே சிறப்பா அமையும்னு உணர்த்துறதுதான் இந்த படத்தோட கதை. இந்தப் படத்தோட இயக்குநர் ஶ்ரீகார்த்திக் என்கிட்ட கதை சொல்லும்போதே, அம்மா கதாபாத்திரத்தை அவ்வளவு ரசிச்சு சொன்னார். அம்மாவாக யார் நடிக்கப் போறாங்கனு கேட்டேன். அமலா மேம்னு சொன்னதும், ஆச்சரியமாகிடுச்சு. ஏன்னா, அவங்க நேர்ல வந்து நின்னாலே, சட்டுனு நம்மளையும் அறியாமல் அம்மான்னு சொல்லிடுவோம். அப்படி ஒரு முகம். செட்ல அவங்க வந்து நிற்கும் போதும் எல்லாருமே `அம்மா'னு தாங்க சொல்லுவாங்க. ஒரு பாசிட்டிவ் வைப் அவங்ககிட்ட இருக்கும். இந்தப் படத்துல அமலா மேம் தவிர, நாசர், ரீத்து வர்மா, எம்.எஸ்.பாஸ்கர்னு நிறைய பேர் இருக்காங்க.
நீங்க நல்லா தமிழ் பேச ஆரம்பிச்சிடீங்களே?
''ஆமாங்க. கத்துகிட்டேன். இன்னொரு ஆச்சரியம், தமிழிலும் நானே பேசியிருக்கேன். இந்த படம் தெலுங்கிலும் வருது. ஆனா, அங்கே ஈஸியா டப்பிங் முடிச்சிட்டேன். ஆனா, ஸ்பாட்டுல பெரிய டயலாக் இங்கே கொடுக்கறப்ப கொஞ்சம் உதறலா இருக்கும். பிராம்டிங் பேச எனக்கு வராது. அதனாலேயே சொந்தமா பேசினேன். படத்துல என்னோட நடிக்கற சதீஷும், ரமேஷ் திலக்கும் தான் எனக்கு டயலாக் கத்துக் கொடுப்பாங்க. சென்னையில அவங்களோட வெளியே சுத்தியிருக்கேன். மறக்கமுடியாத அனுபவங்களை இந்தப் படம் கொடுத்திருக்கு''.
from Latest News
0 Comments