Ticker

6/recent/ticker-posts

Ad Code

புதுச்சேரி: ``எங்கள் அரசின் பார்ட்னரைப் போல செயல்படுகின்றனர்!” – திமுக-வை விளாசும் அதிமுக

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஜனநாயகத்தில் சட்டமன்ற நடவடிக்கையை மேன்மைபடுத்த வேண்டியது எதிர்க்கட்சிகளின் பணி. ஆனால் புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வும், காங்கிரஸும் தங்களது கடமையிலிருந்து தவறியதால் சட்டமன்றத்தின் நடவடிக்கை கேளிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை எடுத்துக்கூறக்கூடிய ஒரு வாய்ப்பாகத்தான் சட்டமன்றத்தை பயன்படுத்துகின்றனர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதி, கடந்தகால ஆட்சியின் தவறுகள், அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பது, வருவாய் பெருக்கம் போன்றவற்றைப் பற்றி சிறிதாகக்கூட அங்கு விவாதிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய தி.மு.க உள்ளிட்ட கட்சியினர், எங்கள் அரசின் பார்ட்னர் போல செயல்படுகின்றனர். எங்கள் ஆட்சியில் எந்த ஒரு சிறு தவறும் நடைபெறவில்லை என்பதற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களின் மௌனமே சாட்சி. ஆளும் கூட்டணியில் உள்ள பா.ஜ.க-வை சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள், தாங்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் என்பதைக்கூட மறந்து சட்டமன்றத்திற்குள் பல விஷயங்களை வெளிப்படையாக பேசுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள தி.மு.க எங்கள் அரசுக்கு அனைத்து விஷயத்திலும் வெண்சாமரம் வீசுகின்றனர்.

இது ஒரு கேவலமான நிலைபாடு. எங்கள் அரசுக்கு தேவைப்பட்டால் பக்கபலமாக இருப்போம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சரை பார்த்து தி.மு.க கூறுவது ஏற்புடையதா என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்தான் தெளிவுபடுத்த வேண்டும். இது மக்களுக்கான ஆட்சியில்லை என்றும், முதலாளிகளுக்கான ஆட்சி என்றும் தி.மு.க எம்.எல்.ஏ-வும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கூறுகிறார். நம் நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 9 சிறிய மாநிலங்கள் ஜி.எஸ்.டி வரியை 20 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளன. ஆனால் ஜி.எஸ்.டி வரியை 20 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்த வேண்டும் என தி.மு.க-வினர் கூறுகின்றனர்.

புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவா

இப்படி மாற்றினால் குறைந்தது 500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படும். குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் மாநில பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தி.மு.க-வினரின் செயல்பாடு உள்ளது. புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவர்கரை நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ளும் தி.மு.க, கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனமான செயல்பாடாக உள்ளது. நிர்வாகரீதியில் கிராமப்பகுதிகள் வளர்ச்சியடைய தி.மு.க எதிராக உள்ளது. நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை நீதிமன்றத்தை நாடி தடுத்து நிறுத்தியது தி.மு.க-தான்.

ஆனால் அவர்களே தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பேரவையில் கூறியிருக்கின்றனர். இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க-வின் நிலைபாடு தான் என்ன? மக்கள் கொடுத்துள்ள எதிர்க்கட்சி அந்தஸ்தை உணர்ந்து உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படாமல், தங்களுடைய தனிப்பட்ட வர்த்தக வியாபார தொழிலுக்காக முதல்வரிடம் மண்டியிட்டு நிற்கிறது தி.மு.க. மாநில அந்தஸ்து பெறுதல், நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்த்தல், மத்திய அரசிடமிருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லிக்குச் சென்று நிதி மற்றும் மாநில அந்தஸ்து பெற பிரதமரை முதல்வர் வலியுறுத்த வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் அ.தி.மு.க என்றைக்கும் துணை நிற்கும். மாநில அந்தஸ்து பற்றி பேச தி.மு.க-வுக்கும், காங்கிரஸுக்கும் எந்த அருகதையும் இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நீண்டகாலம் கூட்டணி ஆட்சியில் இருந்த தி.மு.க-வும், காங்கிரஸும் ஏன் மாநில அந்தஸ்து வழங்கவில்லை? இன்றுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காததற்குக் காரணம் தி.மு.க-வும், காங்கிரஸும்தான்” என்றார்.



from Latest News

Post a Comment

0 Comments