ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் பசுமாடு கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுவதாக, ஹரியானா மாநில காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, காவல்துறை குழு மற்றும் உள்ளூர் பசு பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகாலை 4 மணியளவில், குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) விரைவுச் சாலையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மாடு கடத்தல்காரர்கள் லாரியில் அதிவேகமாக மாடுகளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட காவல்துறை வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் கடத்தல்காரர்கள் காவலர்களைக் கண்டதும் இன்னும் வேகமாகச் சென்றனர். அதைத் தொடர்ந்து, காவலர்களும் விடாமல், அவர்களை 4-5 கிமீ துரத்திச் சென்று மாடு கடத்தல்காரர்களைக் கைது செய்ததாக ஹரியான காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. காவல்துறை கடத்தல் காரர்களைத் துரத்திச் செல்லும் வீடியோ OTV News தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இரண்டு வாகனங்களில் மொத்தம் 26 பசுமாடுகள் மீட்கப்பட்டுப் பசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த கடத்தல் தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
இந்த கடத்தல் தொடர்பாக காவல்துறை, "குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் பஞ்ச்கான் சௌக் வழியாக நூஹ் நகருக்குச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் ஆரிப், இம்ரான், ஷோகீன், முஸ்தாப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டுக் கைத்துப்பாக்கி, டிரக் மற்றும் பிக்-அப் வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பரிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் இருந்து சுமார் 26 பசுக்கள் மீட்கப்பட்டுப் பசு காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
விசாரணையின் போது, காஜியாபாத்தில் இருந்து கால்நடைகளைக் கொண்டு வருகிறோம் என்று நால்வரும் எங்களிடம் தெரிவித்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 429 மற்றும் ஹரியானா கவுவன்ஷ் சன்ரக்ஷன் மற்றும் கௌசம்வர்தன் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
from Latest News
0 Comments